மாணவ, மாணவிகளின் ஸ்மார்ட் அட்டையை பஸ் ‘பாஸ்’ ஆக பயன்படுத்த அரசு திட்டம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 3, 2019

மாணவ, மாணவிகளின் ஸ்மார்ட் அட்டையை பஸ் ‘பாஸ்’ ஆக பயன்படுத்த அரசு திட்டம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்


அரசு, அரசு உதவி பெறும் பள்ளிக்கூட மாணவ, மாணவிகளின் ஸ்மார்ட் அட்டையை அரசு பஸ்களில் ‘பாஸ்’ ஆக பயன்படுத்துவது பற்றி அறிவிக்க அரசு திட்டம் வைத்துள்ளதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

தமிழக சட்டசபையில் பள்ளி கல்வித்துறை மானியக் கோரிக்கையின் மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். பின்னர் அவர்களுக்கு பதிலளித்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:- தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 816. மாணவர்களின் எண்ணிக்கை 66 லட்சத்து 44 ஆயிரத்து 424 ஆக உள்ளது. ஆசிரியர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 2 ஆயிரத்து 351 ஆகும். கடந்த 2 ஆண்டுகளில் 452 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு, புதிய தொடக்கப்பள்ளிகள் 20 தொடங்கப்பட்டன.

நீட் தேர்வு பயிற்சி மூலம் 2018-ம் ஆண்டில் 39.46 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர். 2019-ம் ஆண்டு 48.47 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.நீட் தேர்வு தேவையில்லை என்பதை இந்த அரசு கொள்கையாக கொண்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, தி.மு.க. எம்.எல்.ஏ. (காஞ்சீபுரம்) எழிலரசன் பேசியபோது, அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் குறுக்கிட்டு பேசியதாவது:- கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் இருந்து ஒரு கி.மீ. சுற்றளவில் உள்ள ஏழை, எளிய மாணவர்களைஅரசு பள்ளிகளிலேயே சேர்க்கலாம் என்ற சட்டத்தை கர்நாடக அரசு ஏற் படுத்தி உள்ளது. அதுபோன்ற சட்டத்தை தமிழகத்திலும் கொண்டுவர இயலுமா என்பதைப் பற்றி பரிசீலித்து முடிவெடுத்து, சட்டமன்றத்திலேயே அதை அரசு வெளியிடும். பள்ளிக்கூட மாணவர்களுக்கு தற்போது அரசு பேருந்து ‘பாஸ்’ வழங்கவில்லை என்றாலும் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பாசை பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது பள்ளிகளில் வழங்கும் ஸ்மார்ட் அட்டையையே சீருடை அணிந்து வரும் மாணவர்கள் ‘பாஸ்’ ஆக பயப்படுத்த முடியுமா என்பதைப் பற்றி ஆய்வு செய்து அறிவிக்கப்படும். கடந்த 2016-17 மற்றும் 2017-18-ம் ஆண்டுகளில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்குவது தொடர்பாக கோர்ட்டில் சில நிறுவனங்கள் வழக்கு தாக்கல் செய்தன. இதனால்தான் அந்த ஆண்டில் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு அதை வழங்க முடியாமல் போய்விட்டது. ஆனாலும் அவற்றை முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கும் வழங்க இருக்கிறோம். தேசிய கல்வி வரைவுக்கொள்கை விஷயத்தில் தமிழகத்தின் கோரிக்கைகளை அளித்துள்ளோம்.

 தமிழகத்தின் உரிமைகள் பாதிக்காத வகையில் அதில் திருத்தங்களைக் கேட்டுள்ளோம். எனவே அந்தகொள்கையை அமல்படுத்தப்பட்டுவிட்டதைப்போல தி.மு.க. பேசத் தேவையில்லை. அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் 190 நாட்கள் பணியாற்றுகின்றனர். பணி நாட்களில் கூடுதலாக அரை மணி நேரத்தை சேர்க்க அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி