புதிய கல்வி கொள்கை தொடர்பான கூட்டம் டெல்லியில் 21-ந்தேதி நடக்கிறது - தமிழகம் சார்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பங்கேற்பு! - kalviseithi

Sep 17, 2019

புதிய கல்வி கொள்கை தொடர்பான கூட்டம் டெல்லியில் 21-ந்தேதி நடக்கிறது - தமிழகம் சார்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பங்கேற்பு!


புதிய கல்வி கொள்கை தொடர்பாக டெல்லியில் வருகிற 21-ந்தேதி அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெற இருப்பதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு (ஏ.ஐ.சி.டி.இ.) தலைவர் அனில் சாஷ்ரபுத்தே தெரிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு (ஏ.ஐ.சி.டி.இ.) தலைவர் அனில் சாஷ்ரபுத்தே கலந்து கொண்டு பேசியதாவது:-

புதிய கல்வி கொள்கையில் 25 சதவீதம் மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருப்பதாகவும், அதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் பலர் கூறுகிறார்கள். வசதி படைத்த மாணவர்கள் அதிக கல்வி கட்டணத்தை கட்டுவதில் எந்த பிரச்சினையும் இல்லை. அதைவைத்து இந்த 25 சதவீத மாணவர்களின் கல்விக்கு கரம் கொடுக்க முடியும்.நாட்டின் பள்ளி மற்றும் உயர்கல்வியில் ஒட்டுமொத்த வருகைப்பதிவு விகிதாசாரம் 25 சதவீதம், 27 சதவீதம் என்ற நிலையில் இருக்கிறது. தொலைதூரக்கல்வி, இணையதள வழிக்கல்வி போன்ற பல்வேறு முறைகள் மூலம் இன்னும் 5 ஆண்டுகளில் 50 சதவீதமாக உயர்த்துவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறோம்.இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டு இருக்கிறது.

இதுவரை 1,500 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் ஓராண்டுக்குள் 3 ஆயிரம் எண்ணிக்கையிலான குழுக்களாக அதிகரிக்க மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது.ஒவ்வொரு பல்கலைக்கழகங்களிலும் ஆண்டுதோறும் புதிய பாடத்திட்டங்கள் மாற்றப்பட வேண்டும். அந்த பாடத்திட்டங்கள் மாணவர்கள் சுயமாக சிந்திக்க தூண்டும் வகையில் அமைந்து இருக்க வேண்டும். சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வில் உலகின் சிறந்த 300 கல்வி நிறுவனங்களில் இந்தியாவை சேர்ந்த ஒரு கல்லூரிகள் கூட இடம்பெறாதது, துரதிருஷ்டவசமானது.அந்த ஆய்வில் சில விதிகள் பின்பற்றப்பட்டு இருக்கின்றன. அவை நமக்கு பொருந்தாத விதிகள். அவற்றை கடைப்பிடிப்பது சிரமம்.

300 சிறந்த கல்விநிறுவனங்களுடன் இந்திய கல்வி நிறுவனங்களை ஒப்பிடும்போது, பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளை நாம் சமர்ப்பித்து தான் இருக்கிறோம். எனவே இந்தியாவின் உயர்கல்வி சிறப்பாக தான் உள்ளது.என்ஜினீயரிங் கல்லூரிகளில் பேராசிரியராக இருப்பதற்கு எம்.டெக். படித்து இருந்தால் போதும். ஆனால் இனிமேல் அது போதாது. ஒரு புதிய ஆன்லைன் படிப்பை அமல்படுத்த இருக்கிறோம்.அதை படித்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் தான் பேராசிரியராக பணியில் சேர்ந்து பணியாற்ற முடியும். இதுகட்டாயமாக்கப்படுகிறது. ஏற்கனவே பணியில் இருக்கும் பேராசிரியர்கள் பதவி உயர்வு பெறும்போது, இந்த தேர்வை கண்டிப்பாக எழுத வேண்டும்.வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப புதிய படிப்புகளை கொண்டு வர பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய ஒரே படிப்பான பி.டெக். செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் (ஆர்ட்டிபிசியல் இன்டெலிசன்ஸ் அன்ட் டேடா சயின்ஸ்) என்ற படிப்பு உருவாக்க முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய கல்வி கொள்கை தொடர்பாக முடிவு எடுக்க அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் வருகிற 21-ந்தேதி நடக்க இருக்கிறது.

அவர்கள் சொல்லும் பரிந்துரைகளுக்கு ஏற்றபடி, புதிய கல்வி கொள்கை கொண்டு வரப்படும். இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புதிய கல்வி கொள்கை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி