கல்லூரி இறுதியாண்டு தேர்வு கட்டாயம்! யுஜிசி திட்டவட்டம் - kalviseithi

Aug 11, 2020

கல்லூரி இறுதியாண்டு தேர்வு கட்டாயம்! யுஜிசி திட்டவட்டம்

கொரோனா வைரஸ் பிரச்னையை காரணமாக வைத்து, கல்லுாரி இறுதியாண்டு தேர்வை, டில்லி, மஹாராஷ்டிரா அரசுகள் ரத்து செய்துள்ளதை ஏற்க முடியாது; தேர்வு நடத்தாமல் வழங்கப்படும் பட்டங்களை அங்கீகரிக்க முடியாது' என, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானிய குழு, உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. எனவே, நாடு முழுதும் உள்ள கல்லுாரி மற்றும் பல்கலைகளில், இறுதியாண்டுத் தேர்வு கட்டாயம் என்பது உறுதியாகி உள்ளது. எனினும் வரும், 14ல் முடிவு தெரியும். 


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, கல்லுாரி மற்றும் பல்கலைகளில், இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை தவிர, மற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

மனு தாக்கல்:


இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை, செப்., 30க்குள் நடத்தி முடிக்கும்படி, அனைத்து கல்லுாரி மற்றும் பல்கலைகளுக்கும், யு.ஜி.சி., உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து, மாணவர்கள் சிலர் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 'கொரோனாவால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். அதன் தாக்கம், இன்னும் குறையவில்லை. இது போன்ற நெருக்கடியான நேரத்தில் தேர்வை நடத்துவது, மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்' என, அந்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 


இதற்கு பதில் அளித்த, யு.ஜி.சி., மற்றும் மத்திய அரசு, 'மாணவர்களின் கல்வி எதிர்காலத்தை பாதுகாக்க, இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை நடத்துவது அவசியம். தேர்வின் போது, போதிய சுகாதார நடவடிக்கைகள் பின்பற்றப்படும்' என, தெரிவித்திருந்தது. இதற்கிடையே, டில்லி, மஹாராஷ்டிரா ஆகிய மாநில அரசுகள், கொரோனா பாதிப்பு காரணமாக, இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தன. 


இந்த வழக்கு, நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, யு.ஜி.சி., சார்பில் ஆஜரான, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடியதாவது: மஹாராஷ்டிரா, டில்லி ஆகிய மாநிலங்கள், கொரோனா பாதிப்பை காரணமாக காட்டி, இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ததை ஏற்க முடியாது; இது, விதிமுறைகளுக்கு எதிரானது. சுமுக தீர்வுபல்கலை விவகாரம் தொடர்பான சட்ட நடைமுறைகளுக்கு எதிராக, மாநில அரசுகள் முடிவு எடுக்க முடியாது.


யு.ஜி.சி.,க்கு மட்டுமே, தேர்வு தொடர்பான முடிவுகளை எடுக்கும் சட்ட ரீதியான அதிகாரம் உள்ளது. இந்த விஷயத்தில், மாநில அரசுகள் தன்னிச்சையாக செயல்பட்டால், அங்கு, மாணவர்களுக்கு வழங்கப்படும் பட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்க முடியாது. மாணவர்கள் நலன் கருதி, இந்த விஷயத்துக்கு விரைவில் சுமுக தீர்வு காணப்படும். இவ்வாறு, அவர் வாதிட்டார்.


சட்ட விதிமுறைகள்:


மாணவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அலோக் ஸ்ரீவத்சவா கூறுகையில், ''செமஸ்டர் தேர்வை நடத்துவது தொடர்பாக, யு.ஜி.சி., மற்றும் மத்திய மனிதவள அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டும் விதிமுறைகள், சட்டப்படி செல்லாது. ஏனெனில், பேரிடர் மேலாண்மை சட்டம் அமலில் உள்ளது,'' என்றார். 


இதையடுத்து, 'பேரிடர் மேலாண்மை சட்டம் முக்கியமா அல்லது யு.ஜி.சி., சட்ட விதிமுறைகள் முக்கியமா என்பது குறித்து, பல்கலை மானிய குழு பதில் அளிக்க வேண்டும். 'இது குறித்து, விரிவான வாதம் நடத்த வேண்டியுள்ளது' என, உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை, வரும், 14ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

1 comment:

  1. Ada exam ma vainga eilla na cancel panunga students every day feeling mind kolapes very pain inthe hart ?????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி