வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! - kalviseithi

Nov 5, 2019

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!


வங்கக் கடலில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. அதனால், 'மீனவர்கள் அந்தமான் கடற்பகுதிக்கு செல்ல வேண்டாம்' என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை, அக்டோபர், 16ல் துவங்கியது; இரண்டு வாரங்கள் வரை, தமிழகத்தில் பரவலாக பெய்தது. ஆனாலும், வட மாவட்டங்களில், மழை குறைவாகவே பெய்துள்ளது. இந்நிலையில், அரபிக்கடலில் இரண்டு புயல்கள் உருவாகின. முதலில் உருவான, 'கியார்' புயல், ஒரு வாரத்திற்கு முன், ஓமன் நாட்டில் கரை கடந்தது. அதன்பின், இலங்கை அருகே உருவான, 'மஹா' புயல், அரபிக்கடலில், மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் இடையே சுழல்கிறது. இந்தப்புயல், நாளை மறுநாள் குஜராத் அருகே கரையை கடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா மாநில கடலோர பகுதிகளுக்கு, புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுஉள்ளது. இதற்கிடையில், அந்தமான் அருகே, புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இரண்டு நாட்களில் வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். பின், புயலாக மாற வாய்ப்புள்ளது என, வானிலை ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

தற்போதைய நிலவரப்படி, காற்றழுத்த பகுதி, ஒடிசா மற்றும் ஆந்திராவை நோக்கி நகரும் என, கணிக்கப் பட்டுள்ளது.'மஹா' புயல் கரையை கடந்த பின், இந்திய பெருங்கடலில் ஏற்படும் வானிலை மாற்றத்துக்கு ஏற்ப, காற்றழுத்த பகுதி திசை மாறலாம். வானிலை நிலவரம் குறித்து, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் அளித்த பேட்டி:அந்தமானில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, இரண்டு நாட்களில் வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய கிழக்கு வங்க கடலில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். தற்போதைய நிலவரப்படி, வெப்ப சலனம் காரணமாக, தென் மாவட்டங்களில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும். காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, இன்று அந்தமான் கடற்பகுதிக்கும்; நாளை முதல், 8ம் தேதி வரை, மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம்.இவ்வாறு, அவர் கூறினார்.நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக, ராஜபாளையம் மற்றும் சூலுாரில், 6 செ.மீ., மழை பெய்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி