சுட்டெரிக்கும் வெயில் - மாணவர்களுக்கு நீர்ச்சத்து குறைவால் நோய்கள் உருவாகும் ஆபத்து : கண்டுகொள்ளுமா கல்வித்துறை? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 20, 2019

சுட்டெரிக்கும் வெயில் - மாணவர்களுக்கு நீர்ச்சத்து குறைவால் நோய்கள் உருவாகும் ஆபத்து : கண்டுகொள்ளுமா கல்வித்துறை?


தமிழகத்தில் வரலாறு காணாத வெயிலும், வறட்சியும், குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் வெயில் பாதிப்பும், குடிநீர் பிரச்னையும் கடுமையாக உள்ளது. அக்னி நட்சத்திர நாட்களில் இருந்த வெயிலின் அளவைவிட, தற்போது வெயில் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் வெயில் தொடர்ந்து சுட்டெரிக்கிறது. பகலில் வெளியில் நடமாட முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறக்கும் தேதியை ஒத்தி வைக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் அரசுக்கு வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பள்ளிகள் திறக்கப்பட்டு 15 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், பெரும்பாலான பள்ளிகளுக்கு இன்னும் புத்தகங்கள் சென்று சேரவில்லை. சீருடைகள் கிடைக்கவில்லை.

மேலும் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களுக்கு குடிநீர் இல்லை. கழிப்பறைகளை பயன்படுத்தவும் தண்ணீரில்லை. காற்றோட்டம் இல்லாத, மின்விசிறி வசதியில்லாத வகுப்பறைகளில், சுட்டெரிக்கும் வெயில், அனல் கொடுமையால் மாணவர்கள் தவிக்கின்றனர். குறிப்பாக பெண்கள் பள்ளிகளில் தண்ணீரில்லாமல் மாணவிகள் படும் துயரம் அதிகம். ஆயிரக்கணக்கான மாணவிகள் படிக்கும் அரசு பள்ளிகளில், கழிப்பறைகளை பராமரிக்க தண்ணீர் வசதி செய்து தர முடியாமல் பள்ளி ஆசிரியர்கள் தவிக்கின்றனர். தினமும் லாரிகளில் தண்ணீர் கொண்டுவந்து விநியோகம் செய்ய அரசு பள்ளிகளுக்கு போதிய நிதி வசதியில்லை. சுட்டெரிக்கும் அனல் காற்றில் தகிக்கும் மாணவர்கள், குடிக்க தண்ணீரின்றி தாகத்தில் தவிக்கின்றனர். கடந்த சில நாட்களாக அனல் காற்றின் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. எனவே, நகரப் பகுதிகளைப் போல, கிராமப்பகுதியில் உள்ள பள்ளிகளிலும் இதே கொடுமையான நிலைதான் உள்ளது. கிராமப்புற பள்ளிகளிலும் தண்ணீர் கேன் விலைக்கு வாங்கி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

சத்துணவு சாப்பிடும் மாணவர்கள், தங்களுடைய உணவு தட்டுகளை கழுவி சுத்தப்படுத்த தண்ணீரில்லாமல், சாப்பிட்ட தட்டு, டம்ளர்களை அப்படியே வீட்டுக்கு கொண்டு செல்லும் நிலை பல பள்ளிகளில் காணப்படுவதாக சத்துணவு அமைப்பாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். கடந்த 15 நாட்களாக மாணவர்கள் போதுமான குடிநீர் இல்லாமல், குறைந்த அளவு தண்ணீரை குடிக்கும் நிலை இருப்பது, மாணவர்களின் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கவலை ஏற்பட்டுள்ளது. நீர்ச்சத்து குறைவு, மாணவர்களின் நலனை வெகுவாக பாதிக்கும். நீர்ச்சத்து குறைவால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அதிக வெப்பம் காரணமாக மாணவர்களுக்கு வியர்வை வெளியேறி இதய படபடப்பு, மயக்கம், கோபம், மனக்குழப்பம் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, மாணவர்களின் நலன் கருதி, பள்ளிகளுக்கு தேவையான குடிநீர் வசதியை போர்க்கால அடிப்படையில் செய்து தர வேண்டும். பள்ளிகளில் கழிப்பறைகளை பயன்படுத்த தேவையான தண்ணீரை, லாரிகளில் விலை கொடுத்து வாங்கியதாவது விநியோகம் செய்ய பள்ளிக்கல்வித்துறையும், மாவட்ட நிர்வாகமும் ஏற்பாடு செய்ய வேண்டும் என மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி