கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான நிலுவைத்தொகை: டிச.14-ம் தேதிக்குள் பள்ளிக்கல்வித்துறை செலுத்த உயர் நீதிமன்றம் இறுதி கெடு! - kalviseithi

Oct 30, 2020

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான நிலுவைத்தொகை: டிச.14-ம் தேதிக்குள் பள்ளிக்கல்வித்துறை செலுத்த உயர் நீதிமன்றம் இறுதி கெடு!

 


கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான 2019-20 ஆம் ஆண்டுக்கான கல்விக் கட்டண நிலுவைத் தொகையை டிச.14-ம் தேதிக்குள் அரசு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. நிலுவைத் தொகையை வழங்காவிட்டால் பள்ளிக் கல்வித்துறைச் செயலர் நேரில் ஆஜராக நேரிடும் என எச்சரித்துள்ளது.

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 11 ஆயிரம் ரூபாயாகக் குறைக்கப்பட்டதை எதிர்த்தும், 2017-18, 2018-19, 2019-20 ஆம் கல்வியாண்டுகளில் கல்விச் செலவை மறு நிர்ணயம் செய்யக் கோரியும், 2020-21 ஆம் ஆண்டுக்கு நியாயமான செலவை நிர்ணயிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரியும், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, 2018 - 2019 ஆம் கல்வியாண்டிற்கான அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்காக ரூ.303.70 கோடி நிலுவைத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், 2019 - 2020 ஆம் கல்வியாண்டுக்கான நிலுவைத் தொகை விரைவில் செலுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 2018-2019 ஆம் ஆண்டுக்கான நிலுவைத் தொகை கிடைக்காத தனியார் பள்ளிகள் மீண்டும் புதிதாக விண்ணப்பிக்கும் பட்சத்தில், பள்ளிகளின் தகுதியைப் பொறுத்து நிலுவைத் தொகை வழங்கப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், 2019-2020 ஆம் ஆண்டுக்கான நிலுவைத் தொகையைச் செலுத்த கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, , 2019-2020 ஆம் ஆண்டுக்கான நிலுவைத் தொகையை டிசம்பர் 14-ம் தேதிக்குள் செலுத்த கடைசி வாய்ப்பு வழங்குவதாகத் தெரிவித்த நீதிபதி, அவ்வாறு செலுத்தாதபட்சத்தில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் நேரில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி