வேளாண்மைப் பட்டப்படிப்புச் சேர்க்கையில் புறக்கணிக்கப்படும் +2 வேளாண்மைத் தொழிற் பாடப்பிரிவு மாணவர்கள் - kalviseithi

Jul 13, 2019

வேளாண்மைப் பட்டப்படிப்புச் சேர்க்கையில் புறக்கணிக்கப்படும் +2 வேளாண்மைத் தொழிற் பாடப்பிரிவு மாணவர்கள்

குலக்கல்வித் திட்டத்தை விட தொழிற்கல்வித்திட்டம் மோசமானதாக இருக்கலாமா? 
-----------------------------------------------------------------
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இளம் அறிவியல் - வேளாண்மை (B.Sc Agriculture), இளம் அறிவியல் – தோட்டக்கலை (B.Sc Horticulture) போன்ற பட்டப்படிப்புகளை நடத்தி வருகிறது. மருத்துவப் படிப்புக்கு அடுத்த நிலையில் இப்படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்களிடம் போட்டி நிலவுகிறது.

தமிழ்நாட்டில் மேல்நிலைக் கல்விப் படிப்பில் (+2) வேளாண்மைச் செயல்பாடுகள் (HIGHER SECONDARY – AGRICULTURAL PRACTICES -  VOCATIONAL STREAM) தொழிற் பாடப்பிரிவு உள்ளது. பெரும்பாலும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இத் தொழிற்கல்விப் பாடப்பிரிவு உள்ளது. இப்பாடப்பிரிவில் பயின்ற  மாணவர்களில் 1630 பேர் இக்கல்வியாண்டில்  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் நடத்தும் பட்டப்படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளனர்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் 14 உறுப்புக் கல்லூரிகளிலும் 27 தனியார் சுயநிதி இணைப்புக் கல்லூரிகளிலும் வேளாண்மை சார்ந்த 6 இளம் அறிவியல் படிப்புகளும், 4 இளம் தொழில்நுட்பப் படிப்புகளும் நடத்தப்படுகின்றன. இப்படிப்புகளுக்கு பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகளில் 1225 மாணவர்களும் தனியார் சுயநிதி இணைப்புக் கல்லூரிகளில் 3995 மாணவர்களும் சேர்க்கப்படுகின்றனர். ஆனால்மாணவர் சேர்க்கையில் மேல்நிலைக் கல்வி (+2)  வேளாண்மைச் செயல்பாடுகள்  தொழிற்பாடப்பிரிவில் பயின்ற மாணவர்களுக்கு பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகளில்  இளம் அறிவியல் – வேளாண்மை படிப்பில் 31 இடங்கள்,  இளம் அறிவியல் – தோட்டக்கலை படிப்பில் 8 இடங்கள், இளம் அறிவியல் – வனவியல் படிப்பில் 2 இடங்கள், இளம் தொழில்நுட்பம் – வேளாண்மைப் பொறியியல் படிப்பில் 3 இடங்கள் என நான்கு படிப்புகளுக்கு மொத்தமாகவே 44 இடங்கள்  மட்டுமே ஒதுக்கப்படுகின்றன. இவ்விடங்களை நிரப்புவதில் இட ஒதுக்கீட்டு விதிமுறை பின்பற்றப்படமாட்டாது என்றும் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் பல்கலைக்கழக ஒதுக்கீடு மூலம் நிரப்பப்படும் 65 சதவீத இடங்களுக்கும் இணைப்புக் கல்லூரிகளின் நிர்வாகங்களே நிரப்பும் 35 சதவீத இடங்களுக்கும் +2 வேளாண்மைத் தொழிற்பாடப்பிரிவு மாணவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் பின்பற்றும் மாணவர் சேர்க்கை விதிமுறைகள் அரசியல் அமைப்புச் சட்டம் உறுதியளித்துள்ள கல்வியில் இட ஒதுக்கீட்டு உரிமையை மறுப்பதாகவும் +2 வேளாண்மை தொழிற்பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்விச் சேர்க்கையில் சம வாய்ப்புகளை மறுப்பதாகவும் உள்ளன.

இதன் மூலம் மேல்நிலைப்பள்ளிப் படிப்பில் (+2) அறிவியல் பாடப்பிரிவில் படித்த மாணவர்களுக்கு மட்டும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் 95 சதவீத இடங்களும், தனியார் இணைப்புக் கல்லூரிகளில் 100 சதவீத இடங்களும் ஒதுக்கப்படுகின்றன. மொத்தம் உள்ள 5220 இடங்களில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு 140 இடங்கள், தொழில் நிறுவனங்கள் பரிந்துரைப்பவர்களுக்கு 140 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் இரண்டாண்டுகள்  வேளாண்மை தொழிற்பாடப் பிரிவில் படித்த  மாணவர்களுக்கு வெறும் 44 இடங்கள் மட்டும் ஒதுக்குவது  நியாயமற்றது.  

மேல்நிலைக் கல்விப் படிப்பில் அறிவியல் பாடப்பிரிவில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல், தொழில் நுட்பவியல், இயற்பியல், வேதியியல் போன்ற பல்வேறு கல்லூரிப் படிப்புகளில் சேர வாய்ப்புள்ளது. ஆனால் வேளாண்மைத் தொழிற்பாடப் பிரிவு பயின்ற மாணவர்கள் மேற்கண்ட பட்டப்படிப்புகளில் சேர முடியாது. எனவே வேளாண்மை தொழிற்பாடப் பிரிவில் பயின்ற மாணவர்களுக்கு வேளாண்மைப் பட்டப்படிப்பில் சேர்வதற்கு அறிவியல் பாடப்பிரிவு மாணவர்களைக் காட்டிலும் முன்னுரிமையும் கூடுதலான இடங்களையும் ஒதுக்குவதே நியாயமானது.

பள்ளிக் கல்வியில் தொழிற்பாடக் கல்விக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்று தேசியக் கல்விக் கொள்கை வரைவும்  முந்தைய கல்விக் குழுக்களும்  பரிந்துரைத்துள்ளன. 2018- 19 கல்வியாண்டில் 67 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 3.55 கோடி செலவில் தொழிற்கல்வித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவித்தார். ஆனால், வேளாண்மைப் பல்கலைக் கழகப் பட்டப் படிப்புச் சேர்க்கையில் வேளாண்மை தொழிற்பாடப்பிரிவில் படித்த மாணவர்களுக்கு நடப்புக் கல்வியாண்டு வரை 1 சதவீத இடங்களைக் கூட ஒதுக்கவில்லை. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்பாடப்பிரிவில் மாணவர்கள்  எண்ணிக்கை குறைந்து தொழிற்பாடப்பிரிவுகள் மூடப்படுவது தான் நடந்து வருகிறது.

தனியார் பள்ளி மாணவர்களுக்குச் சமமான கற்றல் வாய்ப்புகள் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கிடைக்காததால்  மருத்துவப் பட்டப்படிப்புகளில் அரசு பள்ளிகளில் படித்தவர்கள் 1 சதவீதத்தினர் கூட சேர முடியாத நிலை கடந்த 15 ஆண்டுகளாக உள்ளது. இதே அவல நிலை வேளாண்மைப் பட்டப் படிப்புச் சேர்க்கையிலும் தொடர வழிவகுப்பது வேதனையளிக்கிறது. குலக்கல்வித் திட்டத்தை விட தொழிற்கல்வித்திட்டம் மோசமானதாக இருக்கக் கூடாது. 

எனவேவேளாண்மை தொழிற்பாடப்பிரிவு மாணவர்களுக்கு வேளாண்மைக் கல்லூரிப் படிப்புகளில் முன்னுரிமையும் சமவாய்ப்பும் கிடைக்கும் வகையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விதிமுறைகளைத் திருத்தம் செய்த பிறகே இக்கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை  நடத்தவேண்டும். 

சு.மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு.
பேசி: 99651 28135.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி