ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழக அரசு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு. - kalviseithi

Jul 27, 2020

ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழக அரசு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு.


ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் தாக்கல் செய்ய அரசுத் தரப்பில் அவகாசம் கேட்டதை அடுத்து ஆகஸ்டு 3-ம் தேதி அன்று தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

கரோனா தொற்று அதிகரித்ததை அடுத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. பள்ளிகள் எப்போது திறக்கும் என்று தெரியாத நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு சிக்கல்கள் உள்ள நிலையில் இதுகுறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

ஆன்லைன் மூலம் வகுப்புகளில் கலந்து கொள்ள மாணவ, மாணவியர் முயலும்போது ஆபாச இணையதள பாப்-அப்கள் வருவதாகவும், ஆன்லைன் வகுப்புக்களுக்குத் தடை விதிக்கக் கோரியும் சரண்யா என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

“ஆன்லைன் வகுப்புகளை மொபைல் மூலமும், லேப்டாப் மூலமும் பார்ப்பதால் மாணவர்களின் கண்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி, 1-ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள்  நடத்தத் தடை விதிக்க வேண்டும்.
6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2 மணி நேரம் மட்டும் வகுப்புகள் நடத்த உத்தரவிட வேண்டும்” எனக் கோரி விமல் மோகன் என்பவரும் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் பதிலளித்த மத்திய அரசு, எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி படிக்கும் குழந்தைகளுக்கு 30 நிமிடங்கள் மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும். 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை தலா 45 நிமிடங்கள் என 2 ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்த வேண்டும் என்றும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 45 நிமிடங்களுக்கு மிகாமல் 4 வகுப்புகள் நடத்தலாம் என நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மத்திய அரசினுடைய பரிந்துரைகளின்படி தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளதா? எனக் கேள்வி எழுப்பினர்.

அப்போது பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முனுசாமி, வருகிற திங்கட்கிழமை வரை கால அவகாசம் வேண்டும் என்றும் அதற்குள் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்..
இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள் அன்று வழிகாட்டு நெறிமுறைகளைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி