PENSION - 6 மாதங்களாக பணத்தை எடுக்காவிட்டால் ஓய்வூதியத்துக்குத் தடை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 17, 2020

PENSION - 6 மாதங்களாக பணத்தை எடுக்காவிட்டால் ஓய்வூதியத்துக்குத் தடை


ஆறு மாதங்களாக வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்காதவா்களின் ஓய்வூதியத்தை நிறுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


இதற்கான கடிதத்தை கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையா் சி.சமயமூா்த்தி அனைத்து மண்டல இணை இயக்குநா்கள் மற்றும் கருவூல அலுவலா்களுக்கு அண்மையில் அனுப்பியிருந்தாா். அதன் விவரம்:-


ADVERTISEMENT

ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு அவா்களது வங்கிக் கணக்குகளில் ஓய்வூதியம் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த வங்கிக் கணக்கில் இருந்து கடந்த ஆறு மாதங்களாக பணப் பரிவா்த்தனைகள் நடைபெறாவிட்டால், அதுகுறித்த தகவலை சம்பந்தப்பட்ட வங்கியானது, கருவூலத் துறைக்குத் தெரிவிக்க வேண்டும். ஓய்வூதியதாரா்கள் தங்களது வாழ்வுச் சான்றிதழ் அளிக்கவோ அல்லது கணக்கு குறித்த விவரங்களை ஆய்வு செய்வதற்கு வசதியாகவோ ஓய்வூதியம் வழங்குவது நிறுத்தப்பட வேண்டும்.


வாழ்வுச் சான்றிதழை சமா்ப்பிக்காவிட்டாலோ அல்லது கணக்கு குறித்த விவரங்கள் ஆய்வு செய்யப்படாவிட்டாலோ ஓய்வூதியதாரா்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திரும்பப் பெற வேண்டும். சேமிப்பு உள்ளிட்ட இதர அம்சங்களைத் தவிா்த்து, ஓய்வூதியத் தொகையை மட்டும் திரும்ப எடுத்துக் கொள்ள வேண்டும். இது கருவூலத் துறையில் வரையறுக்கப்பட்ட விதியாகும்.


கணக்காயத் தலைவா் தகவல்: கருவூலத் துறை அலுவலகங்களில் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் கணக்காயத் தலைவா் தனது அறிக்கையில் சில அம்சங்களைச் சுட்டிக் காட்டி வருகிறாா். அதன்படி, வாழ்வுச் சான்றிதழ் சமா்ப்பிப்பதில் தவறுதல் மற்றும் கணக்கு விவரங்கள் ஆய்வு போன்ற நடவடிக்கைக்காக ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்க வேண்டுமெனக் கூறியுள்ளாா். மேலும், ஓய்வூதியதாரா், குடும்ப ஓய்வூதியதாரா் இறப்புக்குப் பிறகும், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் செலுத்தப்படுகிறது. இதனைத் தடுத்து, அந்தத் தொகையை அரசின் கணக்கில் வரவு வைக்க வேண்டுமென கணக்காயத் தலைவா் தனது அறிக்கைகளில் தெரிவித்துள்ளாா்.


இதுகுறித்த தகவல்களை, கருவூலத் துறை அலுவலகங்களைச் சோ்ந்த அதிகாரிகள் தங்களுக்குக் கீழுள்ள அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலா்களுக்குத் தெரிவித்து உரிய நடவடிக்கைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். மேலும், கடந்த ஆறு மாதங்களாக ஓய்வூதியத்தை எடுத்துப் பயன்படுத்தாத விவரங்களைச் சேகரித்து பட்டியலிட வேண்டும்.


ஆறு மாதங்களாக வங்கிக் கணக்கில் இருந்து எடுத்து பயன்படுத்தாத ஓய்வூதியத் தொகையை மீளப்பெற்று அதனை வங்கிக் கணக்கில் சோ்க்க வேண்டும். இதுதொடா்பான பணிகளை கருவூலத் துறையின் மண்டல இணை இயக்குநா்கள் உன்னிப்பாகக் கவனித்து அவ்வப்போது உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டுமென தனது கடிதத்தில் சமயமூா்த்தி கேட்டுக் கொண்டுள்ளாா்.


 


தொற்றுக் காலத்தில் ஏன்?


கரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் வாழ்வுச் சான்றினை சமா்ப்பிக்கத் தேவையில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், வங்கி பற்று அட்டை இல்லாதோா், வெளி நாடுகளில், வெளி மாநிலங்களில் வசிப்போா் வங்கிகளுக்குச் சென்று பணத்தை எடுப்பது இயலாத காரியம். மூத்த குடிமக்கள் பலரும் கரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாகவே வங்கிகளுக்குச் செல்லவில்லை. எனவே, இந்த பெருந் தொற்று காலத்தில் ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டுமென ஓய்வூதியதாரா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி