புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது "நிவர்' புயல் - kalviseithi

Nov 26, 2020

புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது "நிவர்' புயல்


வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த "நிவர்' புயல் புதன்கிழமை நள்ளிரவு புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடந்தது. 


புயல் கரையைக் கடந்தபோது, மணிக்கு 110 கி.மீ. முதல் 120 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது. பல்வேறு இடங்களில் பலத்தமழை கொட்டியது. ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல இடங்களில் மின் கம்பங்கள் சரிந்தன.


தெற்கு வங்கக்கடலில் கடந்த சனிக்கிழமை உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக அடுத்தடுத்து வலுவடைந்து செவ்வாய்க்கிழமை காலையில் "நிவர்' புயலாகவும், அன்று இரவில் தீவிர புயலாகவும் மாறியது. இது செவ்வாய்க்கிழமை நள்ளிரவு  புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே 320 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே 380 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருந்தது.


அப்போது புயல் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்தது. புதன்கிழமை மாலையில் புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே 120 கி.மீ. தொலைவிலும், கடலூருக்கு தென் கிழக்கே 110 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டிருந்த "நிவர்' புயல்,  மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்தது. தொடர்ந்து, இது தீவிர புயலாக மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, புதுச்சேரிக்கு அருகில் புதன்கிழமை இரவு 11 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்கியது. படிப்படியாக   சில மணி நேரங்களில் முழுமையாக கரையைக் கடந்தது. 


தகவல் தொடர்பு, மின்சாரம் துண்டிப்பு: புயல் கரையைக் கடந்தபோது, தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் மணிக்கு 110 கி.மீ. முதல் 120 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்தது. பல இடங்களில் தகவல் தொடர்பும், மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. பல இடங்களில் தென்னை  உள்ளிட்ட மரங்கள் சூறாவளி காற்றால் அடியோடு சாய்ந்தன. 


வடசென்னையில்... "நிவர்' புயலின் தாக்கம் காரணமாக தமிழகத்தில் அதிகபட்சமாக வடசென்னையில் 160 மி.மீ.  மழை பதிவானது.


மழை தொடரும்: தமிழகத்தில் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை (நவ.26, 27) ஆகிய இரு நாள்கள் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை அன்று (நவ.26) வடதமிழகத்தில் பல இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.


தமிழகத்தில் அநேக இடங்களில் நவம்பர் 27-ஆம் தேதி மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். சில வேளைகளில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


புயலின் தாக்கம் தொடரும்: புயல் கரையைக் கடந்த பிறகு, கடலோர மாவட்டங்களில் புயலின் தாக்கம் 6 மணி நேரத்துக்கு தொடரும். 

அதன்பிறகு, படிப்படியாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியது:


தீவிர புயல் கரையைக் கடந்த நிலையில் அடுத்த 6 மணி நேரத்தில் படிப்படியாக வலுவிழந்து புயலாகவும் அதற்கு அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் மாறக்கூடும்.  இதன் காரணமாக திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் வியாழக்கிழமை (நவ.26) மழை பெய்யக்கூடும். 


ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி பலத்த மழையும், ஒருசில இடங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழையும்  பெய்யக்கூடும். சூறாவளி காற்று மணிக்கு 65 கி.மீ. முதல் 75 கி.மீ.வேகத்திலும் இடையிடையே 85 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும். இதன் காரணமாக, கூரை வீடுகள் மற்றும் குடிசைகள், மேற்கூரைகள் பாதிப்புக்குள்ளாகும்.


பொதுமக்கள் வீட்டினுள் பாதுகாப்பாக இருக்குமாறும் அரசு - பேரிடர் மேலாண்மை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றார் அவர்.


புதிய காற்றழுத்தத் தாழ்வு: தென் கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் கடல் பகுதி அருகில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நவ.29-ஆம் தேதி உருவாகவுள்ளது. இது மேற்கு நோக்கி நகர்ந்து, தமிழகத்துக்கு மழை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி