குரூப் 1 தேர்வை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் டிஎன்பிஎஸ்சி தனது பதில் மனுவை உயர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது.கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குரூப் 1 தேர்வில் 1 லட்சத்து 68 ஆயிரம் பேர் தேர்வுஎழுதினர். இதற்கான முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது.
முன்னதாக, கேட்கப்பட்ட 200 கேள்விகளுக்கு சரியான விடைகளைத் தெரிந்துகொள்ளும் வகையில் வெளியான மாதிரி விடைத்தாளில் இருந்த 18 விடைகள் தவறானவை என்று புகார் எழுந்தது.இதையடுத்து, இந்த 18 தவறான விடைகளை மறுமதிப்பீடு செய்யாமல் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என சென்னையைச் சேர்ந்த விக்னேஷ் உள்ளிட்ட தேர்வாளர்கள் டிஎன்பிஎஸ்சிக்கு கோரிக்கை மனு அளித்தனர்.இந்தக் கோரிக்கைகளை ஏற்காத டிஎன்பிஎஸ்சி ஏப்ரல் மாதம் 3-ம் தேதி முதல்நிலைத் தேர்வு முடிவுகளை வெளியிட்டது. இதனை எதிர்த்து, விக்னேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.அப்போது கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என டிஎன்பிஎஸ்சி தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டது.மேலும், இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
டிஎன்பிஎஸ்சியின் இந்த விளக்கத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த குரூப் 1 தேர்வில் இது போன்ற குளறுபடிகள் நடப்பதை அனுமதிக்க முடியாது. ஜூன் 17-ம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.இந்நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டிஎன்பிஎஸ்சி துணை செயலாளர் தாரா பாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தார்.
அவரது பதில் மனு விவரம் வருமாறு:
மாதிரி விடைத்தாளில் இருந்த 96 கேள்விகளுக்கு தவறான பதில்கள் அளித்துள்ளதாக 4,390 விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்திற்கு மனு அளித்தனர். இவற்றை ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது.மாதிரி விடைத்தாளில் 12 கேள்விகளுக்குத் தவறான விடைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் 5 கேள்விகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சரியான விடைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.7 கேள்விகளுக்கான மாதிரி விடைகள் தவறானவை எனவும் நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது.
இந்த அறிக்கையின் அடிப்படையிலேயே மனுதாரர் உள்ளிட்டோருக்கு கூடுதலாக 6 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது.நிபுணர் குழுவின் இந்த அறிக்கையை இணையதளத்தில் வெளியிட முடியாது. இது போன்ற அரசுப் பணியாளர் தேர்வின் மதிப்பெண்களை இயந்திரத்தனமாக வெளியிக் கூடாது என ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் குரூப் 1 தேர்வை ரத்து செய்யக்கோரி விண்ணப்பதாரர் விக்னேஷ் தொடர்ந்த வழக்கு மீண்டும் ஜூன் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Second year Pg or bed waiting for results candidates call to me sir 9600640918
ReplyDelete