கரோனா வைரஸை சீனா கட்டுப்படுத்தியது எப்படி? - kalviseithi

Mar 22, 2020

கரோனா வைரஸை சீனா கட்டுப்படுத்தியது எப்படி?

சீனாவின் ஹுபெய் மாகாணம், வூஹான் நகரில் கடந்த நவம்பரில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக சுதாரித்து கொண்ட சீன அரசு கடுமையான நடவடிக்கைகளை அமல்படுத்தியது. வூஹான் நகரமும் சுற்று வட்டார பகுதிகளும் சீல் வைக்கப்பட்டன. பொது போக்குவரத்து முடக்கப்பட்டது. வூஹான் நகரம் முழுவதும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டன. ராணுவ மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


சீனாவில் ஒட்டுமொத்தமாக 81,008 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3,255 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சீன அரசு மேற்கொண்ட அதிதீவிர நடவடிக்கைகளால் கரோனா வைரஸ் பரவுவது முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


இந்த வைரஸின் பிறப்பிடமான வூஹான் நகரில் கடந்த சில நாட்களில் புதிதாக ஒருவருக்குகூட வைரஸ் தொற்று ஏற்படவில்லை. தற்போதைய நிலையில் சுமார் 1,000 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் உள்ளனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் அனைவரையும் குணப்படுத்த முடியும் என்று சீன மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


அடங்காமல் பரவிய கரோனா வைரஸை சீனா எவ்வாறு கட்டுப்படுத்தியது என்பது குறித்து அந்த நாட்டை சேர்ந்த சிஜிடிஎன் தொலைக்காட்சி சேனல் சிறப்பு செய்தியை ஒளிபரப்பியது. அதில் கூறியிருப்பதாவது:


சில மாதங்களுக்கு முன்பு வூஹானில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. நகரின் அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பி வழிந்தன. கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் தோராயமாக 3 பேருக்கு வைரஸை பரப்பினார். வைரஸ் தொற்று ஏற்பட்ட அனைவரும் இதேபோல வைரஸை பரப்பி அடுத்த சில நாட்களில் நோயாளிகளின் எண்ணிக்கை 3,500-ஐ தாண்டியது.


இதைத் தொடர்ந்து மக்களின் நடமாட்டத்தை தடுக்க சீன அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. வூஹான் நகரமும் சுற்றுவட்டார பகுதிகளும் சீல் வைக்கப்பட்டன. இது அராஜகம், மனித உரிமை மீறல் என்று பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டினர். இப்போது சீனாவின் அணுகுமுறையை உலக நாடுகள் புரிந்து கொண்டுள்ளன.


கடந்த 2001 செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்கா மீது அல்-காய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் விமான நிலையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல் செய்யப்பட்டன. மக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு விமான பயணிகள் தங்கள் சுதந்திரத்தை விட்டுக் கொடுத்தனர்.


கரோனா வைரஸ் விவகாரத்திலும் சீன அரசு இதே அணுகுமுறையைக் கடைப்பிடித்தது. கோடிக்கணக்கான மக்களின் நலனை கருத்திற் கொண்டு வைரஸ் பரவாமல் தடுக்க நகரங்கள் சீல் வைக்கப்பட்டன. தொழிற்சாலைகள் மூடப்பட்டன. பொது போக்குவரத்து முடக்கப்பட்டது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது. இதன் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு வைரஸ் பரவுவது தடுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரின் உயிரிழப்பு தடுத்து நிறுத்தப்பட்டது.


ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் வூஹான் முன்னுதாரணமாக விளங்குகிறது. அந்த நகர மக்கள் பல மாதங்கள் வீடுகளிலேயே முடங்கியிருந்தனர். இதை தங்கள் கடமையாக அவர்கள் கருதினர். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சீனாவின் அணுகுமுறையை அனைத்து நாடுகளும் பின்பற்றுவது அவசியம்.


இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி