வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளிகளில் கேமரா பொருத்தும் பணி தொடங்கியது! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 28, 2021

வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளிகளில் கேமரா பொருத்தும் பணி தொடங்கியது!

 

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நேற்று துவங்கியது. இதன்மூலம் தேர்தல் நடவடிக்கைகளை டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளும் நேரடியாக பார்க்க முடியும். தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. தேர்தலில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 3,998 பேர் போட்டியிடுகிறார்கள். இதில் ஆண் வேட்பாளர்கள் 3,585 பேரும், பெண் வேட்பாளர்கள் 411 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 2 பேரும் உள்ளனர். தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவுக்காக மொத்தம் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. இதில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என 10,528ம், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் 300 எனவும் தேர்தல் ஆணையம் கண்டறிந்துள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் துணை ராணுவம் மற்றும் போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.


இந்நிலையில், மொத்தமுள்ள வாக்குச்சாவடிகளில் 50 சதவீதம் வாக்குச்சாவடிகளில், அதாவது 44,578 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு, வாக்குப்பதிவு நடவடிக்கைகள் அனைத்தும் இணையதளம் மூலம் கண்காணிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மற்ற வாக்குச்சாவடிகளில் வீடியோ கேமரா மூலம் படம் எடுக்கப்படும். பிரச்னைகள் ஏற்பட்டால் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமாக, தமிழகத்தில் வாக்குச்சாவடிகள் அனைத்தும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தான் அமைக்கப்படும். அதன்படி தமிழகத்தில் சிசிடிவி கேமரா பொருத்தவுள்ள 44,578 வாக்குச்சாவடி மையங்கள் (பள்ளிகள்) கண்டறியப்பட்டு, நேற்று முதல் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி தொடங்கியது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 37 மாவட்டங்களிலும் இந்த பணி நேற்று தொடங்கி,ஏப்ரல் 2ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவித்தாலும், கேமரா பொருத்தும் பணிக்காக திறந்து வைக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளனர்.


ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் 4 முதல் 6 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. கேமரா பொருத்தும் பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். பள்ளிகளில் பொருத்தப்படும் சிசிடிவி கேமராக்கள் அனைத்தும், இன்டர்நெட் மூலம் கம்ப்யூட்டரில் நேரடியாக கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் தேர்தல் நடவடிக்கைகளை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (கலெக்டர்கள்), சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மேற்பார்வையில் அமைய உள்ள கட்டுப்பாட்டு அறை மற்றும் டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையர்களும் நேரடியாக கண்காணிக்க முடியும். இதன்மூலம் தேர்தல் அசம்பாவிதங்களை முழுமையாக தடுக்க முடியும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் கருதுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி