குழந்தைகளைக் கவனிக்க ஆண் அரசு ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவிப்பு. - kalviseithi

Oct 27, 2020

குழந்தைகளைக் கவனிக்க ஆண் அரசு ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவிப்பு.

 


குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள ஆண் அரசு ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும் என்று மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.


ஆனால், விடுப்பு எடுக்கும் ஆண் அரசு ஊழியர், மனைவியை விட்டுப் பிரிந்தவராகவோ, அல்லது மனைவி இல்லாத நிலையிலோ அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகள், சிறப்புக் குழந்தைகளாகவோ இருந்தால் மட்டுமே விடுப்பு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற சூழலில் குழந்தையைக் கவனித்துக்கொள்ள வீட்டில் குடும்ப உறுப்பினர் இல்லாத நிலையில் குழந்தைகள் கவனிப்பு விடுமுறை (சிசிஎல்) எடுக்கலாம்.


இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:


''பிரதமர் மோடியின் தலைமையிலான அரசில் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறையில் சில சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி, இனி மேல் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள ஆண் அரசு ஊழியர்களும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு (சைல்ட் கேர் லீவ் - சிசிஎல்) எடுக்கலாம்.


ஆனால், விடுப்பு எடுக்கும் அந்த ஊழியர் மனைவியை விட்டுப் பிரிந்தவராகவோ அல்லது மனைவியை இழந்தவராகவோ அல்லது திருமணம் ஆகாதவராகவோ இருக்க வேண்டும். அதாவது தந்தை மட்டுமே அந்தக் குழந்தைக்கு இருத்தல் வேண்டும். அதுமட்டுமல்லாமல் குழந்தைகள் மாற்றுத்திறனாளியாகவோ அல்லது சிறப்புக் குழந்தைகளாகவோ இருந்தாலும் சிசிஎல் எடுக்கலாம்.


இந்த முடிவு பல மாதங்களுக்கு முன்பே எடுக்கப்பட்டாலும், அதிகமான ஈர்ப்பை மக்கள் மத்தியில், அரசு ஊழியர்கள் மத்தியில் பெறவில்லை. சிசிஎல் விடுப்பு எடுக்கும் அரசு ஊழியர்கள் தங்கள் விடுப்பு குறித்தும் பணியாற்றும் துறையின் தலைமை அலுவலகத்தில் முன்கூட்டியே தகவல் தெரிவித்து முன் அனுமதி பெற வேண்டும்.


குழந்தையைக் கவனித்துக்கொள்ள அரசு ஊழியருக்கு முதல் 365 நாட்கள் முழு ஊதியத்துடன் கூடிய விடுப்பும், 2-வது ஆண்டில் 80 சதவீத ஊதியத்துடன் கூடிய விடுப்பும் வழங்கப்படும். மேலும், சிசிஎல் விடுப்பில் ஒரு ஊழியர் இருக்கும்போது எல்டிசி விடுப்பு பெற முடியும்.


அதிலும் குழந்தை மாற்றுத்திறனாளியாக இருந்தால், அந்தக் குழந்தைக்கு 22 ஆண்டுகள் வரை எந்த வயதில் அந்தக் குழந்தை இருக்கும்போதும் தேவைப்படும்போதும் விடுப்பு எடுக்கலாம்.


பிரதமர் மோடியின் தனிப்பட்ட அக்கறை, தலையீட்டில் கடந்த 6 ஆண்டுகளாக பணியாளர் மற்றும் பயிற்சித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள், மாற்றங்கள் முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.


இந்த முடிவு என்பது ஒரு அரசு ஊழியர் தன்னுடைய அதிகபட்ச, முழுத்திறனையும் வெளிப்படுத்தி பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் எடுக்கப்பட்டது. அதேசமயம், அரசு ஊழியர்கள் பணியாற்றாமல் இருத்தல், கையூட்டு போன்ற குற்றங்களில் மத்திய அரசு சமரசம் செய்து கொள்ளாது''.


இவ்வாறு ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

2 comments:

  1. பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஏன் வேலை போடவேண்டும் நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கேட்கும் அதிமேதாவிகளே! இந்த வாய்ப்பு பகுதி நேர ஆசிரியர்களுக்கு வழங்க வில்லை என்றால் அனைத்து பணியிடங்களையும் இந்த ஆட்சி நிரப்பி இருக்குமா? 7 ஆண்டுகளாக தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்று வேலை கிடைக்காமல் 80000 பேர். எந்த வேலைக்கும் அறிவிப்பு வரும்.அதில் பல குழப்பங்கள் நடக்கும். வழக்கு நீதிமன்றம் செல்லும். ஆக மொத்தம் பணி நியமனம் நடப்பதில்லை. இப்படிப்பட்ட சூழலில் வாரத்திற்கு 3 நாட்கள், மாதத்திற்கு 12 நாட்கள் என்ற குழப்பமான பணிநியமனத்தைக் கொண்டு வந்து வயதாகியும் வேலை கிடைக்காமல் இருந்துவந்தவர்கள் ஏதோ வாய்ப்பு வருகிறதே என்று இதில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் கொச்சைப் படுத்தும் நீங்கள் 40 வயதிற்கும் மேல் வேலை இல்லை என்று பி.எட் படித்து தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்று ஆசிரியர் வேலைக்காகவே இன்னும் தேர்ச்சி பெற உழைத்துக் கொண்டிருப்பவர்களின் வாழ்வில் மண்ணை அள்ளிப் போட்ட விசயம் உங்களுக்குத் தெரியுமா? தெரியாதா? பல பள்ளிகளில் பகுதி நேர கணிப்பொறி ஆசிரியர்கள் எவ்வளவு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் (இரவு பகலாக IFHRMS) தெரியுமா இந்த கொரோனா விடுமுறையிலும்? அரசிடம் போராடுங்கள். 7700க்காக பத்தாண்டுகளைத் தொலைத்தவர்கள் ஏழைகள் மட்டுமே. உங்களுக்காக அரசிடம் கேளுங்கள். இப்போதும் சத்துணவு சமையலர் பணிக்கே முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் முதற்கொண்டு விண்ணப்பிக்கும் அவல நிலை இந்தியாவில் உள்ளது. ஏனெனில் வேலையில்லாத் திண்டாட்டம். மத்திய மாநில அரசுகள் இதைப் பயன்படுத்தி தொகுப்பூதியத்தில் நியமித்து விட்டு கண்ட வரிகளையெல்லாம் போட்டு அவர்கள் தலைமுறை தலைமுறையாக வாழ வேண்டும் என நினைக்கிறார்கள். படித்தவர்கள் 7000 8000 என கொத்தடிமைகளாக வாழ்கிறார்கள் (அரசுப்பணி என்ற பெயரில்) இதை உணருங்கள்.

    ReplyDelete
  2. சரியான வினா? இது யாருக்கு புரிய போகுது?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி