பாலின சமத்துவத்தை பாதுகாக்கும் கேரளா” : ‘Gender Park’ - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 16, 2021

பாலின சமத்துவத்தை பாதுகாக்கும் கேரளா” : ‘Gender Park’

 


“பாலின சமத்துவத்தை பாதுகாக்கும் கேரளா” : ‘Gender Park’ திட்டத்தை தொடங்கி வைத்த பினராயி விஜயன் ! உலகிலேயே முதன்முறையாக ‘Gender Park’ திட்டத்தை தொடங்கி வைத்தார் கேரள முதல்வர் பினராயி விஜயன். 


கொரோனா ஊரடங்கு காலத்திற்குப் பிறகு தற்போது மக்கள் நடமாட்டம் நாடு முழுவதுமே அதிகரித்துள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் பொருளாதார நெருக்கடி, வேலை இழப்பு என மக்கள் இன்னும் இறுக்கமான மனநிலையிலேயே இருந்து வருகின்றனர்.


இந்தச் சூழலில், கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க மருத்துவத்துறையில் மிகப்பெரிய சுகாதாரக் கட்டமைப்பை மக்களுக்காக உருவாகிய மாநிலம் என்றால், அது கேரளாதான். எளிய மக்களுக்கு சானிடைசர், முகக் கவசம், வீடுதேடி உணவுப் பொருட்கள் விநியோகம் என தொடங்கி கொரோனா தடுப்பு மருந்துகள் என அனைத்தையும் இலவசமாக வழங்கி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முனைப்புக் காட்டியது கேரள அரசு.


அதுமட்டுமல்லாது, பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களை பாதுகாப்பத்திலும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் அக்கரைக்காட்டும் அரசாக கேரள அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.


தேர்தல் ஆதயத்திற்காக திட்டங்களை வெறும் அறிவிப்பாக மட்டும் வெளியிடாமல், சொன்ன வாக்குறுதிகளை செய்துக் காட்டி சாதனை படைத்து வருகிறது கேரள அரசு. இத்தகைய சூழலில், உலகிலேயே முதன்முறை முன்னெடுப்பான, 300 கோடி ரூபாய் செலவில் ‘Gender Park’ என்னும் பாலின பூங்கா திட்டத்தை கேரள அரசு தொடங்கியுள்ளது.


பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகாரத்தை நோக்கமாக கொண்டு மாநில அரசு அமைத்துள்ள கோழிக்கோடு வெல்லிமட்குன்னில் உள்ள பாலின பூங்கா மற்றும் IGCE-11 என்னும் பாலின சமத்துவத்துக்கான சர்வதேச கருத்தரங்கத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் ஞாயிறன்று தொடங்கிவைத்தார்.


கேரளாவின் சுகாதாரம், சமூக நீதி, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் கீழ் செயல்படும் இப்பூங்காவில் பாலின அருங்காட்சியகம், நூலகம், மாநாட்டு மையம், ஆம்பி தியேட்டர் ஆகியவை திறக்கப்பட்டன. இந்த நூலகத்தில், பாலின சமத்துவம் குறித்த சர்வதேச மற்றும் தேசிய அளவில் வெளியிடப்பட்ட கருப்பொருள்களின் பத்திரிகைகள் மற்றும் ஆன்லைன் பதிப்புகள் பாலின நூலகத்தில் கிடைக்கின்றன.


அதேப்போல், வரலாற்றுக்கு முந்தைய காலங்களி லிருந்து பெண்கள் சமுதாயத்தின் பரிணாம வளர்ச்சியின் பல்வேறு கட்டங்கள், பெண்கள் மறுமலர்ச்சி இயக்கங்கள் மற்றும் கேரளாவின் போராட்டங்களை இந்த அருங்காட்சியகம் உள்ளடக்கியுள்ளது. மேலும், அதிநவீன மாநாட்டு மையத்தில் 500-க்கும் மேற்பட்டோர் அமரக்கூடிய திறன் இருக்கும்.பசுமையான பின்னணியில் ஆம்பிதியேட்டர் அமைக்கப்பட்டுள்ளது.


அதுமட்டுமல்லாது, பெண் தொழில்முனைவோருக்கு பாதுகாப்பான மற்றும் நிலையான சூழலையும் சந்தையையும் உருவாக்குவதற்கான சர்வதேச மகளிர் வர்த்தக மையத்தையும் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் கேரள முதல்வர்.


மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு பகுதியான ஐ.நா.பெண்களுக்கான சமவாய்ப்பு நிறுவனத்துடன் ஒத்துழைக்க, பாலின பூங்கா ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் மகளிர் வர்த்தக மையம், UNWomen உடன் இணைந்து, பெண் தொழில்முனைவோருக்கு சர்வதேச வர்த்தக மற்றும் சந்தைப்படுத்தல் வாய்ப்புகளையும் வழங்குகிறது.


இதுகுறித்து சுகாதாரம், சமூக நீதி, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் அமைச்சரான ஷைலஜா கூறுகையில், “பாலின சமத்துவ பூங்காவின் முதல் கட்டமாக மாநிலத்தில் பாலின சமத்துவத்தை நோக்கி செயல்படும். இத்தகைய முயற்சி இந்திய நாட்டில் மட்டுமல்ல, முழு உலகிலும் முதன்மையானது” எனத் தெரிவித்துள்ளார்.


மேலும், விழாவில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், “பாலின பூங்கா என்பது நாடும் உலகமும் உற்றுநோக்கும் கேரள அரசின் ஒரு முன்முயற்சி நிறுவனமாகும். இந்த ஆட்சிக் காலத்தில் இதை செயல்படுத்துவதில் பெருமை அடைகிறேன். தெற்காசியாவிலேயே பாலின சமத்துவத்திற்காக செயல்படும் அனைத்து அமைப்புகளின் மையமாக இந்த பூங்கா மாறும்” எனத் தெரிவித்துள்ளார்.


கேரளாவில் திறக்கப்பட்டுள்ள இந்த பூங்காவிற்குச் செல்லும் மக்கள் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர். மக்கள் பலரும் இந்த பூங்காவிற்கு பெரும் வரவேற்பு அளித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி