கிள்ளுக்கீரைகளா ஆசிரியர்கள்? - முனைவர் மணி கணேசன் - kalviseithi

Jul 20, 2019

கிள்ளுக்கீரைகளா ஆசிரியர்கள்? - முனைவர் மணி கணேசன்


ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி எனும் பழமொழி தமிழில் உண்டு. அப்பழமொழிக்கேற்ப, இன்றைய ஆசிரியர்களின் நிலை உள்ளது. நியாயமான உரிமைப் போராட்டத்தில் ஈடுபட்டோருக்கு ஈவு இரக்கம் இல்லாமல் கைது செய்வதும், ஊதியம் பிடித்தம் செய்வதும், பதவி உயர்வு உள்ளிட்டவற்றை பாதிக்கும் 17B தண்டனைகள் வழங்குவதும் மனிதாபிமானம் கிஞ்சித்தும் இன்றி தொடர்ந்து ஒருவித அச்சுறுத்தல் மனப்பான்மை மேலோங்க செயல்படுவதென்பது காலனி ஆதிக்கத்தை நினைவுப் படுத்துவதாக இருக்கிறது. 

  இதுபோன்ற ஒரு கொடுங்கோல் நிலைமை என்பது இதுநாள்வரை ஆசிரியர்கள் காணாத ஒன்று. மேலும், பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றில் வேண்டுமென்றே பல முட்டுக்கட்டைகள், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகும் வகையில் மாணவர்கள் சேர்க்கைக் குறைவைக் காரணங்காட்டி அங்கன்வாடி ஆசிரியராகவும் நூலகப் பணியாளராகவும் பணிசெய்யக் கட்டாயப்படுத்தி வருவதென்பது வேதனையளிக்கத் தக்க செயல்களாவன. முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை உபரிப் பணியிடங்களாகக் காண்பித்துக் கீழ் வகுப்புகளில் பணியிறக்கம் செய்வதாவது ஊழியர் விரோத நடவடிக்கை எனலாம். அமைச்சுப் பணி மற்றும் நிர்வாகப் பணிகளைச் செவ்வனே செய்திட சற்று பயிற்சி அளித்தால் போதுமானது. ஆசிரியர் பணியென்பது மிக எளிதான பணியன்று. முறையான உளவியல் பயிற்சிகளும் குழந்தைகளைத் திறம்பட கையாளும் வித்தைகளும் கற்பித்தல் திறன்களும் மிக அவசியம். வெற்றுத் தாள்களில் தோற்றுவிக்கப்படும் பிழைகளைச் சரிசெய்வதென்பது எளிது. பல்வேறு மனவெழுச்சிகளும் படைப்பூக்கங்களும் ஒருங்கே நிரம்பப்பெற்ற குழந்தைகளின் கற்றலில் மேற்கொள்ளப்படும் மனிதப் பிழைகள் ஏற்கத்தக்கதல்ல. 

  இயல்பாகவே ஆசிரியர்கள் தம் பணி மட்டுமல்லாமல் அரசால் திணிக்கப்படும் பிற அயல்பணிகளான பொறுப்பு மிக்கதும் ஆபத்து நிறைந்ததுமான தேர்தல் பணி, வாக்காளர் சேர்க்கை - நீக்கல் பணி, குடும்ப அட்டை மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கும் பணிகள், இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முதலியவற்றையும் அக்கறையோடு மேற்கொள்பவராக இவர்கள் காணப்படுகின்றனர்.
 இப்பணிகளில் ஏற்படும் சிறு தவறுகளுக்காக பெரும் தண்டனைகள் சிலநேரங்களில் சிலருக்கு வழங்கப்பட்ட கொடுமைகளும் இங்கே நிகழ்ந்ததுண்டு. பணிநீக்கம் மட்டுமல்லாது எதிர்பாராத விதமாக துர்மரணங்களும் இவர்களுக்கு ஏற்படுவதுண்டு.

 தவிர, ஒவ்வொரு தொடக்கப் பள்ளி ஆசிரியரும் பன்முகத் திறன்களை ஒருங்கே அமையப் பெற்றவராக விளங்கிடுதல் காலக் கட்டாயம். தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூகவியல் பாடங்களைக் கற்பிப்பதில் நன்கு புலமை மிக்கவராகவும், ஆடல் பாடல்களில் வல்லவராகவும், தலைசிறந்த நாடக நடிகராகவும், நல்ல நிர்வாகத் திறமை கொண்டவராகவும், உடற்பயிற்சி மற்றும் கணினிக் கற்பிப்பதில் வல்லுநராகவும், நூலகர், மருத்துவர், கட்டுமானப் பணிகள் மேற்கொள்பவர், ஊரகக் கலை இலக்கிய, விளையாட்டுப் போட்டிகள், வாக்காளர் தினம் முதலான சமுதாய விழாக்கள் எடுக்கும் மக்கள் தகவல் தொடர்பாளர், பள்ளிச் சுற்றுச்சூழல் பேணுபவர் போன்ற எண்ணற்றப் பணிகளுள் தம்மை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டு உழல்பவராகவும் இவ்வாசிரியர்கள் இருக்கின்றனர்.

 மேலும், பசுமைப்படை, குருளையர் மற்றும் மாணவர் செஞ்சிலுவைச் சங்கம், பெண்கள் தொழிற்கல்வி மற்றும் வாழ்வியல் கல்வி பயிற்றுநர், சிறுசேமிப்பு மற்றும் அஞ்சல் வளரும் தொடர் சேமிப்பு நிர்வகித்தல் முதலான திட்டப் பணிகளையும் இவர்கள் கவனிக்கின்றனர். எனினும், அரசும் சமுகமும் இவர்களுக்குப் போதிய வசதிகள் மற்றும் உரிய சமுக மதிப்பை வழங்க முற்படுவதில்லை. மாறாக உதாசினம் மற்றும் பொறாமை உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றன.

  உரிய ஊதியம் வழங்குவதில் நிறைய பாகுபாடுகள், ஒப்பீடுகள், முரண்பாடுகள் மட்டுமின்றி மோதல்களையும் இவை வளர்த்து விடுகின்றன. அதுபோல் சமுதாயத்திடம் கல்விக்கெனச் செய்யும் செலவினங்கள் எதிர்காலத் தலைமுறையினர்க்கான முதலீட்டுச் செலவு எனக் கருதாது பிற வீண் செலவினங்களோடு ஒன்றாக நினைந்துக் கூப்பாடு போடுவதுடன் ஒப்பாரி வைப்பதும் தொன்றுதொட்டு ஆட்சியாளர்களின் நடப்புப் பரப்புரைகளாக உள்ளன. இச்செயல் பெரும் சமுக வெட்கக்கேடு என்பதை பெருகிவரும் அறிவார்ந்த சமுகம் கண்டிப்பாக உணரத் தலைப்படுதல் அவசியம்.

  குறிப்பாக, ஆசிரியர்களை அமைச்சுப் பணியாளர்களுடன் ஒப்பிடுவதென்பது முற்றிலும் தவறு. அமைச்சுப் பணியாளரின் அடிப்படைக் கல்வித்தகுதியும் ஆசிரியரின் அடிப்படைக் கல்வித்தகுதியும் ஒன்றல்ல; வேறுவேறு. இரண்டாண்டுகள் பட்டயப் படிப்பையும் அதன் ஊடாக விளங்கும் குழந்தை உளவியல் பயிற்சியையும் கவனத்தில் கொள்ளுதல் முக்கியம். மேலும், ஆசிரியப் பணியாவது ஏனையப் பணியைப் போன்றதல்ல. அஃது உயரிய உன்னதப் பணியாகும்.

  ஒவ்வொர் ஆசிரியர் முன்பும் கிடப்பன வெறும் வெற்றுத்தாள்களல்ல; உயிரும் உணர்வும் நிரம்பிய பச்சிளம் பிஞ்சுகள். அவற்றை மிக எளிதில் கையாண்டு விட இயலாது. அதீதப் பொறுமையும் மிகுந்த தாயுள்ளமும் அமையப் பெற்று மிகமிக நுட்பமாகவும் இலாவகமாகவும் அதேசமயத்தில் எள் முனையளவுகூட பிழை நேரா வண்ணம் கையாளுதல் என்பது கூரியக் கத்தி முனையில் நேராக நடப்பது போன்றது. அஃது அவ்வளவு சாத்தியமான எளிய காரியமல்ல. ஒரு சிறு தவறுகூட சமுதாயத்தில் ஒரு பெரும் மாற்றத்திற்கு அடிகோலிடும். சமுதாய முன்னேற்றத்திற்கும் சமுக மேம்பாட்டிற்கும் வித்திடுவது தொடக்கக்கல்வி ஆசிரியர்களேயாவர்.

  இதை மனித சமுதாயம் திண்ணமாக உணர்ந்துச் செயலாற்றுதல் நலம். ஆகவே, இவர்களிடம் நாம் சிக்கனத்தையும் கஞ்சத்தனத்தையும் காட்டுதல் கூடாது. தமக்குத் தாமாகவே அவர்கள் தம் ஊதியத்தை நிர்ணயம் செய்து கொள்ளவில்லை. ஓர் ஊதியக்குழு நிர்ணயம் செய்து பரிந்துரை வழங்குவதைத் தர மறுத்தல் என்பது எத்தகைய இழிவான செயலாகும்.

  ஒரு கண்ணில் வெண்ணெயையும் மறு கண்ணில் சுண்ணாம்பையும் வைப்பது எவ்வகையில் நியாயம்? அதுவும் தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கா?
தவிர, ஆசிரியர் சமுகத்தில் மிகுந்த நெருக்கடிக்கும் மன உலைச்சலுக்கும் ஆட்பட்டு அல்லலுறுவோர் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களேயாவர் என்றால் மிகையில்லை. தேசப்பணியும் கல்விப் பணியும் அவர்களுக்கு இரு கண்கள்.

  ஆதலாலேயே சமுதாயம் இடும் அயல் பணிகள் குறித்த ஆணைகளைச் சட்டென்று புறம்தள்ளி ஒதுக்கி ஒதுங்கிடாமல் துணிவுடன் ஏற்றுத் திறம்பட அவற்றைச் செய்துமுடிக்க விழைகின்றனர். இந்நவீனச் சமுதாயம் அத்தகையோரை ஓர் இரண்டாம் பட்ச மக்கள் பணியாற்றும் ஊழியராகவே கருதி வருவது பெரும் கொடுமையன்றோ? இது களையப்படுதல் அவசர அவசியமாகும்.

 மேலும், மனித இனத்துள் தவறிழைப்போரும், தீங்கிழைப்போரும் தவிர்க்க முடியாதவர்கள். அதுபோல், ஆசிரியர் சமுகத்தில் ஒருசில குறைகள் இல்லாமலில்லை. எனினும் இவை களையக் கூடியவையே. உயர் அலுவலர்களின் தொடர் மேற்பார்வை, கடும் தண்டனைகள் வாயிலாக நிச்சயம் நல்வழிக்கு அத்தகையோரைக் கொணரவியலும். அஃதொன்றையே சுட்டிக்காட்டி ஒட்டுமொத்த நல்லாசிரியர் பெருமக்களைத் தொடர்ந்து கல்விப்பணியாற்ற விடாது மனச் சோர்வையும் ஒருவித விரக்தி மனப்பான்மையையும் உண்டுபண்ணுதல் எவ்வகையிலும் நியாயமாகப்படாது.

  இதுதவிர, தம்மிடம் பாடம் பயில வரும் பிள்ளைகளைத் தம் பிள்ளைகளாக எண்ணி கனிவையும், கண்டிப்பினையும் ஒருசேரக் காட்டும் ஓர் இரண்டாம்நிலைப் பெற்றோராகவே விளங்கிட முயல்கின்றனர். கூலிக்கு மாரடிக்கும் போக்கு ஒருபோதும் அவர்களிடம் முகிழ்த்ததில்லை.

 வளமான மற்றும் பலமான மாணவப் பட்டாளத்தையே தேசத்திற்கு அர்ப்பணித்து ஆனந்தப்படுவது ஒன்றையே தம் வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். தாம் ஆளும் வர்க்கத்தினரால் ஈவு இரக்கமற்று வஞ்சிக்கப்பட்டபோதிலும் தம்மை நம்பியிருக்கும் பிஞ்சுக் குழந்தைகளை எந்நாளும் கிஞ்சித்தும் வஞ்சிக்க நினையாதவராகவே இவர்கள் காணப்படுகின்றனர்.

  மேலும், கல்வி அடைவில் மாணாக்கரின் பின்தங்கிய நிலைக்கு ஆசிரியர் மட்டுமே காரணம் என்பதை கல்வியியல் வல்லுநர்களே உரத்து மறுத்து வருகின்றனர். ஏனென்றால், பிறப்பும் சூழலும் கல்வியைத் தீர்மானிப்பதைக் காட்டிலும் குழந்தையினது மனவயதும் அதன் நுண்ணறிவும் ஆளுக்காள் வேறுபட்டுக் காணப்படுவது இன்றியமையாதக் காரணிகளாகும்.

  தவிர, குழந்தைகளிடையே இயல்பாக நிலவும் தனியாள் வேறுபாடுகள், தனித் திறன்கள், விருப்பங்கள், கனவுகள் போன்றனவற்றிற்கு நம் கல்விமுறை காலந்தோறும் ஆக்கமும் ஊக்கமும் அளித்ததாக வரலாறில்லை. நாடு முழுமைக்குமான தேசியக் கலைத்திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் மேற்சுட்டிய காரணிகளைப் புறம்தள்ளி ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்திற்கு ஒரே சீரான பாடத் திட்டத்தையும் கற்றல் திறன்களையும் வடிவமைத்து கட்டாயம் அவற்றை அடையச் செய்திட சற்றும் அவற்றிற்குப் பொருந்திடாத மதிப்பீட்டு முறைகளைக் கையாளும் நடைமுறைகளை ஆசிரியர்கள்பால் திணித்து அவர்களைத் திணரச் செய்திடும் நோக்கும் போக்கும் இனி வரும் காலங்களிலாவது மாற்றியமைக்கப்பட வேண்டும்.

  கல்வியும் அதனூடாக நிகழும் கற்றலும் இயல்பான சுவாசம்போல் நிகழ்ந்திடாது மிகுந்த கசப்புக்குள்ளான மருந்தைப் புகட்டுவது போலலல்லவா இங்கே காணப்படுகிறது. அத்தகையப் பெரும் இமாலயப் பணியைச் செவ்வனே நிறைவேற்றுபவர்களாகத் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் திகழ்கின்றனர். அதற்காக அவர்கள் படும்பாடுகள் கொஞ்ச நஞ்சமில்லை. ஆதலாலேயே, உலகளவில் இந்திய மற்றும் தமிழ்ச் சமூகங்கள் தலைநிமிர்ந்து காணப்படுகின்றன. அதற்குக் காரணமாக விளங்கும் மூலவித்துக்களை முடமாக்குதல் முறையான செயலாக அமையாது. 

15 comments:

 1. Part time teachers ah savadichiruga

  ReplyDelete
 2. இதுவே இப்படியென்றால் தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலைமை ?

  ReplyDelete
  Replies
  1. Private school la election work la kudutha nega pandriga

   Delete
 3. Partime teachera.enna panna poringa?

  ReplyDelete
 4. PART TIME TEACHERS KKU 7700 POTHUMNU NAASAMAA POGAPPORAVINGA MUDIVU PANNITTAANGA. ENGAL VAYITRIL IPPADI ADIKKANUMNU MUDIVU PANNI INTHA POSTING POTTAVANGA NAASAMAA POITTAANGA. INTHA 7700KKUM MEL SAMBALAM ETRA MAATTEN ENDU ENGAL VAYITRILUM ENGAL KUDUMBATHAARIN VAYITRILUM ADIKKUM IVANUGA NAASAMA POGANUMNU KADAVULIDAM NAANGAL ANAIVARUM VENDUVATHAI THAVIRA VERU VAZHIYILLAI.

  ReplyDelete
  Replies
  1. Itha vittutu private company la pona kooda 15000 salary vangalam,part time ku odrathanala than posting poda matranga,surplus teachers irukumpothu part teachers ethuku.?

   Delete
 5. Enna punnagaikku part time velai poi pakkuringa..???
  Nanga private school la kastapattu work pandrom, masam 25k, 30k en 50k vangura alunga kooda irukanga,
  Unga padipukum thiramaikum private la nalla salary iruku, aparam ethuku part time velai poganum,
  Ellame oru pichai kaara thanam, appadiye namaku andha velaiya oc la kudupanga appadinu, andha mentality la irundhu vanga, yarume govt part time job pogathinga, avanga full time teacher edukurathuku exam vaikattum, nama andha 7000 velai la velai patha namaku oc la full time job varumnu kanavu kandutu andha velaiya seiyurathu than arasaangathoda moolathanam. Inga arasaangam muttal ila, naama than

  ReplyDelete
 6. இவ்வளவு வாய் கிழிய பேசி விட்டு உங்கள் பிள்ளைகளை கொண்டுபோய் தனியார் பள்ளியில் தானே சேர்த்துள்ளீர்கள் அப்புறம் ஏன் இந்த இவ்வளவு பெரிய வசனம் கதை எவ்வளவு

  ReplyDelete
  Replies
  1. Super thalaiva... kettle thanI urimainu solluvanga.. innum aaiya velai seiya vidanum
   Avanungale resign pannittu poganum

   Delete
 7. Arasu koorum seithigalai ondraga thirati yosithu paarungal ellame muranpadagave irukum so ellame pithalaatam

  ReplyDelete
 8. Seiya mudiyalana resign Hannity ponga... veliya niraiya per irukiranga

  ReplyDelete
  Replies
  1. Yeva veetla setha yenakena yenaku sooru kedacha podhum nu onna pola neraya per irukaga.

   Delete
 9. அனைத்திற்கும் பள்ளிகள் இணைப்பு தான் ஓரே தீர்வு

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி