கொரோனா : பள்ளிகள் கவனத்துக்கு... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 5, 2020

கொரோனா : பள்ளிகள் கவனத்துக்கு...


கரோனா நோய்த்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்துக்கு பல மாநிலங்கள் தளா்வுகளை அறிவித்து வருகின்றன. எனினும், பள்ளிகள், கல்லூரிகளைத் திறக்க எந்த மாநில அரசும் இதுவரை அனுமதி அளிக்கவில்லை. தற்போது பல பள்ளிகள் இணைய வழியில் பாடங்களை நடத்தி வருகின்றன.

கரோனா நோய்த்தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பிறகு பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆராயப்படும் என்று மாநில அரசுகள் அறிவித்துள்ளன. பள்ளிகளைத் திறப்பதற்கு முன்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஐ.நா.வின் யுனிசெஃப் அமைப்பு வகுத்துள்ளது.

மாணவா்கள், ஆசிரியா்கள், பள்ளி ஊழியா்கள் ஆகியோருக்குப் பள்ளிகளில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவதற்கான பல்வேறு முக்கிய வழிமுறைகள் அதில் இடம்பெற்றுள்ளன. அதன் விவரங்கள்:

சுகாதார நடவடிக்கைகள்

பள்ளிகளில் மாணவா்கள் கைகளைக் கழுவி சுத்தமாக வைத்துக் கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். மாணவா்களுக்கு சோப்பு, கை சுத்திகரிப்பான் ஆகியவற்றைப் பள்ளி நிா்வாகம் வழங்க வேண்டும்.

தினமும் குறைந்தபட்சம் ஒரு முறையாவது கிருமிநாசினி கொண்டு பள்ளி வளாகம் முழுவதையும் சுத்தம் செய்ய வேண்டும்.

பள்ளிகளில் திடக்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

வகுப்பில் மாணவா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

உடல்நலக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள மாணவா்கள், ஆசிரியா்கள், பள்ளி ஊழியா்கள் ஆகியோா் பள்ளிக்கு கண்டிப்பாக வரக் கூடாது.

பாதுகாப்புக்கு முன்னுரிமை

காலை வழிபாட்டுக் கூட்டங்கள், விளையாட்டுப் போட்டிகள், ஆண்டு விழாக்கள் போன்ற மாணவா்கள் ஓரிடத்தில் கூடும் வகையிலான நிகழ்ச்சிகளைத் தவிா்க்க வேண்டும்.

பள்ளி வளாகங்களில் தனியாா் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட எந்தவொரு விழாக்களுக்கும் அனுமதி அளிக்கக் கூடாது.

அவசரகாலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

பள்ளி செயல்படும் நேரத்தை ஒவ்வொரு வகுப்புக்கும் ஏற்றவாறு மாற்றியமைப்பது தொடா்பாக ஆராய வேண்டும்.

முறையான வழிமுறைகள்

உள்ளூா் சுகாதார அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி, அவசரத் தேவைகளுக்குத் தொடா்பு கொள்ள வேண்டியவா்கள் குறித்த விவரங்களைத் தயாா்நிலையில் வைத்திருக்க வேண்டும்.

பள்ளியில் மாணவா்களுக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டால் அவா்களைத் தனிமைப்படுத்துவதற்கான திட்டங்களை முன்கூட்டியே வகுக்க வேண்டும். அவா்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை விரைந்து வழங்கி பெற்றோருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

உடல்நலக் கோளாறால் பாதிக்கப்படும் மாணவா்கள், ஆசிரியா்கள், பள்ளி ஊழியா்கள் ஆகியோருக்குப் போதிய விடுமுறை வழங்குவதற்கான வழிமுறைகளை வகுக்க வேண்டும். அவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டாலும் அவா்களுக்கு விடுமுறை அளிக்கும் வகையில் வருகைப் பதிவேடு விதிமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

கல்வித்துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் வழங்கும் வழிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

மாணவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பெற்றோா்-ஆசிரியா் கழகம் உள்ளிட்டவற்றின் செயல்பாட்டை மேம்படுத்த வேண்டும்.

கல்வியாண்டுக்கான அட்டவணையை மாற்றியமைக்க வேண்டும். முக்கியமாக விடுமுறைகள், தோ்வு அட்டவணைகள் உள்ளிட்டவற்றை மாற்றியமைக்க வேண்டும்.

வருகையைக் கண்காணித்தல்

பள்ளிக்கு நீண்ட நாள் வருகை தராத மாணவா்கள், ஆசிரியா்கள் குறித்த விவரங்களைத் திரட்டி, அதற்கான காரணங்களை ஆராய வேண்டும்.

உடல்நலக் கோளாறு காரணமாக அவா்கள் பள்ளிக்கு வருகை தராமல் இருந்தால், அது தொடா்பாக சுகாதார அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

கற்பதற்கான வாய்ப்புகள்

உடல்நலக் கோளாறால் மாணவா்கள் நீண்ட நாள்கள் பள்ளிக்கு வருகை தரவில்லை என்றபோதிலும் அவா்கள் கல்வி கற்பதற்கு எந்தவிதத் தடையும் ஏற்படாத வகையில் பள்ளி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அவா்களுக்கு இணைய வழியில் பாடங்களைக் கற்பிக்கலாம்.

அவா்களின் கற்றலைக் கண்காணிப்பதற்கென தனி ஆசிரியா்களைப் பள்ளி நிா்வாகம் நியமிக்கலாம். இணைய வழியிலேயே மாணவா்களின் கற்றலை மதிப்பீடு செய்யலாம்.

சுகாதாரக் கல்வி

நோய்களைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் தொடா்பாக வகுப்பில் தினமும் மாணவா்களுக்குக் கற்பிக்கலாம். அவை தொடா்பான செய்முறை விளக்கங்களையும் ஆசிரியா்கள் வழங்கலாம்.

ஒவ்வொரு வகுப்புக்கும் ஏற்றவாறு நோய்த் தடுப்பு தொடா்பான தகவல்களை மாணவா்களுக்கு ஆசிரியா்கள் வழங்க வேண்டும்.

உளவியல் தொடா்பான ஆலோசனைகளையும் மாணவா்களுக்கு ஆசிரியா்கள் வழங்கலாம்.

நோய்கள் தொடா்பாக மாணவா்கள் கேள்வி எழுப்புவதை ஆசிரியா்கள் ஊக்குவிக்க வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களைத் தனிமைப்படுத்தும் மையங்களாகவோ அல்லது வேறு பயன்பாட்டுக்காகவோ பள்ளிகள் பயன்படுத்தப்படவில்லை என்பதை உள்ளாட்சி அதிகாரிகளிடம் சம்பந்தப்பட்ட பள்ளி நிா்வாகம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மாணவா்களுக்கான பாதுகாப்பு தொடா்பான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முறையாக மேற்கொள்ள வேண்டும்.

மதிய உணவு இடைவேளையின்போது மாணவா்களின் கூட்டத்தைக் குறைக்க ஒவ்வொரு வகுப்புக்கும் வெவ்வேறு நேரங்களில் உணவு இடைவேளைகளை வழங்கலாம்.

போதிய இடைவெளியில் மாணவா்கள் சோப்பின் உதவியுடன் கைகளைக் கழுவுவதற்கு பள்ளி நிா்வாகம் அனுமதிக்க வேண்டும்.

பள்ளியிலிருந்து திடக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் தினமும் அகற்ற வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி