நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான முதலமைச்சர் அவர்களின் இன்றைய அறிவிப்பு! - kalviseithi

Mar 22, 2020

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான முதலமைச்சர் அவர்களின் இன்றைய அறிவிப்பு!


சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு – நாள்: 21.03.2020


மாண்புமிகு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி , தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர நீட் தேர்வு முறை 2016 - 17ஆம் கல்வி ஆண்டிலிருந்து மத்திய அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டது . மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தீவிர முயற்சியினால் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து அந்த ஆண்டு விதிவிலக்கு வழங்கப்பட்டது .

மாண்புமிகு அம்மாவின் அரசும் , பொது மக்களும் , தமிழ்நாடும் , நீட் தேர்வை கடுமையாக எதிர்த்து வருகின்றோம் . 31 . 1 . 2017 அன்று , நீட் தேர்வினை எதிர்த்து ஒரு சட்டமுன்வடிவினை இதே சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி , மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது . அதே வேளையில் , இந்த நீட் தேர்வு தமிழ்நாட்டு மாணவர்களை , குறிப்பாக கிராமப்புற ஏழை , எளிய மாணவர்களை எவ்வாறு பாதிக்கும் என்பதை விளக்கி , உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டு , மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களைக் கொண்டு வாதாடப்பட்டும் வருகிறது . நீட் தேர்வை அறிமுகப்படுத்திய பிறகு , அத்தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது . இந்த நிலை வரும் ஆண்டுகளில் தொடரக்கூடாது என்பதில் மாண்புமிகு அம்மாவின் அரசு உறுதியாக உள்ளது .

மாண்புமிகு அம்மாவின் அரசு , இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி வருகின்றது . இது மட்டுமல்லாமல் , அரசுப் பள்ளிகள் , மாநகராட்சி பள்ளிகள் , நகராட்சி பள்ளிகள் , ஆதிதிராவிடர் , பழங்குடியினர் நலப் பள்ளிகள் , கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள் , வனத் துறை பள்ளிகள் ஆகிய பள்ளிகளில் , 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று நீட் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு பிரத்யேகமாக ஒரு உள் ஒதுக்கீடு கொடுக்க வகை செய்யும் சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்ற மாண்புமிகு அம்மாவின் அரசு பரிசீலித்து வருகிறது .

இச்சட்டத்தை இயற்றுவதற்கு வகை செய்ய ஏதுவாக தேவைப்படும் அனைத்து புள்ளி விவரங்களையும் தொகுத்து உரிய பரிந்துரையையும் தமிழ்நாடு அரசுக்கு வழங்க , ஓய்வுபெற்ற ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் , ஒரு ஆணையம் அமைக்கப்படும் . அந்த ஆணையத்தில் , பள்ளிக் கல்வி , மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை , சட்டம் ஆகிய துறைகளின் அரசுச் செயலாளர்களும் , பள்ளிக் கல்வித் துறையினால் நியமிக்கப்படும் 2 கல்வியாளர்களும் உறுப்பினர்களாக இருப்பார்கள் . மருத்துவக் கல்வி இயக்குநர் இவ்வாணையத்தின் உறுப்பினர் - செயலராக செயல்படுவார் . மேற்கூறிய பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் குறைந்த அளவிலேயே சேர்வதற்கான காரணங்களை ஆராய்ந்து , அவர்களின் சமூக பொருளாதார நிலையினை மதிப்பீடு செய்து , இந்நிலையை சரி செய்ய , மாண்புமிகு அம்மாவின் அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை இந்த ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்யும் . தனது பரிந்துரையை ஒரு மாத காலத்திற்குள் இவ்வாணையம் அரசுக்கு சமர்ப்பிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் .

வெளியீடு : இயக்குநர் , செய்தி மக்கள் தொடர்புத்துறை , சென்னை - 9

3 comments:

  1. Tamilnadu teachers are also want leave sir.. Recommend to tamilnadu government sir.,.

    ReplyDelete
  2. Tamilnadu teachers are also want leave sir.. Recommend to tamilnadu government sir.,.

    ReplyDelete
  3. This is not fare what abt other students who are not studying in gn schl !!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி