" கல்லடி படும் காய்த்த மரங்கள் " - ஆசிரியர்களின் நிலைமை பற்றி இன்றைய 18.9.19 தினமணி கட்டுரை! - kalviseithi

Sep 19, 2019

" கல்லடி படும் காய்த்த மரங்கள் " - ஆசிரியர்களின் நிலைமை பற்றி இன்றைய 18.9.19 தினமணி கட்டுரை!


ஆசிரியர் தினம் அண்மையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அவர்களுக்கு மாநில அளவிலும், தேசிய அளவிலும் அளிக்கப்பட்ட விருதுகள், பரிசுகள் அவர்களை ஊக்கப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. 

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதும், எழுத்தறிவித்தவன் இறைவன் என்பதும் இதனை உணர்த்தும். மக்கள் சமுதாயமும், ஆசிரியர் சமுதாயமும் இதனைத் தொடர்ந்து பராமரித்தால், அது அடுத்த தலைமுறைக்கு ஆக்கத்தையும், ஊக்கத்தையும் அளிக்கும்.
ஆசிரியர்கள் தங்கள் பணியை அறப்பணியாக எண்ணி அதற்கே தம்மை அர்ப்பணிக்க வேண்டும். ஊதிய உயர்வுக்காக ஆசிரியர்கள் போராடுவதை பொதுமக்கள் ஏற்றுக் கொள்வதில்லை. 
உயர்த்தப்படுபவர்கள் தாழ்த்தப்படுவார்கள் என்பதுபோல ஆசிரியர்கள் நிலையும் இப்போது விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. 

ஆசிரியர் பணிக்கென நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு சதவீதம் பேர்கூட தேர்ச்சி பெறவில்லை என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பள்ளிப் படிப்பையும், பட்டப்படிப்பையும் படித்து முடித்து ஆசிரியர்களுக்கான தனிப் படிப்பிலும் தேர்ச்சி பெற்றவர்களை இப்படித்தான் இழிவுபடுத்துவதா? பெருமைப்படுத்தப்பட வேண்டியவர்கள் இழிவுபடுத்தப்பட்டால் மாணவர்களும், பெற்றோர்களும் ஆசிரியர்களை எப்படி மதிப்பார்கள்?
தேர்வுகள் எப்போதும் மாணவர்களுக்கு மட்டும்தான் என்ற நிலை மாறி, ஆசிரியர்களும் தேர்வு எழுத வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. 

அவர்களுடைய பணியின் தரத்தை உயர்த்துவதற்கு மாறாக, அவர்களின் தகுதியைத் தாழ்த்துவதற்கே இது பயன்பட்டிருக்கிறது.
1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள ஆசிரியப் பணியில் ஆசிரியர்களை நியமனம் செய்வதற்காக என அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த ஜூன் 8, 9 நாள்களில் முறையே முதல் தாள், இரண்டாம் தாள் ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக நடத்தப்பட்டது. இரண்டு தாள்களுக்கும் மொத்தம் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர். 
முதல் தாளை ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 314 பேரும், இரண்டாம் தாளை 3 லட்சத்து 79 ஆயிரத்து 73 பேரும் எழுதினர். இரண்டு தேர்வுகளுமே தலா 150 மதிப்பெண்களைக் கொண்டவையாகும். ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

     மூன்று மணி நேரம் ஒதுக்கப்பட்டிருந்த இந்தத் தேர்வில் பொதுப் பிரிவினர் 90 மதிப்பெண்களும், இடஒதுக்கீட்டுப் பிரிவினர் 82 மதிப்பெண்களும் பெற வேண்டும்.
தேர்வு முடிவு அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது. முதல் தாள் தேர்வில் 480 பேரும், இரண்டாம் தாளில் 324 பேரும் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்; தேர்வு எழுதியவர்களில் 99 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. இதன்படி தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் பெற ஆண்டுக்கு இரு முறை ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தியிருக்க வேண்டும்.  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தேர்வுகள் நடத்தப்படவில்லை.

இதனால், ஆசிரியர் பணிக்காகக் காத்திருந்த பட்டதாரிகள் சிலர் நீதிமன்றத்தை அணுகினர். நீதிமன்றத்தின் ஆணைப்படியே இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு முடிவுகள் பலவிதக் கேள்விகளை எழுப்பியுள்ளன.
இப்போது பள்ளிகளில் நியமனம் செய்ய வேண்டிய காலியிடங்களைவிட, தேவைக்கு அதிகமானோர் ஏற்கெனவே தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் காத்திருப்பில் உள்ளனர். பணி நியமனம் செய்ய வேண்டுமானால் அதிலிருந்தே ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பியிருக்க முடியும். ஆனால், நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டுத்தான் தேர்வு நடத்தப்பட்டது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலிருந்து தப்பிக்கவும், அதிக அளவில் தேர்ச்சியடைந்துபணி வாய்ப்புக்கு நெருக்கடி ஏற்படாமல் தவிர்க்கவும், நீதிமன்றத்தை அணுகி  தேர்வு எழுதியவர்களை தேர்ச்சியடையாமல் செய்யவும் இப்படிப்பட்ட தேர்வும், முடிவும் அவர்களை எச்சரிக்கிறது.
இவையெல்லாம் கடந்து, பட்டதாரிகள் விருப்பப் பாடமாக எடுத்துப் படித்த பாடப் பகுதியிலிருந்து மட்டுமே அவர்களுக்குக் கேள்விகள் கேட்கப்பட வேண்டும். ஆனால், கணிதம் படித்தவர்களுக்கு அறிவியலிலும், அறிவியல் படித்தவர்களுக்குக் கணிதத்திலும் கேள்விகள் கேட்கப்படுவது என்ன நியாயம்?
வினாத்தாள் என்பது மாணவர்களின் அறிவுத் திறனைச் சோதிப்பதற்காக வடிவமைக்கப்பட வேண்டுமே தவிர, வடிவமைப்பாளர்களின் ஆற்றலை வெளிப்படுத்துவதாக அமையக் கூடாது. இது தேர்வு எழுதுவோரின் தன்னம்பிக்கையைச் சீர்குலைத்து விடும்.

இன்று தகுதியற்றவர்கள் என்று தீர்மானிக்கப்பட்டவர்களே அன்று தகுதியானவர்கள் எனப் பட்டம் பெற்றவர்கள். இன்று தீர்மானித்தவர்களே அன்றும் தீர்மானித்தனர் என்பதை அரசும், கல்வித் துறையும் ஒப்புக்கொள்ள வேண்டும். 
ஒவ்வொரு தேர்தலின் போதும், ஏழ்மையை ஒழிப்போம், வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்போம் என்று கூறி ஆட்சிக்கு வருபவர்கள் அதை வசதியாக மறந்து விடுகின்றனர். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் இளைஞர்களுக்கு எதிர்கால வாழ்க்கையை எடுத்துக்காட்ட வேண்டாமா?
போட்டித் தேர்வுகள் விண்ணப்பதாரரின் தகுதியைத் தீர்மானிப்பதாக இருந்தால் நல்லது. அப்படியில்லை என்பதற்கு எடுத்துக்காட்டு உண்டு. 

     சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற அஞ்சல் துறையின் போட்டித் தேர்வைக் கூறலாம். தமிழ்நாட்டில் 44 அஞ்சலகக் கோட்டங்களில் காலியாக இருக்கும் 310 அஞ்சலகப் பணியாளர்களுக்கான தேர்வு கடந்த 2016 டிசம்பர் 11-ஆம் தேதி நடைபெற்றது. இந்தியா முழுவதும் உள்ளவர்கள் இந்தத் தேர்வை எழுதினர். அஞ்சலகத் துறையின் இணையதளத்தில் தேர்வு முடிவுகள் 2017 மார்ச் 14 அன்று வெளியிடப்பட்டது.
கணிதம், பொது அறிவு, ஆங்கிலம், தமிழ் ஆகிய ஒவ்வொரு பாடப் பிரிவுக்கும் 25 மதிப்பெண் வீதம் மொத்தம் 100 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில் ஹரியாணா மாநிலம் தவிர, வேறு மாநிலத்தவர்கள் தேர்வாகவில்லை. இந்தத் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

 இதையடுத்து தமிழ்நாடு அஞ்சல் துறை அளித்த புகாரின் அடிப்படையில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.
தபால்காரர் பணிக்கான தேர்வில் பெயர் தெரியாத விண்ணப்பதாரர்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அரசு ஊழியர்கள் உடந்தையாக இருந்துள்ளனர். குறிப்பாக, ஹரியாணாவைச் சேர்ந்தவர்கள் தமிழ்ப் பாட தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர்.

 ஹரியாணா  அரசின் பாடத் திட்டத்தில் படித்தவர்கள் தமிழில் அதிக மதிப்பெண் எடுக்க வாய்ப்பில்லை என்று சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும், விசாரணையின் முடிவு இதுவரை தெரியவில்லை.

பல காலமாக வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பணி நியமனங்கள் நடைபெற்று வந்தன. 

பணி மூப்பு அடிப்படையில் ஊழலுக்கு இடமில்லாமல் செயல்பட்டு வந்தது என்றுதான் கூற வேண்டும். இதனை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது?
திறமைக்கு முதலிடம் தர வேண்டும் என்ற புதிய முழக்கம் எழுப்பப்பட்டு போட்டித் தேர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. புதிய வேலைவாய்ப்புகள் இல்லாதபோது, புதிய முழக்கங்களால் என்ன பயன்? புதிய முழக்கங்களும் புதிய வேலைவாய்ப்புகளும் இணைகோடுகளாகச் செயல்பட்டால்தான் திட்டத்தின் பலன் மக்களைச் சென்றடையும்.
தேசத்தின் எதிர்காலம் வகுப்பறைகளில்தான் தீர்மானிக்கப்படுகிறது என்று கோத்தாரி கல்விக் குழு குறிப்பிட்டுள்ளது. தேசத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது ஆசிரியர்கள் என்பதில் சந்தேகமில்லை.
மாணவர்களுக்கு ஆசிரியர்கள் முன்மாதிரியாகச் செயல்பட வேண்டும். 

மனித சமுதாயம் அவர்களை மதித்துப் போற்ற வேண்டும். மாணவர்கள் காணும் கனவுகளை நிறைவேற்றி வைக்கும் வழிகாட்டிகளாக ஆசிரியர்கள் விளங்க வேண்டும். அரசும், கல்வித் துறையும் அதற்குத் துணை செய்ய வேண்டும். ஆனால், அரசின் அறிவிப்புகளும், கல்வித் துறையின் அறிக்கைகளும் எதிர்மாறாக இருக்கின்றன.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் 3,688 உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 41,805 ஆசிரியர்களுக்கும், 4,040 மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 1,21,774 ஆசிரியர்களுக்கும் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் ஆதார் எண்ணுடன் இணைந்த தொட்டுணர் கருவி (பயோ -மெட்ரிக்) முறையிலான வருகைப் பதிவேட்டு முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக தொடக்கக் கல்வி இயக்குநரின் கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றியம், அரசு, அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் இந்த பயோ-மெட்ரிக் முறை வருகைப் பதிவேடு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

பள்ளிக் கல்வித்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு, அரசு உதவி பெறும் நகராட்சிப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு பணியாளர்களின் முன்னுரிமை மற்றும் தகுதி அடிப்படையில் பதவி உயர்வு பரிசீலனை செய்யப்பட வேண்டும்.

மேலும், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் அசையும் -அசையாச் சொத்து விவரங்கள் பணியாளர்களின் பதிவேட்டில் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும். இதில் ஏதேனும் முரண்பாடுகள் நிகழுமானால் ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறை அறிக்கையின்படி தொடர்புடைய பணியாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது என்று பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் நல்லாசிரியர்களாகத் திகழ வேண்டுமானால் அமைதியான சூழல் அமைய வேண்டும். அதற்கு இத்தகைய அறிவிப்புகளும், அறிக்கைகளும் துணை செய்யுமா என்று யோசிக்க வேண்டும். காய்த்த மரத்தில்தான் கல்லடி படும் என்று சொல்வார்கள்.

4 comments:

 1. நான் 2012ஆம் ஆண்டிலிருந்து ஆசிரியர் தகுதி தேர்வெழுதி கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் சொற்ப மதிபெண்களில் தோல்வியடைந்து கொண்டே வந்து மீண்டும் மீண்டும் முயற்சி செய்து 2017,2019 ஆண்டு தேர்வுகளில் தேர்ச்சிப்பெற்றேன். பெற்றும் என்ன பயன் ஏமாற்றம் தான் மிச்சம். 2017 ஆம் ஆண்டில் 8000பணியிடங்கள் காலியாக உள்ளதென்றார்கள். நம்பி படித்தேன்.ஒவ்வொரு முறையும் படிக்கும் போதும் நான் ஏற்கனவே செய்து கொண்டிருந்த வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு படிக்க வேண்டியதாயிற்று மீண்டும் மீண்டும் வேலைதேடி வேலை செய்வது என்று தொடர் கதையாகி வருகிறது. இன்னும் எத்தணை தேர்வுகள் தான் வைப்பீர்கள் எங்களை இப்படியே ஏமாற்றுவதற்கு.ஆசிரியராக வேண்டுமென நாங்கள் கனவு கண்டது தவறா? பள்ளிகளால் அரசுக்கு வருவாய்யின்மை,வீண்செலவீனம் என்று
  ஒருவேளை நீங்கள் நினைத்தால் எதற்காக மீண்டும் மீண்டும் தகுதி தேர்வு நடத்துகிறீர்கள் எம் போன்றவர்களின் மனதை புண்படுத்தவா?தயவு செய்து இதற்கொரு முடிவினை விரைந்து கூறுங்கள். நன்றி

  ReplyDelete
 2. Romba sariya soneenga nanum 2013 and 2017 tet la pass. 2 yrs ah oru aided school la work panra. Innu oru Paisa kooda sambalam vangala. Idhula nethu vandha GO la anavasiyama aided school la no appointment no approval nu solitanga. Ini poi endha velaya thedradhu rendu varusam Vela pathadhuku Yar poi sambalam kekaradhunu theriyala

  ReplyDelete
 3. I was completed my B.Ed. in 1997 Up to 2014 i won't get Job. Though employment seniority. then i entered TET i was shocked my juniors are got jobs before me.How its possible.

  ReplyDelete
 4. இதுவரை தமிழ்நாட்டில் ஐ ஏ எஸ் அதிகாரிகளும் டாக்டராக இருப்பவர்களும் இஸ்ரோவிஞ்ஞானிகளும் ஏன் அமைச்சர்களாக இருப்பவர்களும் 'டெட்'தேர்ச்சி பெறாத ஆசிரியர்களிடம் படித்ததை மறந்து விடக்கூடாது.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி