TRB - உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் சிக்கல்? : பட்டதாரிகள் பதற்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 3, 2019

TRB - உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் சிக்கல்? : பட்டதாரிகள் பதற்றம்


அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நியமிக்கப்பட உள்ள 2340 இடங்களுக்கு உச்சநீதி மன்ற தீர்ப்பு மற்றும் பல்கலைக் கழக மானியக் குழுவின் விதிகளை பின்பற்றாமல் நியமனம் செய்தால் ஆசிரியர் தேர்வு வாரியம் மீண்டும் சிக்கலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இயங்கி வரும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 2340 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் 81 பணியிடங்கள் பின்னடைவு இடங்கள். பற்றாக்குறை இடங்கள் 4, தற்போது நடைமுறையில் உள்ள இடங்கள் 2252, மாற்றுத் திறனாளிகளுக்கான இடங்கள் 3, என மொத்தம் 2340 இடங்கள் காலியாக உள்ளன.

இந்த இடங்களில் புதிய நபர்கள் நேரடியாக நியமிப்பதற்கான அறிவிப்பை  ஆசிரியர் தேர்வு வாரியம் தனது இணைய தளத்தில் கடந்த 28ம் தேதி  வெளியிட்டது. மேற்கண்ட உதவி பேராசிரியர் பணிகளுக்கு செப்டம்பர் 4ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அனைத்து விவரங்களும் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி தற்போது அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடத்துக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்க தயாராகி வருகின்றனர். ஆனால் மேற்கண்ட உதவி பேராசிரியர் நியமனங்களில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் அரசு மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1070 உதவிப் பேராசிரியர்களுக்கான அறிவிப்பு கடந்த 2013ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதற்கான பணி நியமனங்கள் 2015ம் ஆண்டு நடந்தது. இந்த நியமனத்தின்போது செட், நெட் தேர்வுகளில் தேர்ச்சி பெறாமல் வெறும் பிஎச்டி (முனைவர் பட்டம்) கல்வித் தகுதியுடன் பணியில் சேர்ந்தவர்களுக்கு சிக்கலை உண்டாக்கும் வகையில் ஏற்கெனவே உச்சநீதி மன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பை உறுதி செய்யும் வகையில் சென்னை உயர்நீதி மன்றமும் 8.11.2017ம் ஆண்டு ஒரு தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில், கடந்த 28ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள  2340 பணியிடங்களுக்கான அறிவிப்பிலும் மேற்கண்ட தீர்ப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கருத்தில் எடுத்துக் கொண்டுதான் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில பட்டதாரிகள் பல்கலைக் கழக மானியக்குழுவிடம் இருந்து பதில்கள் பெற்றுள்ளனர்.  மேலும் பல பல்கலைக் கழகங்களில் இருந்தும் பல பதில்களை பெற்றுள்ளனர்.  இதன்படி 2009ம் ஆண்டு ரெகுலேஷன், பிஎச்டி தொடர்பாக  நீதி மன்றங்கள் அளித்த தீர்ப்புகளால் சிக்கல் எழுந்துள்ளது.

ஒவ்வொரு பல்கலைக் கழகமும்2009ம் ஆண்டு ரெகுலேஷன் பிஎச்டி பட்டப் படிப்பை, எந்த ஆண்டு அமல்படுத்தி பட்டங்களை வழங்கியுள்ளன என்றும் பதில்களை பெற்றுள்ளனர். அதில் தெரிவிக்கப்பட்டுள்ள பதில்கள் மற்றும் விவரங்களால் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சிக்கல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல காலி பணியிடங்களை நிரப்பு வதற்கான அறிவிப்பை வெளியிட்டதிலும் சிக்கல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதாவது, குறிப்பிட்ட பல்கலைக் கழகங்களில் 2009ம் ஆண்டு ரெகுலேஷனை அமல்படுத்துவதற்கு முன்பாக அந்த பல்கலைக் கழகங்களில் இருந்து பிஎச்டி பட்டம் பெற்றவர்கள் கட்டாயம் செட் அல்லது நெட் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் என்று கடந்த 16.3.2015ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆர்டிஐ தவலின் மூலம் பெறப்பட்ட பதில்களில், சென்னைப் பல்கலைக் கழகம் 1.7.2010, சேலம் பெரியார் பல்கலைக் கழகம் 23.4.2013, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் 5.11.2009, அழகப்பா பல்கலைக் கழகம் 3.11.2011, அன்னை தெரசா பல்கலைக் கழகம் ஜூன் 2009 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தியுள்ளன என்று தெரியவருகிறது.

எனவே, மேற்குறிப்பிட்ட தேதிக்கும் முன்பாக பிஎச்டி பட்டம் பெற்றவர்கள் மற்றும் 2009ம் ஆண்டு ரெகுலேஷன்களை  நடைமுறைப்படுத்துவதற்கு முந்திய தேதியில் பிஎச்டி பட்டம் பெற பதிவு செய்தவர்கள் கட்டாயம் செட் மற்றும் நெட்தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று பல்கலைக் கழக மானியக் குழுவும், உச்சநீதி மன்றமும் எச்சரித்துள்ளன. இதைவிட்டு, உயர்கல்வித்துறையும், ஆசிரியர் தேர்வு வாரியமும் கடந்த முறைபோல உதவி பேராசிரியர் நியமனத்தில் விதிகளை பின்பற்றாமலும், உச்ச நீதி மன்ற தீர்ப்பை பின்பற்றாமல் நியமனம் செய்தால் சிக்கலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். இது இது தவிர பல்கலைக் கழக அதிகாரிகளும் சிக்கலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

5 comments:

  1. அரசு துறைகளில் உள்ள எல்லா பணி நியமனங்களை போல , உதவி பேராசிரியர் பணி நியமனங்களையும் போட்டி தேர்வு மூலமாக நிரப்பலாம் .

    ReplyDelete
  2. சிக்கல் செய்து.....வழக்குகள் போட்டு தடுப்பார்கள்....
    எந்த காரியமும் இப்படித்தான்....

    போக..போக..தெரியும்....

    ஆக.....படித்து முடித்தவர்களுக்கு...இனி நோய்கள் வர துவங்கும் நேரம்....

    ஆண்டவன் துணை இருக்கட்டும்...

    ReplyDelete
  3. entha posting a than ivanunga potanunga.. cal for vidavendiyathu.. yarayavathu case podavachu iluthadichi padichavangala eamathuvathu..very worst cheating govt..

    ReplyDelete
  4. Conduct exam for the qualified candidates those who cleared NET/SET or Ph.D

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி