`தனியார் பள்ளிகளை ஏற்று நடத்தத் தயங்க மாட்டோம்!’ -ஆசிரியர் நியமனத்தில் கொந்தளித்த முதல்வர்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 11, 2020

`தனியார் பள்ளிகளை ஏற்று நடத்தத் தயங்க மாட்டோம்!’ -ஆசிரியர் நியமனத்தில் கொந்தளித்த முதல்வர்!!


தனியார் பள்ளி நிர்வாகத்தினர் தங்கள் விருப்பப்படி ஆசிரியர்களை நியமனம் செய்வதாகப் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக அரசுக்கும் தனியார் பள்ளி நிர்வாகக் கூட்டமைப்பினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

கேரளாவில் அரசின் நிதி உதவியுடன் செயல்படும் பள்ளி நிர்வாகங்களுக்கும் அரசுக்கும் இடையே மோதல் வெடித்திருக்கிறது. கடந்த 7-ம் தேதி கேரள சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், நிதி அமைச்சர் தாமஸ் ஐசக், ஆசிரியர் நியமனம் தொடர்பாகத் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

பட்ஜெட் உரையில், ``கேரளக் கல்வித்துறையின் விதிகளுக்கு மாறாகப் பள்ளி ஆசிரியர்களின் நியமனங்களில் அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்படுகின்றன. அரசு, ஆசிரியர்களை நியமிக்கும் முன்பாக பள்ளி நிர்வாகங்களே அதை தங்கள் கையில் எடுக்கின்றன. இனிவரும் காலங்களில், ஆசிரியர் நியமனங்களை அரசே மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறது’’ எனத் தெரிவித்தார்.

அரசின் இந்த முடிவுக்குக் கேரள தனியார் பள்ளி நிர்வாகங்களின் கூட்டமைப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். `அரசு தன்னுடைய முடிவை மாற்றிக் கொள்ளாவிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதுடன் அரசுக்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபடுவோம்' எனத் தெரிவித்தனர்.

தனியார் பள்ளி நிர்வாகத்தினரின் இந்த அறிவிப்புக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், ``அரசின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு ஆசிரியர் நியமனங்களை தனியார் பள்ளி நிர்வாகத்தினர் மேற்கொள்ள வேண்டும். அதைச் செய்யத் தவறினால் தனியார் பள்ளிகளை அரசே ஏற்று நடத்தத் தயங்காது’’ என எச்சரித்தார்.

இதுதொடர்பாக கேரள தனியார் பள்ளி நிர்வாகங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான மானி கொல்லம் கூறுகையில், ``தனியார் பள்ளி நிர்வாகங்களின் பிரச்னை தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் தவறாகப் புரிந்துகொண்டதாலேயே கடுமையாகப் பேசியிருக்கிறார். ஆசிரியர் நியமனங்கள் எந்த விதிமுறையையும் பின்பற்றாமல் நடப்பதுபோல நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் ஊதிப்பெரிதாக்கி விட்டார். அதில் உண்மை கிடையாது.

அரசின் சட்டத்துக்கு உட்பட்டே ஆசிரியர் நியமனங்கள் நடக்கின்றன. இதுதொடர்பாக அனைத்துத் தனியார் பள்ளி நிர்வாகங்களையும் அரசு அழைத்துப் பேச வேண்டும். யாராவது தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கலாம். அதைவிடுத்து, பள்ளிகளை எடுத்துக்கொள்வோம் என்று பேசுவது சரியல்ல. அப்படி எடுக்க நினைத்தால் பொதுப்பணித்துறை நிர்ணயிக்கும் வாடகையைக் கொடுத்துவிட்டு 3,000 தனியார் பள்ளிகளையும் அரசே எடுத்துக் கொள்ளட்டும்’’ என்றார் காட்டமாக!

4 comments:

  1. kerala government educational system is very best encouraged to government schools
    Tamilnadu!!!?

    ReplyDelete
  2. ஐயா எதை வேண்டுமானாலும் ஏற்று நடத்துங்கள். பாவப்பட்ட மக்களுக்கு வேலை தாருங்கள். எதை எடுத்தாலும் முறைகேடு. அதை தவிர்த்து மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள். அப்போது குடும்பங்கள் வாழும் உங்களை வாயாற வாழ்த்துவார்கள்.

    ReplyDelete
  3. இங்கு செய்ய மாட்டார்கள்

    ReplyDelete
  4. Tamilnadu gives importance only to tasmac incomes

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி