உலகின் சுத்தமான பெட்ரோல், டீசல் விற்பனைக்கு மாறிய இந்தியா! - kalviseithi

Apr 2, 2020

உலகின் சுத்தமான பெட்ரோல், டீசல் விற்பனைக்கு மாறிய இந்தியா!இன்று ஏப்ரல் 1-ம் தேதி முதல் உலகின் சுத்தமான பெட்ரோல், டீசல் விற்பனைக்கு இந்தியா மாறியிருக்கிறது. அதாவது யூரோ-4 ரக எரிபொருள்களில் இருந்து நேரடியாக யூரோ-6 ரக எரிபொருள்களுக்கு இந்தியா மாறியுள்ளது.

உலகில் எந்த நாடும் மிகக்குறைவாக 3 ஆண்டுகளுக்குள் இத்தகைய மாற்றத்தைக் கொண்டுவந்தது இல்லை. ஆனால், இந்தியா மட்டுமே குறுகிய காலத்தில் அதாவது யூரோ-4 எரிபொருள் கொண்டுவந்த அடுத்த 3 ஆண்டுகளுக்குள் யூரோ-5 எரிபொருட்களுக்குச் செல்லாமல் நேரடியாக யூரோ-6 எரிபொருளுக்கு மாறியிருக்கிறது.

உலகில் சில நாடுகள் மட்டுமே இதுபோன்ற அதி சுத்தமான பெட்ரோல், டீசல் பயன்பாட்டில் வைத்துள்ளன. எரிபொருட்களில் சல்பரின்(கந்தகம்) அளவை குறைத்து வெளியிடுதலே மிக சுத்தமான பெட்ரோல், டீசல் கொண்டுவருவதன் நோக்கமாகும். இதன் மூலம் காற்று மாசு பெருமளவு குறையும்.

இதுகுறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் சஞ்சய் சிங் கூறுகையில், ” பிஎஸ்-6 வாகனங்களுக்கு ஏற்றார்போல் சல்பர் குறைவாக இருக்கும் பெட்ரோல், டீசலை உற்பத்தி செய்யும் பெரும்பாலான சுத்திகரிப்பு நிலையங்கள் தொடங்கிவிட்டன. சுத்திகரிக்கப்படும் ஒவ்வொரு துளி எரிபொருளிலும் சல்பரின் அளவைக் கண்காணிக்க நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக இருக்கும்.

இன்று முதல் நாம் 100 சதவிகிதம் பிஎஸ்-6 பெட்ரோல் மற்றும் டீசல் வழங்குகிறோம். நாட்டில் 68,700 க்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்கள் இன்று முதல் தூய்மையான எரிபொருளை விற்பனை செய்கின்றன.

நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பிஎஸ்-6 ரக பெட்ரோல், டீசல் அனைத்து முகவர்களிடம் கிடைக்கத் தொடங்கிவிடும். அதேசமயம், இந்த மாற்றம் காரணமாக எரிபொருட்களின் சில்லறை விற்பனை விலையில் எந்த மாற்றமும் இல்லை.

கடந்த 6 ஆண்டுகள் நீண்ட பயணத்தில் பிஎஸ்-4 ரக பெட்ரோல், டீசலில் இருந்து பிஎஸ்-5 ரகத்துக்குச் செல்லாமல் நேரடியாக பிஎஸ்-6 ரக எரிபொருட்களுக்கு மாறுகிறோம்.

இதை கடந்த 3 ஆண்டுகளில் எட்டியுள்ளோம். கடந்த 2010-ம் ஆண்டில் பிஎஸ்-4 ரக எரிபொருள் அறிமுகம் செய்யும் போது பெட்ரோல், டீசலில் சல்பர் 350 பிபிஎம் இருந்தது. ஆனால் பிஎஸ்-6 ரக பெட்ரோல், டீசலில் 50 பிபிஎம் அளவுக்குக் குறைக்கப்படும்

இந்த சுத்திகரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக எண்ணெய் நிறுவனங்கள் ரூ.35 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளன, ஏற்கெனவே சுத்திகரிப்பு மேம்பாட்டுக்காக ரூ.60 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எந்த விதமான இடையூறும் இன்றி பிஎஸ்-6 பெட்ரோல், டீசல் நாடு முழுவதும் இன்று முதல் கிடைக்கும். உலகில் மிகவும் தரமான பெட்ரோல், டீசலை நம் நாடு வழங்கும். உலகின் எந்த நாட்டிலும் இதுபோன்ற தரமான பெட்ரோல், டீசலை பெற முடியாது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் சிலவற்றில் மட்டுமே இத்தகைய தரமான எரிபொருட்களைப் பெற முடியும்” என்றுஐஓசி தலைவர் தெரிவித்தார்

ஐ.ஓ.சி தவிர, பாரத் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட் (பிபிசிஎல்), இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட் (ஹெச்பிசிஎல்) ஆகியவையும் ஏப்ரல் 1 காலக்கெடுவுக்கு முன்பே பிஎஸ்- VI தர எரிபொருளை வழங்கத் தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி