மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் - உயர் நீதிமன்றத்தில் வழக்கு விரைவில் விசாரணை. - kalviseithi

Dec 13, 2020

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் - உயர் நீதிமன்றத்தில் வழக்கு விரைவில் விசாரணை.

 


மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு மருத்துவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் டாக்டர்கள் எஸ்.நளினி, பெருமாள் பிள்ளை உள்ளிட்ட 8 டாக்டர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் நாங்கள் மிக குறைந்த சம்பளத்தையே பெற்று வருகிறோம். எங்களுக்கும் மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கும் இடையே ₹40 ஆயிரம்வரை சம்பள வித்தியாசம் உள்ளது.


இதையடுத்து எங்களுக்கும் சம்பளத்தை மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்தோம். எந்த பலனும் இல்லை. இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அரசு உரிய தீர்வை காணுமாறு உத்தரவிட்டது. இந்த உத்தரவும் அமல்படுத்தப்படாததால் 2019 அக்டோபர் 25ல் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தினோம். அன்று வருகைபதிவில் கையெழுத்திடாமல் அவசர சிகிச்சை நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தோம்.


 

அதன்பிறகு அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்ததால் மீண்டும் பணிக்கு திரும்பினோம். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 148 மருத்துவர்களை சிக்கலான பகுதிகளுக்கு அரசு இடமாற்றம் செய்தது. இதையடுத்து தொடரப்பட்ட வழக்கில் கடந்த பிப்ரவரி 28ல் உயர் நீதிமன்றம் எங்கள் கோரிக்கைகளை பரிசீலிக்குமாறு உத்தரவிட்டது. ஆனால், பரிசீலிக்கப்படாமல் உள்ளது. எனவே, எங்களுக்கு மத்திய அரசு மருத்துவர்களுக்கு நிகரான ஊதியம் வழங்க வேண்டும் என்றும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும் என்றும், முதுநிலை படித்துவிட்டு வெளியே செல்பவர்களுக்கு கவுன்சிலிங் நடத்த வேண்டும் என்றும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு மேல்படிப்பில் 50 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி