ஆன்லைன் கல்வி இல்லாவிட்டால் என்ன? அழகழகாய்ப் புத்தகங்கள்!- பழங்குடி குழந்தைகளுக்காக ஒரு வாசிப்பு இயக்கம்! - kalviseithi

Jun 6, 2020

ஆன்லைன் கல்வி இல்லாவிட்டால் என்ன? அழகழகாய்ப் புத்தகங்கள்!- பழங்குடி குழந்தைகளுக்காக ஒரு வாசிப்பு இயக்கம்!கரோனா ஊரடங்கு காலத்தில் தனியார் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன், லேப்டாப் மூலம் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகின்றன. ஆனால் இத்தகைய வாய்ப்பும் வசதியும் இல்லாத பழங்குடியினக் குழந்தைகள் என்ன செய்வார்கள்?

இதோ, வால்பாறை மலையடிவாரங்களில் வசிக்கும் பழங்குடியினக் குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர், சிறுமியருக்காக 150க்கும் மேற்பட்ட புத்தகங்களை இலவசமாக வழங்கியிருக்கிறது பொள்ளாச்சியில் உள்ள நீதி மற்றும் அமைதிக்கான மையம்.

ஆனைமலைத் தொடர்களை ஒட்டியுள்ள 15 பழங்குடி கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, ‘மகாத்மா காந்தி மாலை நேரக் கல்வி மையம்’ எனும் பெயரில் வகுப்புகளை இந்த மையம் நடத்திவருகிறது. அந்தந்த கிராமங்களில் அதிகப்படியாகப் படித்த மாணவர், மாணவியர் மற்றும் இளைஞர்களைக் கொண்டு இந்த மையங்கள் நடைபெற்று வருகின்றன.

பொதுநல ஆர்வலர்கள் வழங்கும் உதவிகள் மூலம் இந்த மையங்களுக்கு காமிக்ஸ், கதை, மற்றும் அறிவியல் புத்தகங்களை வாங்கித் தருவது, வாசித்து முடித்த புத்தகங்களை வெவ்வேறு மையங்களுக்கு இடையில் பரிமாறிக்கொள்ள ஏற்பாடு செய்வது என்பன உள்ளிட்ட பணிகளை இந்த மையங்கள் செய்கின்றன.

அதன்படி இன்று பொள்ளாச்சியில் உள்ள நீதி மற்றும் அமைதி மையத்திலிருந்து, மகாத்மா காந்தி மாலை நேரக் கல்வி மையங்களைச் சேர்ந்த தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள் புதிதாக 150 புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.

இது தொடர்பாக, நீதி மற்றும் அமைதி மையத்தின் பொறுப்பாளர் தன்ராஜ் கூறுகையில், “இந்தக் குழந்தைகள் ஆனைமலையில் உள்ள சர்க்கார்பதி, குழிப்பட்டி, பூனாட்சி போன்ற மலையடிவார கிராமங்களில் வசிப்பவர்கள். இரவாலர், மலசர், புலையர் உள்ளிட்ட பழங்குடியினங்களைச் சேர்ந்தவர்கள்.

விடுமுறையில் ஆற்றில் மீன் பிடிக்க, மாடு மேய்க்க இக்குழந்தைகள் சென்றுவிடுவார்கள். இவர்களுக்கென்று ஒரு கற்பனை உலகம் இருக்கும். பெரியவர்கள் அதைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். அதை மாற்றுவதற்காக ஒவ்வொரு கிராமத்திலும் படிப்பகம் ஆரம்பித்து சில புத்தகங்களை வழங்கினோம். அவை முழுக்க முழுக்க சிறுவர்களுக்கான கற்பனை வளம் மிக்க கதைகள் அடங்கிய புத்தகங்கள். கரோனா காலத்தில் புதிய புத்தகங்கள் எதுவும் வரவில்லை.

ஆன்லைன் மூலம் கல்வி கிடைப்பது இவர்களுக்குச் சாத்தியமே இல்லை. இந்தச் சூழலில், கோவையைச் சேர்ந்த ஒரு நண்பரின் மகன், தன் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்குப் பதிலாக அதற்கான செலவுத் தொகை ரூ.5 ஆயிரத்தைக் கொடுத்து பழங்குடிக் குழந்தைகளுக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார். இதே சிறுவன்தான் கடந்த ஆண்டும் இந்தக் குழந்தைகளுக்கு வேண்டிய புத்தகங்களை வாங்கிக் கொடுத்தார். அந்தத் தொகையைப் பயன்படுத்தியும், உள்ளூர் பதிப்பகங்கள், நண்பர்கள் உதவியோடுதான் இந்த 150 புத்தகங்களை வாங்கித் தந்திருக்கிறோம். இந்தப் புத்தகங்கள் பழங்குடியினக் குழந்தைகளுக்குப் பயன் தரும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.

மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளின் நாலா திசை மலைகிராமங்களிலும் பழங்குடியினர் பரவிக் கிடக்கிறார்கள். அங்குள்ள குழந்தைகளும் கரோனா விடுமுறையில் என்ன செய்வதென்று தெரியாமல் கரும்பு வெட்டவும், மாடு ஆடு மேய்க்கவும், வெவ்வேறு கூலி வேலைக்கும் சென்று கொண்டிருக்கிறார்கள். அங்கெல்லாமும் இதுபோன்ற படிப்பகங்களை உருவாக்க சமூக ஆர்வலர்கள் உதவலாமே!

1 comment:

  1. Super appadium padikkalam ethilirunthum paddikalam engum padikkalam there is no fullstop for education in one's life....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி