தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி செய்யப்படும்: தமிழக அரசு அறிவிப்பு - kalviseithi

Jun 2, 2020

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி செய்யப்படும்: தமிழக அரசு அறிவிப்பு


தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளி நல அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மூலம் தெரியப்படுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது; உலகம் முழுவதும் தற்பொழுது மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து காப்பதற்கும் அதன் பரவலை தடுக்கும் வகையில் அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளில் ஒன்றாக தடையுத்தரவு கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் ஜீன் மாதம் 30 ஆம் தேதி வரை ஐந்து முறை நீடிப்பு செய்து பல்வேறு நிறுவனங்கள் குறிப்பாக கல்வி நிறுவனங்களை மூடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


 இக்காலங்களில் பொதுமக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என பலதரப்பட்ட மக்களும் முகக்கவசம் அணிந்தும் அவ்வப்போது சோப்பு மற்றும் கிருமி நாசினிகள் பயன்படுத்தி கைகளை கழுவுதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல், வசிக்கும் இருப்பிடம், வேலை செய்யும் அலுவலகங்கள், பள்ளிகள், நிறுவனங்கள் உட்பட அனைத்து இடங்களையும் கிருமிநாசினி உபயோகம் செய்து தூய்மையாக வைத்துக் கொள்ள அரசால் கேட்டுக் கொள்ளப்பட்டது. தற்போது சிறப்புப்பள்ளியில் பயிலும் 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஜூன் மாதம் 15 ஆம் தேதியிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாற்றுத்திறனாளி மாணவர்களும், சிறப்பு ஆசிரியர்களும், இத்தேர்வில் கலந்துக்கொள்ள அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சிறப்புப்பள்ளி மாணவர்கள் தேர்வு நடக்க இருக்கும் காலத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே விடுதியில் தங்கி பயன்பெறும் சுமார் 800 மாணவர்கள் தங்கள் சொந்த மாவட்டத்திலிருந்து தாங்கள் கல்வி பயிலும் பள்ளிகளுக்கு வருவதற்கு போக்குவரத்துத் துறை மூலம் 49 சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 72 கல்வி நிறுவன மாணவர்கள் பயன்பெறுவர். பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் ஏற்கெனவே தங்கள் இருப்பிடம் அலைபேசி எண் விவரங்களை தங்கள் பள்ளி நிறுவனத்தின் மூலம் இத்துறைக்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து, அனைவருக்கும் தங்கள் மாவட்டத்திலிருந்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு சென்று திரும்பும் வகையில் சிறப்பு பேருந்து வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மாணவர்கள், பெற்றோர் அல்லது பாதுகாவலரும் உடன் பயணம் செய்யலாம். இப்பேருத்தின் மூலம் மாணவர்கள் தங்கள் கல்வி நிறுவனம் அமைந்துள்ள மாவட்டங்களுக்கு 8-ம் தேதி திங்கள் அன்று காலை 08.00 மணிக்கு பயணம் தொடங்கி, அன்று மாலையில் வெளிமாவட்டங்களுக்கு அவர்கள் கல்வி பயிலும் நிறுவனங்களின் விடுதிகளுக்கு சென்றடைவர். மீண்டும் தேர்வு முடிந்தவுடன் தங்கள் சொந்த மாவட்டத்திற்கு 26-ம் தேதி அன்று காலை 08.00 மணிக்கு புறப்பட்டு திரும்ப வந்து அடைவதற்கும் உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பேருந்துகள் புறப்படும் மற்றும் அடையும் இடங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகும். எனவே, பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து மாணவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு இருப்பிடத்திலிருந்து அழைத்து வரவும், மீண்டும் கொண்டு செல்லவும் உரிய ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். இந்த சிறப்புப் பேருந்துகளின் வருகை நேரம், புறப்படும் நேரம் ஆகியவை அனைவருக்கும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் தெரியப்படுத்தப்படும்.

உள்ளூர் மாணவர்கள் தங்கள் சொந்த பொறுப்பில் கல்வி நிறுவனங்களுக்கு வந்து செல்ல வேண்டும். மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர்கள் மற்றும் கல்வி நிறுவனத்தின் தலைமையாசிரியர்கள் கல்வித்துறை அதிகாரிகளுடன் இணைந்து இதர மாவட்டங்களிலிருந்து வரும் மாணவர்கள் மற்றும் இதர மாவட்டத்திற்கு செல்லும் மாணவர்கள் உடல்நிலை பரிசோதனை செய்து பாதுகாப்பாக அவர்களின் சேருமிடத்திற்கு பயணம் மேற்கொள்ள உரிய ஏற்பாட்டினை செய்ய வேண்டும். சிறப்பு பேருந்தில் பயணம் தொடங்கு முன்பு, அனைத்து குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள், பாதுகாவலர்களின் உடல்நிலையினை பரிசோதித்து தொற்று இல்லாமையை உறுதி செய்து கொள்ள வேண்டும். பயணம் மேற்கொள்ளும் பேருந்து இருக்கையில் அறிவுறுத்தப்பட்ட தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படும். பேருந்து பயணம் செய்யும் அனைவரின் நலன் கருதி பேருந்து புறப்படுவதற்கு முன்பு ஒரு மணி நேரம் முன் கூட்டியே குறிப்பிட்ட இடத்தில் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி