தனியார் பள்ளிகளுக்கு இணையாக வசதிகள் செய்து கொடுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் - kalviseithi

Jul 13, 2019

தனியார் பள்ளிகளுக்கு இணையாக வசதிகள் செய்து கொடுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள்


தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்புடன், ஆசிரியர் கல்வியும் பயின்றுள்ளனர். அதே போல் சமீபத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே ஆசிரியர்களாக பணியாற்ற முடியும்.அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தகுதி படைத்தவர்களாக இருந்தபோதிலும், பள்ளிகளில் உள்ள உள்கட்டமைப்பு, ஆசிரியர் பற்றாக்குறை, பள்ளிக்கு சென்று வருவதில் உள்ள சிரமம் உள்ளிட்ட பல்வேறு வசதி குறைபாடுகளால்தான் பல பெற்றோர்கள், அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருந்தாலும், அவர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளிலேயே சேர்க்கின்றனர். சொந்த ஊரில் அரசு பள்ளி இருந்தபோதிலும், சுமார் 20 கி.மீ தூரமுள்ள தனியார் பள்ளிக்கு வேனில் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே விரும்புகின்றனர். வாகனங்களில் பள்ளிக்கு சென்று வருவதில் உள்ள சிரமம், மாதந்தோறும் பள்ளி, வாகனக்கட்டணம் உள்ளிட்ட செலவினங்கள் இருந்த போதிலும், உள்ளூரில் இயங்கும் அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்புவதில்லை.

இதற்கு காரணம் அரசு பள்ளிகளில் பராமரிப்பு இல்லாத வகுப்பறை, சுகாதாரமற்ற குடிநீர், பற்றாக்குறையான ஆசிரியர்கள், பள்ளிக்கு குழந்தைகள் நடந்தே சென்று வர வேண்டிய நிலை போன்றவைதான். இதுபோன்ற காரணங்களால்தான், அரசு பள்ளிகளில் நன்கு படித்த திறன்மிக்க ஆசிரியர்கள் இருந்தபோதும், அவர்களின் கல்வி போதிக்கும் திறனை நம்பி, பெற்றோர் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதில்லை. இதனால் ஒரு காலத்தில் நிரம்பி வழிந்த அரசு பள்ளிகளின் வகுப்பறைகள், தற்போது மாணவ, மாணவியர் இல்லாததால், காற்றாடுகின்றன.இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பலர் தங்கள் சொந்த முயற்சியால், தங்கள் பள்ளியில் பணியாற்றும் சக ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்காக தங்களது நண்பர்கள், நன்கொடையாளர்களை அணுகி, தங்கள் பள்ளியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்திக் கொள்ளவும், மாணவ, மாணவியருக்கு தேவையான தனியார் பள்ளிகளுக்கு நிகரான கல்வி உபகரணங்களை வழங்கவும் நிதி பெற்று, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.

இவைகள் அனைத்தும் அரசு பள்ளிகளிலேயே கிடைப்பதால், தற்போது பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.ஒரு பள்ளியின் செயல்பாட்டை பார்த்து அடுத்தடுத்த பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும், தற்போது தாங்கள் பணிபுரியும் பள்ளிகளின் வசதிகளை நன்கொடையாளர்கள் மூலம் மேம்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.ஆசிரியப்பணி அறப்பணி என்று கூறும் அளவிற்கு, அரசு பள்ளியில் பணியாற்றும் பல ஆசிரியர்கள், தங்கள் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு தனியார் பள்ளிகளுக்கு நிகரான வசதிகளை கொடையாளர்கள் மூலம் பெற்று வழங்கி வருகின்றனர். ஒரு சில ஆசிரியர்கள் கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக தங்கள் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு இலவச வாகன வசதி கூட செய்து கொடுத்துள்ளனர். இதுபோன்ற ஆசிரியர்களின் செயலால் அரசு பள்ளிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதுபோன்ற பள்ளிக்கு தேவையான வசதிகளை நன்கொடையாளர்கள் மூலம் செய்து கொடுக்கும் ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகளுக்கு தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து அப்பள்ளிகளை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் விரும்புகின்றனர்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி