லேசான கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சைக்கு அனுமதி: மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால் தமிழக அரசு அவசர நடவடிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 6, 2020

லேசான கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சைக்கு அனுமதி: மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால் தமிழக அரசு அவசர நடவடிக்கை


தமிழகத்தில் மருத்துவமனைகள் நிரம்பி வருவதன் எதிரொலியாக, லேசான கொரோனா அறிகுறி இருப்பவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்துவது  தொடர்பாக வழிகாட்டி நெறிமுறையை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சு விட சிரமம் இருப்பவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவது குறித்தும் அதில் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை முறையாக கடைபிடிக்காததன் விளைவாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில், சென்னை மாநகரம் தான் முதலிடத்தில் உள்ளது. மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் ஒவ்வொரு நாளும் பாதிப்பு எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்து கொண்டே இருக்கிறது.

இதனால், சென்னையில் 2008 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் நிரம்பி வழிகிறது. இதனால், பாதிக்கப்பட்ட நபர்களை மருத்துவமனைகளில் சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ளதால், அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை மேற்கொள்வது என்பது குறித்து அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து, கொரோனா அறிகுறி உள்ளவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்தி கொள்வது எப்படி என்பது தொடர்பாக வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

அந்த அரசாணையில் அவர் கூறியிருப்பதாவது: மிகவும் லேசான அறிகுறி உள்ளவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்துவதற்கான  தற்போதுள்ள வழிகாட்டுதல்களின்படி, நோயாளிகள் மிகவும் லேசான, மிதமான அல்லது கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சைக்கான மருத்துவ வசதி செய்து தரப்படுகிறது. இருப்பினும் கொரோனா அறிகுறி இருப்பவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்காக வீட்டில் தேவையான வசதியைக் கொண்டவர்கள், வீட்டு தனிமைப்படுத்தலுக்கான விருப்பம் உள்ளவர்கள் வீட்டிலேயே இருக்கலாம்.

* வீட்டு தனிமைப்படுத்தலுக்கான சிகிச்சையளிக்கும் மருத்துவ அதிகாரியால் அந்த நபரை மிகவும்
லேசான அறிகுறி உள்ளவர் என்று சான்றளிக்க வேண்டும். 
* இதுபோன்றவர்களில் சுயமாக தனிமைப்படுத்தப்படுவதற்கும் குடும்ப தொடர்புகளை தனிமைப்படுத்துவதற்கும் தேவையான வசதியை அவர்களின் இல்லத்தில் கொண்டிருக்க வேண்டும்.  இணைக்கப்பட்ட / தனி கழிப்பறையுடன் நன்கு காற்றோட்டமான தனி அறை கிடைப்பது அவசியம். 
* கவனிப்பை வழங்க 24 மணி நேரம், 7 நாட்கள் ஒரு பராமரிப்பு கொடுப்பவர் இருக்க வேண்டும். பராமரிப்பாளருக்கும், மருத்துவமனைக்கும் இடையிலான ஒரு தொடர்பு இணைப்பு இருக்க வேண்டும்.
* கவனிப்பவர் மற்றும் அனைத்து நெருங்கிய தொடர்புகளும், வழிகாட்டி நெறிமுறையின்படி மற்றும் சிகிச்சையளிக்கும் மருத்துவ அதிகாரியால் பரிந்துரைக்கப்பட்டபடி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் முற்காப்பு மருந்தை எடுக்க வேண்டும்.
* நோயாளி மற்றும் பராமரிப்பாளர்களுக்கு துத்தநாகம் 20 மி.கி 10 நாட்களுக்கு, மாத்திரை, வைட்டமின் சி 100 மி.கி / மல்டிவைட்டமின் ஆகியவற்றை 10 நாட்களுக்கு சாப்பிட வேண்டும். நீலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீர் உட்பட 10 நாட்களுக்கு வழங்க வேண்டும்.
* ஆராக்கிய சேது செயலியை தனது மொபைலில் பதவிறக்கம் செய்ய வேண்டும். 24 மணி நேரமும் ப்ளூடுத் ஆன் செய்து இருக்க வேண்டும்.
* வீட்டில் இருக்கும் நோயாளி தங்களது உடல்நலன் குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரியிடம் அடிக்கடி தகவல் கொடுத்து கொண்டே  இருக்க வேண்டும். அவரது உடல் நலனை அந்த குழு கண்காணித்து கொண்டே இருக்கும்.
* நோயாளி மற்றம் அவரது பராமரிப்பாளருக்கு அறிகுறி அதிகமானாலோ, அதாவது 102 டிகிரிக்கு மேல் காய்ச்சல், உயர் ரத்த அழுத்தம், மனநிலை ரீதியான குழப்பம், சிறுநீர் கழிப்பது குறைவது உள்ளிட்ட பிரச்சனை இருந்தால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்.
* அறிகுறி இருப்பவர் மற்றும் அவரது பராமரிப்பாளர்கள் அனைத்து நேரங்களில் 3 லேயர் மாஸ்க் அணிந்து இருக்க வேண்டும். அவர்கள் தங்களது கைகளை சோப் போட்டு 40 நொடிகளுக்கு குறையாத அளவுக்கு அடிக்கடி கழுவ வேண்டும். அறிகுறி இருப்பவர்கள் நீராகாரங்கள் அதிகமாக எடுத்து கொளள வேண்டும். மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளை எடுத்து கொள்ள வேண்டும்.
*  அறிகுறி உள்ளவர்கள் மற்றும் அவரது பராமரிப்பாளர்கள்  தினமும் தனது உடல்நிலை வெப்பத்தை சோதித்து கொண்டே இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நிரம்பி வழியும் சென்னை மருத்துவமனைகள்
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை சுகாதாரத்துறையினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனை, தண்டையார்பேட்டை காலரா மருத்துவமனை, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, அரசு பன்நோக்கு மருத்துவமனை உள்ளிட்டவைகளில் அனுமதித்து வருகின்றனர். சென்னையில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு தினசரி 40 முதல் 60 வரை இருந்த நிலையில், திடீரென்று கடந்த சில நாட்களாக தினசரி 200க்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று ஏற்பட்டு வருகிறது. இதனால், மேற்கண்ட அரசு மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. இந்நிலையில், இடநெருக்கடி காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 67 பேர், தண்டையார்பேட்டை கைலாசம் தெருவில் உள்ள புறநகர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும், இனிமேல் வரும் நோயாளிகளை எங்கு தங்க வைப்பது என சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனை அழைத்துவர ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு ஆம்புலன்ஸ் உள்ளது. ஒரு நோயாளியை அழைத்து கொண்டு மருத்துவமனைகளுக்கு வருவதற்கு 3 மணி முதல் 4 மணி நேரம் ஆகிறது. இந்நிலையில் அவசரமாக வைரஸ் பாதித்த மற்றவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கால தாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, கூடுதல் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி