அரசுப் பள்ளிகளில் கருணாநிதி பெயரில் காலை உணவுத் திட்டம்: புதுச்சேரியில் நாளை தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 11, 2020

அரசுப் பள்ளிகளில் கருணாநிதி பெயரில் காலை உணவுத் திட்டம்: புதுச்சேரியில் நாளை தொடக்கம்

 


புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரில் காலை உணவுத் திட்டம்  நாளை தொடங்கப்படுகிறது.

முன்னதாகப் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடந்த ஜூலை மாதம் பட்ஜெட் தாக்கல் செய்தபோது, ''புதுச்சேரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக் குழந்தைகளுக்கு தற்போது காலையில் பால் தரப்படுகிறது. இது விரிவுபடுத்தப்பட்டு கலைஞர் கருணாநிதி சிற்றுண்டித் திட்டம் அமல்படுத்தப்படும். இதன்படி சிற்றுண்டியில் இட்லி, பொங்கல், கிச்சடி வழங்கப்படும். பால், பிஸ்கெட் திட்டம் ராஜீவ் பெயரிலும், காலை சிற்றுண்டித் திட்டம் கருணாநிதி பெயரிலும் இருக்கும்'' என்று அறிவித்தார்.

அதன்படி கலைஞர் கருணாநிதி  சிற்றுண்டித் திட்டத்தின் கீழ் காலை உணவாக கேசரி, இட்லி, பொங்கல், சட்னி- சாம்பார் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 12ஆம் தேதி கருணாநிதி பெயரில் புதிய திட்டத்தைத் தொடங்கிவைக்க, திமுக  தலைவர் ஸ்டாலின் அழைக்க முன்பு முடிவு எடுத்திருந்தனர்.

இதனிடையே காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக, ஆளும் அரசைக் கடுமையாக விமர்சித்து வருகிறது. புதுச்சேரி, காரைக்கால் திமுக  அமைப்பாளர்கள் எஸ்.பி.சிவக்குமார், சிவா மற்றும் நாஜிம் ஆகியோர் போர்க்கொடி உயர்த்தினர். திமுக  தலைவர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினர். அதைத் தொடர்ந்து ஆளுநர் கிரண்பேடியைச் சந்தித்து மனு தந்தது, முதல்வர் நாராயணசாமி கூட்டிய அனைத்துக்கட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்தது எனத் தொடர்ந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யத்தொடங்கினர். இதனால் புதுச்சேரியில் காங்கிரஸ்- திமுக  கூட்டணியில் விரிசல் அதிகரித்துள்ளது.

இதனால் திட்டமிட்டபடி கருணாநிதி  காலை சிற்றுண்டித் திட்டத் தொடக்க விழா நடைபெறுமா? திட்டத்தைத் தொடங்கி வைக்க மு.க.ஸ்டாலின் வருவாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இதுபற்றி அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, "முன்பு திட்டமிட்டபடி விழாவை நடத்த முதல்வர் நாராயணசாமி முடிவு செய்துள்ளார். காராமணிகுப்பத்தில் உள்ள ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாளை (வியாழக்கிழமை) காலை தொடக்க விழா நடக்கிறது. இதில் முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இந்த விழாவில் திமுக சார்பில் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்கிறார்" என்று குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி