பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கவும், இணைப்பை நிறுத்தி வைக்கவும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு முழு அதிகாரம் உள்ளது: உயர் நீதிமன்றம் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 20, 2020

பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கவும், இணைப்பை நிறுத்தி வைக்கவும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு முழு அதிகாரம் உள்ளது: உயர் நீதிமன்றம் உத்தரவு.

 


பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கவும், இணைப்பை நிறுத்தி வைக்கவும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு முழு அதிகாரம் உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போதுமான வகுப்பறைகள், ஆசிரியர்கள் இல்லாததால் செங்கல்பட்டு மாவட்டம், சட்டமங்கலத்தில் உள்ள இரு தனியார் பொறியியல் கல்லூரிகளின் பல்கலைக்கழக இணைப்பை நிறுத்தி வைத்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில், 2020-21 ஆம் கல்வியாண்டுக்கு மாணவர் சேர்க்கை நடத்த தடை விதித்து, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் உத்தரவு பிறப்பித்தது.

இந்த இரு உத்தரவுகளையும் எதிர்த்து, கல்லூரிகள் சார்பில் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அண்ணா பல்கலைக்கழக விதிகள், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அதிகாரத்துக்கு கட்டுப்பட்டது எனக் கூறி, பல்கலைக்கழக உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

மேலும், இரு கல்லூரிகளுக்கும் புதிதாக நோட்டீஸ் அனுப்பி, நேரில் ஆய்வு செய்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கவும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு மனுக்கள் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (அக். 20) விசாரணைக்கு வந்தபோது, பல்கலைக்கழக இணைப்பு மீது நடவடிக்கை எடுக்க அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலுக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக கல்லூரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கவும், இணைப்பை நிறுத்தி வைக்கவும் சட்டப்படி, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அதிகாரம் இருப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

மேலும், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் விதிகளின்படியே, தரமான கல்வியை வழங்க அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறிய நீதிபதிகள், இரு கல்லூரிகளின் மனுக்கள் மீது அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை, பல்கலைக்கழக இணைப்பு நிறுத்திவைப்பு உத்தரவை அமல்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி