சிறுபான்மையினர் நடத்தும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தன்னிச்சையாக ஆசிரியர்களை நியமிக்க அதிகாரம் இல்லை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 7, 2020

சிறுபான்மையினர் நடத்தும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தன்னிச்சையாக ஆசிரியர்களை நியமிக்க அதிகாரம் இல்லை


சிறுபான்மையினர் நடத்தும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் தன்னிச்சையாக ஆசிரியர்களை நியமிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கி உள்ளது. இதனால், மாநில அரசு நியமித்த ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது. மேற்குவங்க மாநில அரசின் சார்பில், மேற்குவங்க மதரஸா சேவை ஆணையச் சட்டம் - 2008 கொண்டுவரப்பட்டு, ஒரு ஆணைக் குழு உருவாக்கப்பட்டது. அதன்படி, அரசின் நிதிஉதவி பெற்று நடத்தப்படும் மதரஸா பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்கும் போது, மாநில அரசால் உருவாக்கப்பட்ட ஆணைக்குழு பரிந்துரைக்கும் நபர்களையே ஆசிரியர்களாக நியமிக்க முடியும்.
ஆனால், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கும், அதுதொடர்பான வழிகாட்டுதல் முறைகளை பின்பற்றுவதற்கும் சில மதரஸா பள்ளி நிர்வாகங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

மாநில அரசின் ஆணைக்குழு பரிந்துரையின்படி ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக நியமிக்க முடியவில்லை என்று, பல்வேறு மதரஸாக்களின் நிர்வாகக் குழு சார்பில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், 'மேற்குவங்க மதரஸா சேவை ஆணையச் சட்டம் - 2008 அரசியலமைப்பிற்கு முரணானது. அனைத்து சிறுபான்மையினருக்கும் தங்களுக்கு விருப்பமான கல்வி நிறுவனங்களை நிறுவுவதற்கும், நிர்வகிப்பதற்கும் உள்ள உரிமையை மீறுவதாக உள்ளது. எனவே அந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்' என்று, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 'அனைத்து சிறுபான்மையினருக்கும் தங்களுக்கு விருப்பமான கல்வி நிறுவனங்களை நிறுவுவதற்கும், நிர்வகிப்பதற்கும் உரிமை உண்டு' என்று கடந்த 2017ல் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, புதிய சட்டத்தின்படி நியமிக்கப்பட்ட ஆசிரியர்களால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், 'மாநில அரசால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது. மதரஸா தங்கள் விருப்பத்தின்படி அரசின் நிதியை பெற்றுக் கொண்டு செயல்பட முடியாது. அதனால், மாநில அரசின் ஆணைக்குழு நியமித்த ஆசிரியர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும்' என்று கோரப்பட்டது.

அப்போது, ஆசிரியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கியதுடன், இறுதி உத்தரவு வரும் வரை அவர்களை வேலையில் இருந்து நீக்கி, அவர்களுக்கு சம்பளத்தை விடுவிக்க வேண்டாம் என்று மாநில அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், இவ்வழக்கால், 2,600க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்பமுடியாமல் இருந்த நிலையில், மே 2018-இல் உச்சநீதிமன்றம் மேற்கண்ட பணியிடங்களை நிரப்ப அனுமதி அளித்தது. இந்நிலையில், மேற்கு வங்காள மதரஸா சேவை ஆணையச் சட்டம், 2008ன் அரசியலமைப்பின்படி செல்லுபடியாகுமா? என்பதை தீர்மானிக்கும் இவ்வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், 'சிறுபான்மையினர் நடத்தும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், அவர்கள் தன்னிச்சையாக ஆசிரியர்களை நியமிக்க முடியாது.

அரசின் உதவியுடன் இயங்கும் சிறுபான்மையினர் கல்வி நிலையங்கள் தாங்களாகவே ஆசிரியர்கள் உள்ளிட்டோரை நியமிக்க இயலாது. அவர்களுக்கு முழு அதிகாரம் இல்லை' என்று தீர்ப்பளித்தனர். உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பின் மூலம் மாநில அரசு இயற்றிய மேற்குவங்க மதரஸா சேவை ஆணையச் சட்டம் - 2008படி உருவாக்கப்பட்டுள்ள ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது உருதியாகியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி