என்ன பாவம் செய்தார்கள் இடைநிலை ஆசிரியர்கள்? - முனைவர் மணி.கணேசன் - kalviseithi

May 28, 2019

என்ன பாவம் செய்தார்கள் இடைநிலை ஆசிரியர்கள்? - முனைவர் மணி.கணேசன்


ஆசிரியர்களை இந்த சமூகம் குழந்தைகளின் இரண்டாவது பெற்றோர் என்றே அழைக்கின்றனர். குறிப்பாக, தொடக்கநிலையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியப் பெருமக்களுக்குத்தான் இந்த பெருமை முற்றிலும் பொருத்தமானதாக அமையும். முதல் வகுப்பில் சேர்க்கப்படும் பச்சிளம் குழந்தைகளைக் கையாளுதல் என்பது அவ்வளவு எளிதான செயலல்ல. மிகுந்த பொறுமையும் தாய்மை உணர்வும் அனைவருக்கும் அவசியம். குழந்தையின் உடல் வளர்ச்சி, உள்ள வளர்ச்சி, சமூக வளர்ச்சி ஆகியவை சீராகவும் செம்மையாகவும் செழுமையாகவும் வளர இடைநிலை ஆசிரியர்களின் பங்களிப்புகள் அளப்பரியவை.

அத்தகைய இடைநிலை ஆசிரியர்களின் தாயுள்ளத்தையும் நாட்டிற்கு தேவையான குடிமைப் பண்புகளைக் குழந்தைகளிடையே போற்றி வளர்க்கப் பாடுபடும் அருங்குணத்தையும் ஒவ்வொருவரும் எண்ணிப்பார்க்க முயலுதல் நல்லது. பொதுவாகவே குழந்தைகள் விளையாட்டின்மீதும் செயல்பாட்டின்மீதும் அதீத பற்று கொண்டவர்களாகவே சுட்டித்தனம் மிக்கவர்களாக இருப்பர். வயது முதிர்வு மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றைப் புறந்தள்ளி இடைநிலை ஆசிரியர்கள் அக்குழந்தைகளின் மனம் விரும்பும் மற்றுமொரு குழந்தையாக நெகிழ்வுற்று கற்றலையும் கற்பித்தலையும் கலையாக வார்த்து இயல்பாக உருவாக்குதல் என்பது தலைசிறந்த கல்விச் சேவையாகும். 

அத்தகு, தம் பணியைத் தொழிலாக அல்லாமல் தொண்டாக மேற்கொண்டு வரும் இடைநிலை ஆசிரியர்களை அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவது வேதனையளிக்கத்தக்கது. மத்திய அரசுக்கு இணையாக நியாயமாகக் கிடைக்க வேண்டிய அடிப்படை ஊதியப் பலன்களையும் படிகளையும் கடந்த இரு ஊதியக் குழுவிலும் முறையாக வழங்க மறுத்து தொடர் ஊதிய இழப்பை ஏற்படுத்தி வருவதென்பது அரசுப் பணியாளர்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான விரோத நடவடிக்கைகளாகும். ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாத அவலநிலையில் தான் தமிழ்நாட்டில் போக முடியாத, போக்குவரத்து வசதியில்லாத, போதுமான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் ஏதுமற்ற, பாதுகாப்பு வசதிகளற்ற குக்கிராமங்களில் குழந்தைகளின் பொருட்டு, விரும்பியே உழன்று வருகின்றனர். இதில் பெண் ஆசிரியைகளின் நிலை சொல்லவொணாதது. 

கடந்த இரு ஊதியக் குழுக்களிலும் காணப்பட்ட இவர்களுக்கான ஊதிய முரண்பாடுகள் மற்றும் இழப்புகள் ஆகியவற்றைக் களைய அவ்வக்கால மாநில அரசுகளால் நியமனம் செய்யப்பட்ட மூன்று நபர்கள் குழு மற்றும் ஒரு நபர் குழு போன்றவற்றால் உரிய, உகந்த பலனின்றிப் போனது வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சிய கண்துடைப்பு நடவடிக்கைகளாக அமைந்திருந்தன. பல்வேறு கட்ட அறவழி போராட்டங்களும் கூட்டு நடவடிக்கைகளும் நீதிக்கான பயணங்களும் அதன்பொருட்டு நிகழும் பேரிடர்களும் முடிவின்றித் தொடரும் பயணங்களாகவே காணப்படுகின்றன. இடைநிலை ஆசிரியர்களுக்குத் தொடர்ந்து அநீதி இழைப்பதில் இதுவரையிலும் ஆண்ட, ஆளும் அரசுகளுக்கிடையில் ஒரு வேறுபாடும் இல்லாதது துர்பாக்கியம் எனலாம்.

பதவி உயர்வின்போது கூடுதல் பணப்பலன்கள் கிடைப்பதை உறுதி செய்தல் தலையாய கடமை என்பது நியதி. இது இங்குள்ள அனைத்து பணியாளர்களுக்கும் பொருந்தக்கூடிய ஒன்றாகவே உள்ளது. பாவப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் பதவி உயர்வின்போது, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நிலையில், தாம் ஏற்கனவே பெற்று வரும் சொற்ப ஊதியத்தில் அரசுப் பணியாளர்கள் விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள கூடுதல் பணப்பலன்கள் ஏதுமின்றி ஊதிய இழப்பு அல்லது அதே ஊதியம் அல்லது மிகவும் குறைவான ஊதியப் பலனைத் தண்டனையாகப் பெறும் அவலம் கொடுமையானது. இதனால், பல மூத்த இடைநிலை ஆசிரியர்கள் தகுதியிருந்தும், விருப்பம் இருந்தும் ஊதிய இழப்பை முன்னிட்டு நியாயமாகக் கிடைக்கும் உயர்பதவிக்கான பதவி உயர்வைப் புறக்கணித்து வரும் போக்குகள் அதிகரிக்கத் தொடங்கி விட்டன. கடைநிலையாக இருக்கும் இடைநிலை ஆசிரியப் பணியிடத்திலேயே பதவி உயர்வைக் காட்டிலும் சற்று கூடுதல் பலனளிக்கக்கூடிய தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை காலத்தைத் துய்க்கும் இழிநிலையானது அவசர அவசியம் கருதி ஆட்சியாளர்கள் மற்றும் உயர் அலுவலர்களால் களையப்படுதல் இன்றியமையாதது. 

மேலும், பட்ட காலிலே படும் என்றும் கெட்ட குடியே கெடும் என்பதற்கேற்ப, அண்மையில் தொடக்கக்கல்வித் துறையில் காணப்படும் உபரி இடைநிலை ஆசிரியர்களைப் புதிதாகத் தொடங்கவிருக்கும் மழலையர் பள்ளிகள் என்றழைக்கப்படும் அங்கன்வாடி மையங்களில் முன் மழலையர் வகுப்புகளுக்கான பயிற்றுநர்களாகப் பதவியிறக்கம் செய்ய முற்படும் முயற்சிக்கு நீதிமன்றமும் பச்சைக்கொடி காட்டியிருப்பது வேதனையான நிகழ்வாகும். 

இதன்காரணமாக, அதற்கென பயிற்சி பெற்றுக் காத்திருக்கும் வேலைவாய்ப்பு அற்ற இளைஞர்களின் கனவு பறிபோகும் நிலை ஒருபுறம். மற்றொருபுறத்தில் அரசுப்பள்ளிகளில் வகுப்புக்கு ஓராசிரியர் என்ற பன்னெடுங்காலமாக ஒலித்துக் கொண்டிருக்கும் நெடிய முழக்கமானது மாண்டு போகும் பரிதாப நிலை. இதுமாதிரியான கொடும் நடவடிக்கைகள் வேறெந்த துறையில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் நிகழ்ந்திடாத ஒன்று. ஏற்கனவே ஊதிய முரண்பாடுகளாலும் தொடர் இழப்புகளாலும் துவண்டு கிடக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, இப்புதிய அறிவிப்பு மேலும் அத்தகையோருக்கு மிகுந்த மனவலி உண்டாக்கும் அழித்தொழிப்பு செயலாகும் என்பது மிகையல்ல. 

கடைசியாக கண்ணீர் தழும்ப மனித சமூத்திடம் ஒரேயொரு கேள்வி:

"என்ன பாவம் செய்தார்கள் இந்த இடைநிலை ஆசிரியர்கள்?"

16 comments:

 1. The same question rising in my mind also.As that most of them tet passed appointed teachers.

  ReplyDelete
 2. என்ன பாவம் செய்தார்கள் அங்கன்வாடி குழநதைகள்

  ReplyDelete
 3. அங்கன்வாடியில் உள்ள பழைய ஆசிரியர்களுக்கு என்ன வேலை கொடுக்கப்போறிங்க

  ReplyDelete
 4. இடைநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு கொடுத்தாலும் கொடுப்பார்கள்..

  ReplyDelete
 5. என்ன பாவம் செய்தார்கள் இவர்களை விட பல மடங்கு சம்பளம் குறைவாய் வாங்கும் தனியார் இடைநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் ?

  ReplyDelete
  Replies
  1. அம்பானி பொண்டாட்டி மாதிரி இருக்க உன் பொண்டாட்டி ஆசைப்பட கூடாது.....ஏன்னா நீ அம்பானி இல்லை.......


   அவங்க அவங்க நேரம் அவ்வளவுதான்....அப்படி எடுக்கணும்......

   எப்போ பாரு வெம்பரீங்க......

   நீங்களும் முயற்சி செய்யுங்கள்.....

   அப்படி பார்த்தால் படிக்காத அரசியல் வாதி பல கோடி சம்பாதிக்கிறான்......


   அவனை மாதிரி ஆயிடுவீங்க லா.......

   இப்படி பட்ட மனநிலையில் இருந்தால் உள்ளதும் போயிடும்........
   இருப்பதில் சந்தோஷமாய் வாழுங்கள்......

   Delete
  2. TET தேர்வில் ல அதிக மதிப்பெண்பெற துப்பில்லை.

   Delete
 6. ஆசிரியப்பணி என்றாலே அது பெண்களுக்கான பணி என்றாகிவிட்டது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரிய ஆண் பெண் விகிதமே இதற்குச் சான்று. சத்தமில்லாமல் ஆசிரியப் பணியில் இருந்து ஆண்களை வெளியேற்றும் செயல் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இருக்கும் சொற்ப ஆண் ஆசிரியர்களும் மாணவர்களை அதட்டி மிரட்டி அடித்து உருட்டிப் படிக்க வைக்கும் ட்ரில் மாஸ்டர்களாக மாறி வருகின்றனர்.

  ReplyDelete
 7. May 28, 2019 at 5:10 PM
  கல்லூரி பேராசிரியர் பணிகளுக்கு தகுதி தேர்வு தேவை இல்லை. போட்டி தேர்வுகளும் தேவை இல்லை. ஆனால் மாணவனுக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கும் டெட், நீட் என தகுதி தேர்வுகள் அவசியம். pH.d இருந்தால் எளிதில் கல்லூரி பேராசிரியர் ஆகலாம். செட் நெட் தேவையில்லை. pH.d யம் எளிதில் பணம் இருந்தால் முடிக்க முடியும். இந்த வழியை பின்பற்றி பேராசிரியர் ஆகுங்கள்.சிறப்பான கல்வி கொள்கை.

  ReplyDelete
  Replies
  1. 2009 இக்கு முன் PHDமுடித்தவர்களுக்கு மட்டுமே நீங்கள் கூறியது நண்பரே......


   அதற்கு பின் PHD முடித்து இருந்தாலும் தகுதி தேர்வு கட்டாயம் இதை முதலில் தெரிந்து பதிவிடுங்கள்.....

   இனி PHD கூட குப்பையே...

   Delete
 8. KATTAYAM Phd pattam kuppai enttu arivikka vendum onntukkum othavathavargal panam koduthu phd vangivittu diocese collegil arasu sampalam pettu konduirikirargal.

  ReplyDelete
 9. 18th july2018 UGC regulations ஐ UGC.ac.in ல் (பக்கம் எண்.58)படித்து பார்த்து பல விஷயங்கள் தெரிந்தும், தெரியாத தங்களைப் போன்ற பலருக்கும் இதை நம்ப வைக்க விரும்பும் எளிய கிராமத்து மனிதன் நான். பல பேராசிரியர்களின் உறவுகள் வாரிசுகள் பி.எச்டி மூலம் தகுதி தேர்வு மற்றும் போட்டி தேர்வுகள் கூட இல்லாமல் அதிக சம்பளம் பெறும் பேராசிரியர் பணியை பெற்றுள்ளார் கள்; பெற்றும் வருகிறார்கள். புரிந்து கொண்டவர்கள் இந்த வழியை பின்பற்றி எளிதாக இப்பணிக்கு வரலாம். எல்லாருக்கும் இதை தெரியச்செய்து தாங்களும் பயன்பெற ஆவல். மற்ற படி டெட்,நீட் என புலம்பி வாழ்க்கையை வீணாக்க வேண்டாம்.

  ReplyDelete
  Replies
  1. இப்பொழுது முடியாது......

   Delete
 10. தனியார் பல்கலையில் சொற்ப சம்பளத்தில் பணி செய்ய லாம்

  ReplyDelete
 11. 18TH July 2018 UGC regulation act ஐ படித்து பார்க்கவும். தமிழக அரசிடம் RTI மூலம் பெற்று தெரிந்து கொள்ளுங்கள். ந

  ReplyDelete
 12. https://www.ugc.ac.in/pdfnews/4033931_UGC-Regulation_min_Qualification_Jul2018.pdf

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி