`மாணவர்கள் அரசியலமைப்பு பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்!’ - நாட்டின் இளம் பெண் மேயர் ஆர்யா - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 28, 2020

`மாணவர்கள் அரசியலமைப்பு பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்!’ - நாட்டின் இளம் பெண் மேயர் ஆர்யா


 `இளைஞர்களும், மாணவர்களும் அரசியலமைப்பு, ஜனநாயகம் குறித்து அறிந்துகொள்ள வேண்டும். அனைத்து மக்களும் அரசியலமைப்பின் சாரம்சத்தையாவது தெரிந்திருக்க வேண்டும்' என்கிறார் திருவனந்தபுரம் மேயரான கல்லூரி மாணவி ஆர்யா ராஜேந்திரன்.


கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் முடிந்து கடந்த 16-ம் தேதி முடிவுகள் வெளியானது. இதில் சி.பி.எம் கூட்டணி கேரளத்தில் அதிக இடங்களைக் கைப்பற்றியது. வெற்றிபெற்ற உறுப்பினர்கள் பதவியேற்ற நிலையில் மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் ஊராட்சித் தலைவர்கள் தேர்வு இன்று நடந்தது. இதில் இந்தியாவின் மிகவும் வயது குறைந்த மேயராக கேரள தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஆர்யா ராஜேந்திரன் பதவி ஏற்றுக்கொண்டார். ஆல் செயிண்ட் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படிக்கும் ஆர்யா ராஜேந்திரன் மேயராகப் பொறுப்பேற்றுக்கொண்டதை தொடர்ந்து சி.பி.எம் கட்சியினர் வாழ்த்துத் தெரிவித்தனர். நூறு கவுன்சிலர்களைக் கொண்ட திருவனந்தபுரம் மாநகரத்தில் மேயர் தேர்தலில் 99 பேர் வாக்களித்தனர். காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர் வாக்களிக்கச் செல்லவில்லை. அவர் கொரோனா குவாரண்டைனில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Cpm மேயர் வேட்பாளரான ஆர்யா ராஜேந்திரன் 54 வாக்குகளை பெற்று தனிப் பெரும்பான்மையுடன் மேயரானார். பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட மேயர் வேட்பாளர் 39 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் 9 வாக்குகளை பெற்றார். ஆர்யா ராஜேந்திரனின் வீடு திருவனந்தபுரம் முடவன்முகல் பகுதியில் உள்ளது. அவரது தந்தை, வீடுகளுக்கு எலக்ட்ரீசியன் பணி செய்து வரும் தொழிலாளி. அவரது அம்மா ஸ்ரீலதா எல்.ஐ.சி ஏஜெண்டாக உள்ளார். அண்ணன் அரவிந்த் இன்ஜினியரிங் முடித்துவிட்டு வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இத்தனைக்கும் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறது ஆர்யா ராஜேந்திரனின் குடும்பம்.

மேயராகப் பொறுப்பேற்ற ஆர்யா ராஜேந்திரன் கூறுகையில், ``எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அப்பா கட்சி உறுப்பினராக இருக்கிறார். அம்மாவும் கட்சி உறுப்பினர்தான். `லெஃப்ட் இஸ் ரைட்’, அதாவது இடது முன்னணிதான் சரி என்ற எண்ணத்தை எனக்கு அவர்கள் சிறு வயதில் ஏற்படுத்தினர். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே சி.பி.எம் கட்சியின் சிறுவர்கள் அமைப்பான பாலசங்கத்தில் இணைந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாலசங்கத்தின் மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்கினார்கள். இப்போது கட்சி வழங்கிய மிகப்பெரிய இந்த பொறுப்பில் சிறப்பாகச் செயல்படுவேன்.


ஒரு வருடம் கொரோனாவால் கடந்துபோனது. 2021-ல் எல்லோரும் ஒன்றாக நின்று முன்னேறிச் செல்ல வேண்டும். இளைஞர்களும், மாணவர்களும் அரசியல் அமைப்பு, ஜனநாயகம் குறித்து அறிந்துகொள்ள வேண்டும். அனைத்து மக்களும் அரசியல் அமைப்பின் சாரம்சத்தையாவது தெரிந்திருக்க வேண்டும். மேயராகப் பொறுப்பேற்ற எனக்கு அனைத்து அமைச்சர்களும், முதல்வரும், கட்சி முக்கியஸ்தர்களும், மோகன்லால் உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்களும் வாழ்த்தியது மிகவும் பெருமையாக உள்ளது" என்றார்.


3 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி