தேநீரின் தரத்தை தேநீர் கோப்பைகள் தீர்மானிப்பதில்லை!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 1, 2019

தேநீரின் தரத்தை தேநீர் கோப்பைகள் தீர்மானிப்பதில்லை!!

வாழ்க்கைப் பாடம்...

அந்த ஆசிரியரை எல்லா மாணவர்களும் நேசித்தார்கள்.

காரணம் கஷ்டமான பாடத்தையும் எளிமையான உதாரணங்களைக் கொண்டு புரிய வைப்பதில் அவர் வல்லவராக இருந்தார்.


அவரிடம் படித்த மாணவர்கள் பெரிய பெரிய பதவிகளை வகித்தார்கள்.

பலரும் பல நாடுகளுக்குச் சென்று பிரகாசித்தார்கள். பெரிய தொழிலதிபர்களாகத் திகழ்ந்தார்கள்.

அவர்களுக்கு எத்தனையோ ஆசிரியர்கள் இருந்திருந்த போதிலும் அவர் மேல் காட்டிய அன்பையும் மரியாதையையும் அவர்கள் மற்றவர்களிடம் காட்டவில்லை.

அந்த ஆசிரியரிடம் மட்டும் பெரும்பாலான மாணவர்கள் இன்னும் கடிதம் மூலமும், ஈ மெயில் மூலமும் தொடர்பு வைத்திருந்தார்கள்.

அவரும் தன் மாணவர்களை மிகவும் நேசித்தார்.

அவர்களுடைய வெற்றியை தன் சொந்தப் பிள்ளைகளின் வெற்றியென அவர் மகிழ்ந்தார்.

ஆனால் ஒரே ஒரு உண்மை மட்டும் அவர் மனதில் நெருடலாக இருந்தது.

பதவி, பணம், கௌரவம் ஆகியவற்றில் உயர்ந்து விளங்கிய அவருடைய மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக அவருக்குத் தெரியவில்லை.

அவர்கள் அனுப்பிய கடிதங்களும், ஈ மெயில்களும் அதைக் கோடிட்டுக் காண்பித்தன.

மன உளைச்சல்கள், பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கை முறையில் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்பதை அவர் உணர்ந்தார்.

பெரிய பெரிய சாதனைகள் புரிய ஓடிக் கொண்டிருந்த ஓட்டத்தில் மகிழ்ச்சியை அவருடைய மாணவர்கள் தொலைத்திருந்தார்கள்.

அவருடைய மாணவர்கள் எல்லோரும் அவருடைய எழுபதாவது பிறந்த நாளுக்கு ஒன்று சேர்ந்து அவரைக் கௌரவிக்க முடிவு செய்தார்கள்.

அவருக்கு அது போன்ற பிறந்த நாள் விழாக்களில் பெரிய ஈடுபாடு இல்லை என்றாலும் அவர்கள் அன்பை மறுக்க முடியாததால் அதற்கு சம்மதித்தார்.

பெரியதொரு அரங்கத்தில் அவர்கள் அவருடைய பிறந்த நாளன்று ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

அவர் அதற்கு முந்திய நாள் தன் வீட்டில் தேனீர் அருந்த அவர்கள் அனைவரையும் வரச் சொன்னார்.

உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் பல மாணவர்கள் அவருடைய பிறந்த நாளுக்கு முந்தைய நாளே அவர் வீட்டில் கூடினார்கள்.

அவரைக் கண்டதில் அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

அவரும் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று உரையாடினார்.

பின் தன் சமையலறைக்குச் சென்ற அவர் பெரிய பாத்திரம் ஒன்றில் தயாரித்து வைத்திருந்த சூடான தேனீரைக் கொண்டு வந்தார். மேசை மீது வைத்திருந்த வித விதமான தம்ளர்களைக் காண்பித்து அவர்களை தாங்களே ஊற்றிக் கொண்டு குடிக்கச் சொன்னார்.

மிக அழகான வேலைப்பாடுடைய பீங்கான் தம்ளர்கள், வெள்ளி தம்ளர்கள், சாதாரண தோற்றமுள்ள எவர்சில்வர் தம்ளர்கள் அழகில்லாத அலுமினியத் தம்ளர்கள், ப்ளாஸ்டிக் தம்ளர்கள் என்று பல வகைப்பட்ட தம்ளர்கள் மேசை மீது இருந்தன.

விலையுயர்ந்த தம்ளரிலிருந்து மிக மலிவான தம்ளர் வரை இருந்ததைக் கவனித்த மாணவர்கள் இயல்பாகவே விலையுயர்ந்த, அழகான தம்ளர்களையே தேர்ந்தெடுத்துக் கொள்வதில் முண்டியடித்துக் கொண்டு போனார்கள்.

அந்தத் தம்ளர்களில் தேனீரை ஊற்றிக் குடித்த அவர்கள் தேனீரின் சுவை பற்றி ஆசிரியரிடம் புகழ்ந்தார்கள்.

அந்த ஆசிரியர் ஒரு தேயிலைத் தோட்டத்தில் பிரத்தியேகமாகச் சொல்லித் தருவித்த உயர்தரத் தேயிலை உபயோகித்து அந்தத் தேனீரைத் தயாரித்ததை அவர்களிடம் தெரிவித்தார்.

பின் கேட்டார். ”எத்தனையோ பாடங்கள் உங்களுக்கு சொல்லித் தந்திருக்கிறேன். இப்போது ஒரு வாழ்க்கைப் பாடத்தையும் உங்களுக்கு சொல்லட்டுமா?”

அவர்கள் ஏகோபித்த குரலில் உற்சாகமாகச் சொன்னார்கள். “தயவு செய்து சொல்லுங்கள்”

”எத்தனையோ தம்ளர்கள் இருந்த போதிலும் நீங்கள் அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டுக் கொண்டு போனீர்கள். அது இயற்கை தான்.

ஆனால் எடுத்தது எந்த தம்ளராக இருந்தாலும் உண்மையில் உங்களுக்கு முக்கியமானது நீங்கள் குடித்த தேனீர் தான். அதன் சுவையும் தரமும் மட்டுமே நீங்கள் ருசிக்கப் பயன்படுகிறது.

உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து எல்லாம் அந்தத் தம்ளர்களைப் போல. வாழ்க்கை தேனீர் போல. தம்ளர்களின் தரம் தேனீரின் தரத்தை எப்படித் தீர்மானிப்பதில்லையோ அது போல உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து ஆகியவை உங்கள் வாழ்க்கையின் தரத்தைத் தீர்மானிப்பதில்லை.”

“அதை மறந்து இப்போது அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டதைப் போல வாழ்க்கையிலும் மிக உயர்ந்த வேலை, மிக அதிகமான பணம், மிக உயர்ந்த பதவி, பலர் மெச்சும் அந்தஸ்து ஆகியவற்றைப் பெற போட்டி போட்டுக் கொண்டு வாழ்வதால் தான் நீங்கள் மன உளைச்சலாலும், பிரச்சனைகளாலும் அவதிப் படுகிறார்கள்.

வாழ்க்கை என்ற தேனீரின் தரத்தை இந்தத் தம்ளர்கள் தீர்மானிக்கிறது என்று தப்பர்த்தம் செய்து கொள்வதாலேயே போட்டி, பொறாமை, அவசரம், பேராசை என்ற வலைகளில் சிக்கிக் கொள்கிறீர்கள்”

“தோற்றங்களில் அதிகக் கவனத்தைத் தரும் போது உண்மையான வாழ்க்கையை நாம் கோட்டை விட்டு விடுகிறோம். வாழ்க்கையை ருசிக்கத் தவறி விடுகிறோம்.

எத்தனை தான் பெற்றாலும் உள் மனம் அந்த உண்மையை உணர்ந்திருப்பதால் அது என்றும் அதிருப்தியாகவே இருக்கிறது.”

அவர் சொல்லி முடித்த போது அந்த மாணவர்களிடையே பேரமைதி நிலவியது. சிலர் பிரமித்துப் போய் அவரைப் பார்த்தார்கள்.

சிலர் கண்களில் நீர் தேங்கி நின்றது.

இருட்டில் இருந்ததால் தெரியாமல் போன பலதையும் வெளிச்சம் வந்தவுடன் தெளிவாகப் பார்க்க முடிந்தது போல அனைவரும் உணர்ந்தார்கள்.

இத்தனை நாள்கள் அவர் சொல்லித் தந்த பாடங்களை விட இப்போது சொல்லித் தந்த வாழ்க்கைப் பாடத்தை இவ்வளவு எளிமையாக மனதில் பதியும் படி வேறு யாரும் சொல்லித் தர முடியாது என்று நினைத்த அவர்கள் மனதில் அவர் இமயமாக உயர்ந்து போனார்.

ஒருவன் கண்ணீருடன் கை தட்ட ஆரம்பிக்க அவர் வீடு அடுத்த நிமிடத்தில் கை தட்டல்களால் அதிர்ந்தது
#ரி

7 comments:

  1. Super.... Reality one. .most of the person losing everyday life by searching something...

    ReplyDelete
  2. UNMAIYANA KALVI -GOOD SIR-MY TEACHER IS GOD- SUCCESSES

    ReplyDelete
  3. Excellent...... Let the truth be spread....

    ReplyDelete
  4. வாழ்க்கை வாழ்வதற்கான ஒன்று,
    மகிழ்ச்சியாக வாழ்ந்து செ‌ல்வோம்...

    ReplyDelete
  5. That's the attitude of a real tr

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி