எளிய வழியில் புதுமைக் கல்வி - kalviseithi

Nov 2, 2020

எளிய வழியில் புதுமைக் கல்வி


Kalvi 40 Play sote App Link...

" எளிய வழியில் புதுமைக் கல்வி' என்ற திசையில் பயணிக்கிறது "கல்வி 40' . இந்தச் செயலி தமிழ்நாடு, புதுச்சேரியில் சுமார் 18000 பதிவு இறக்கம் செய்யப்பட்டுள்ளது. பள்ளிக் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் செயலிகள் அதிகம் உள்ள இன்றைய சூழ்நிலையில், மனப்பாடக் கல்வி முறையை ஊக்குவிக்காமல், பாடத்திட்டத்தில் இருக்கும் விஷயங்களை காட்சி வழிப்படுத்துதல் மூலம் மாணவர்களிடம் கல்வி, அறிவு சென்றடையச் செய்யும் செயலியாக "கல்வி 40' செயலி அமைந்துள்ளது.


"கல்வி 40' செயலியை உருவாக்கி தமிழ் பேசும் சிறார்களிடையே பரப்பி வருபவர் கணினி பொறியாளர் பிரேம்குமார். செயலியின் சிறப்பு அம்சங்கள் குறித்து பிரேம்குமார் மனம் திறக்கிறார்:


"கிராமப்புற அரசுப் பள்ளி குழந்தைகளுக்கும், குழந்தைகளுக்குப் பாடங்களைக் கற்றுத் தரமுடியாத சூழலில் உள்ள பெற்றோர்களுக்காகவும், பள்ளி முடிந்த பிறகு, வீட்டில் இருந்தபடி பள்ளிப் பாடங்களை எளிமையான வழியில் புரிந்து கொள்ள வழிவகை செய்யும் விதத்தில் இந்தச் செயலியை கட்டமைப்பு செய்துள்ளோம். பாடங்களைக் கற்பதில் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு கற்பதில் ஆர்வத்தை வளர்க்கும் விதமாகவும், பாடங்களைப் புரிந்து படிக்கவும், அதிக மதிப்பெண்கள் பெறவும், அறிவை விரிவு செய்யவும் எங்கள் மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.


"கல்வி 40' மொபைல் செயலியின் இலக்கு, 3 முதல் 8-ஆம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களை சென்று அடைவதுதான். எங்களுடைய காணொலிகளை, பள்ளிப் பாடங்களுக்கு ஏற்ற, ஒன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரை ஓடும் அளவுக்கு தயாரித்துள்ளோம். ஐந்து நிமிடங்களுக்கு மேலான அளவுள்ள காணொலிகளைக் காணும் சிறார்களுக்கு சோர்வு ஏற்படும். சிறு சிறு விடியோக்கள் 2000 வரை இந்தச் செயலியில் உண்டு. எப்படி காணொலி மூலம் பாடங்களைப் புரிந்து கொண்டுள்ளார்கள் என்பதை மாணவர்களும், அவர்களது பெற்றோரும் "சுய மதிப்பீடு' செய்து கொள்ள "பயிற்சித் தேர்வு' முறையும், குறிப்பிட்ட நேரத்திற்குள் கேள்விகளுக்கு விடையளிக்க தேர்வும் உண்டு. செயலியைப் பயன்படுத்தும் சிறார்களை சிந்திக்க வைக்க, விடைகளை, சுவையான தகவல்களை சேகரிக்க வைக்கும் விதமாக கதைகள், விடுகதைகள், புதிர்கள் மூலமாக மாணவர்களை இயக்கும் காணொலிகளும் தனியாக உண்டு.


"கல்வி 40' செயலி முற்றிலும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. எந்த நிலையிலும் கட்டணம் கேட்பதில்லை. ஒருமுறை பெயரைப் பதிவு செய்தால் போதும். ஒரே அலைபேசியில் பல வகுப்பு மாணவர்கள் அவர்களுக்கு வசதியான நேரங்களில் காணொலிகளைக் காணலாம். செயலியின் காணொலிகளைச் சிறார்கள் காணும் போது காணொலியில் இடையே விளம்பரங்களோ, இதர காணொலிகளோ இந்தக் காணொலியில் குறுக்கிடாது. சிறார்களின் மனநல பாதுகாப்பை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட செயலி இது. வலைதள இணைப்பு வேகம் குறைவாக இருக்கும் கிராமங்களில் கூட, "கல்வி 40' செயலியை எளிதாக பதிவு இறக்கம் செய்யலாம். காணொலிகளைக் காணலாம்.


காணொலிகள் எல்லாம் தமிழில் மட்டுமே இருக்கும். படங்கள், விளக்கங்களைக் கொண்டிருக்கும். எங்களது செயலிகளை உருவாக்குவதில் அரசுப்பள்ளி ஆசிரியர்களும் உதவுகிறார்கள். தன்னார்வ தொண்டர்களும், வெளிநாட்டு பள்ளி மாணவர்களும் காணொலிகளை உருவாக்குகிறார்கள். அமெரிக்காவில் மட்டும் தமிழ் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 200 பள்ளி மாணவர்கள் நமது சிறார்களுக்கான காணொலிகள் தயாரித்து வழங்கியுள்ளார்கள். இது போன்ற மாணவர்கள் 150 பேர் பத்து நாடுகளில் உள்ளனர். வெளிநாட்டு உள்நாட்டு தன்னார்வலர்கள் தயாரிக்கும் காணொலிகளை எங்கள் குழு மேம்படுத்தும். இந்தப் பங்களிப்பிற்காக யாருக்கும் ஊதியமோ, சன்மானமோ வழங்குவதில்லை. எங்கள் காணொலிகளை ஆசிரியர்களும் பார்க்கிறார்கள். பாடங்களை இப்படியும் சொல்லிக் கொடுக்கலாம் என்று ஆசிரியர்களும் புரிந்து கொண்டு பாராட்டுகிறார்கள்.


"கரோனா தொற்றுநோயின் தாக்கம் உலகளவில் கல்வித்துறையை முடக்கிப்போட்டுள்ளது. பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், "விடியோ கான்ஃபரன்சிங்' மூலம் ஆசிரியர்கள் மாணவர்களுடன் இணைவதால் "ஆன்லைன் மூலம் கற்றல்' முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. ஆங்கில வழி, நடுத்தர தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தும் போது, வசதிகள் இல்லாத அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கும் கல்விக்கும் உள்ள இடைவெளி அதிகமாகி உள்ளது. இந்த இடைவெளியைக் குறைக்க "கல்வி 40' தமிழ் மொழி வழி பாடங்களை இலவசமாக வழங்கி அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சம வாய்ப்பை வழங்குகிறது. சென்னையில் "பம்பல்பி டிரஸ்ட்' என்ற லாப நோக்கம் இல்லாத அறக்கட்டளையைத் தொடங்கி தமிழக சிறார்களின் பயன்பாட்டிற்கு செயலியை வழங்கியுள்ளோம். "கல்வி 40' செயலி பிளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கிறது.


இந்த ஆண்டின் தொடக்கத்தில், புதுச்சேரி கிராமப்புற பள்ளிகளில் சோதனையாக குறிப்பிட்ட அரசுப் பள்ளிகளில் எங்கள் திட்டத்தை அரசு அனுமதியுடன் செயல்படுத்தினோம். சில பாடங்களில் தேர்வு வைத்தோம். பிறகு அதே பாடங்கள் தொடர்பான காணொலிகளை மாணவர்களுக்கு காட்டி அதன் பிறகு தேர்வு வைத்தோம். முதல் தேர்வில் கிடைத்த மதிப்பெண்களை விட இரண்டாவது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தார்கள். திருப்தி அடைந்த புதுச்சேரி அரசு இதர அரசு பள்ளிகளுக்கும் எங்கள் திட்டத்தை விரிவுபடுத்தச் சொன்னது. கரோனா தாக்கத்தால் பள்ளிகள் மூடப்பட்டதால் எங்கள் திட்டத்தை அரசு பள்ளிகளுக்கு நேரடியாகக் கொண்டு செல்லமுடியவில்லை. தமிழக அரசையும் நாங்கள் அணுகியுள்ளோம். கரோனா தாக்கம் குறைந்து பள்ளிகள் திறக்க காத்திருக்கிறோம். அடுத்த 6 மாதங்களில் மேலும் 4000 கல்வி காணொலிகளைத் தயாரித்து ஒரு லட்சம் மாணவர்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு'' என்கிறார் பிரேம் குமார்.


Kalvi 40 Play sote App Link...No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி