அனைத்துக் குடும்பங்களுக்கும் மருத்துவக் காப்பீடு திட்டம்; மாநில நிதியிலிருந்து தொடங்கும் புதுச்சேரி அரசு: டிசம்பர் 1-ல் அமலாகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 27, 2020

அனைத்துக் குடும்பங்களுக்கும் மருத்துவக் காப்பீடு திட்டம்; மாநில நிதியிலிருந்து தொடங்கும் புதுச்சேரி அரசு: டிசம்பர் 1-ல் அமலாகிறது.

அனைத்துக் குடும்பங்களுக்கும் மருத்துவக் காப்பீடு திட்டத்தை மாநில நிதியிலிருந்து புதுச்சேரி அரசு தொடங்குகிறது. வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் இத்திட்டம் அமலாகிறது.

புதுவையில் 3 லட்சத்து 45 ஆயிரம் குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் ஒரு லட்சத்து 3 ஆயிரம் குடும்பங்கள் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டத்துக்குத் தேர்வாகியுள்ளன. இத்திட்டத்துக்கு மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் நிதி செலுத்துகின்றன.

சிறிய மாநிலமான புதுவை மாநிலத்தில் அனைவருக்கும் காப்பீடு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என புதுச்சேரி அரசுத் தரப்பு, டெல்லியில் மத்திய அமைச்சர்களைச் சந்தித்துக் கோரியது. ஆனால், மத்திய அரசு கண்டுகொள்ளாததால் மாநில அரசு நிதியிலேயே அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு திட்டத்தைச் செயல்படுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதுபற்றி, சுகாதாரத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "ஆயுஷ்மான் திட்டப் பயனாளிகள் மற்றும் 25 ஆயிரம் அரசு ஊழியர் குடும்பங்கள் தவிர்த்து மீதமுள்ள 2 லட்சத்து 17 ஆயிரம் குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டத்தை அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மாநில அரசின் 100 சதவீத நிதியில் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்படி, ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் காப்பீடு தொகைக்கான மருத்துவம் பெற முடியும்" என்று தெரிவித்தனர்.

திட்டம் எப்போது அமலாக உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவிடம் கேட்டதற்கு, "மருத்துவக் காப்பீடு திட்டத்துக்குத் தேவையான நிதியும், சட்டத்துறை ஒப்புதலும் தற்போது கிடைத்துள்ளது. புதன்கிழமை (அக். 28) இதற்கான டெண்டர் கோரப்படுகிறது. 21 நாட்களுக்குள் காப்பீடு நிறுவனத்தை முடிவு செய்வோம். டெண்டர் கோரும் நிறுவனம் பிரபல மருத்துவமனைகளுடன் சட்டபூர்வமான ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும். இத்திட்டத்துக்குத் தனியாக அடையாள அட்டை கிடையாது. குடும்ப அட்டையையே அடையாள அட்டையாகப் பயன்படுத்த உள்ளோம். டிசம்பர் 1-ம் தேதி அனைத்துத் தொகுதிகளிலும் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்" என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி