நாடே எதிர்பார்க்கும் தமிழக தேர்தல் முன்னணி நிலவரம் காலை 9 மணிக்கு தெரியும்: இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவக்கம். - kalviseithi

May 2, 2021

நாடே எதிர்பார்க்கும் தமிழக தேர்தல் முன்னணி நிலவரம் காலை 9 மணிக்கு தெரியும்: இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவக்கம்.

 


நாடே ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்குகிறது. காலை 9 மணி முதல் முன்னிலை நிலவரங்கள் தெரியவரும். தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்று இன்று மதியம் தெரிந்துவிடும். தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தமிழகத்தில் திமுக தலைமையில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஒரு கூட்டணியாகவும், அதிமுக தலைமையில் பாஜ, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் ஒரு கூட்டணியாகவும், அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் என 5 அணிகள், தேர்தல் களத்தை சந்தித்தது. அதில் திமுக, அதிமுகவுக்கு மட்டுமே நேரடி போட்டி நிலவியது. 3வது இடத்தைப் பிடிக்கத்தான் மற்ற 3 கட்சிகளும் போட்டியிட்டன. மொத்தமுள்ள 234 தொகுதியிலும் 3,998 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.


இந்த தேர்தலில் 4 கோடியே 57 லட்சத்து 76 ஆயிரத்து 311 பேர் வாக்களித்தனர். 1 கோடியே 70 லட்சத்து 93 ஆயிரத்து 644 பேர் வாக்களிக்கவில்லை. தமிழகத்தில் 72.81% மட்டும் வாக்குகள் பதிவானது. வாக்குப்பதிவு முடிந்ததும், 88,937 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு, துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் அந்தந்த மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்குள்ள ஸ்டிராங் ரூமில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா மற்றும் கட்சி முகவர்கள் கண்காணிப்பு என உச்சக்கட்ட பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 234 தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று காலை சரியாக காலை 8 மணிக்கு 75 மையங்களில் எண்ணப்படுகிறது. சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் பதிவான வாக்குகள் ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகத்தில் எண்ணப்படுகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதற்காக, அதிகபட்சமாக 4 மேஜைகள் போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மேஜைகளிலும் 500 தபால் வாக்குகள் வரை எண்ண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தபால் வாக்கு எண்ணும் பணிகள் முடிவடையாவிட்டாலும், சரியாக காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கும். வாக்கு எண்ணும் பணிகள் அனைத்தும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள பொது பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெறும்.

தமிழகத்தில் பெரும்பாலான வாக்குச்சாவடி மையங்களில் வாக்குகளை எண்ணுவதற்காக குறைந்தபட்சமாக 14 மேஜைகளும், ஒரு சில வாக்குச்சாவடிகளில் அதிகப்பட்சமாக 28 மேஜைகளும் போடப்பட்டு இருக்கும். ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணும் பணியில் 2 அரசு அலுவலர்கள் ஈடுபட்டு இருப்பார்கள். அதேபோன்று ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு நுண் பார்வையாளர் (மத்திய அரசு ஊழியர்) இந்த பணிகளை மேற்பார்வையிடுவார். மின்னணு வாக்கு எந்திரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன், மேஜையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு இயந்திரத்தின் சீல் அகற்றப்பட்டு மொத்தம் எவ்வளவு ஓட்டு அந்த இயந்திரத்தில் பதிவாகி உள்ளது என்று அரசியல் கட்சி முகவர்களிடம் காட்டப்படும்.

அரசியல் முகவர்களும், தங்களிடம் உள்ள 17-சி விண்ணப்பத்தில் உள்ள பதிவான வாக்கு எண்ணிக்கையை பார்த்து அதை சரி செய்து கொள்வார்கள். இதையடுத்து, அந்த இயந்திரத்தில் எந்தந்த கட்சிகளுக்கு எவ்வளவு ஓட்டு பதிவாகியுள்ளது என்று வரிசைப்படுத்தப்படும். கடைசியாக நோட்டா ஓட்டு கணக்கில் எடுக்கப்படும். இப்படி அனைத்து மேஜைகளிலும் ஒரு ரவுண்ட் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே முதல் ரவுண்ட் வாக்கு விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டதும், ஒரு தொகுதியில் உள்ள 5 விவிபேட் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு எண்ணப்படும். பின்னர் இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவும், கட்டுப்பாட்டு இயந்திரத்தில் எண்ணப்பட்ட வாக்கு விவரங்களும் சரியாக உள்ளதா? என்று கணக்கிடப்படும்.

அதன்படி, 75 வாக்குப்பதிவு மையங்களிலும்  3,372 மேஜைகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். 309 மேஜைகளில் தபால் வாக்குகள் எண்ண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 4,420 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை  நடக்க உள்ளது. அதிகப்பட்சமாக பல்லாவரம், செங்கல்பட்டு தொகுதியில் 43 ரவுண்டுகளும், குறைந்தபட்சமாக உத்திரமேரூர் தொகுதியில் 13 ரவுண்ட் வாக்குகளும் எண்ணப்படுகிறது. முதல் சுற்று முடிவில் ஒவ்வொரு தொகுதியிலும் எந்த வேட்பாளர் முன்னணியில் உள்ளார் என்ற விவரம் காலை 9 மணி முதல் தெரியவரும். வாக்கு எண்ணும் பணியில் மட்டும் 16,387 பேர் ஈடுபடுகிறார்கள்.

ஒவ்வொரு சுற்று முடிவுகளும், வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பெரிய திரையில் வெளியிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் அதிகாரிகள் இருக்கும் மேஜை அருகே அரசியல் கட்சி முகவர்கள் செல்ல முடியாதபடி சவுக்கு கட்டை மற்றும் இரும்பு வலை தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணும் பணிகளை கண்காணிக்க சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் துணை ராணுவ வீரர்களும், 2வது மற்றும் 3 அடுக்கில் மாநில போலீசாரும், 4வது அடுக்கில் (நுழைவு வாயிலில்) உள்ளூர் போலீசாரும் ஈடுபட்டு இருப்பார்கள். அதன்படி பாதுகாப்பு பணியில் மட்டும் துணை ராணுவ வீரர்கள், தமிழக போலீசார் என சுமார் 10 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், வேட்பாளர்கள், அரசியல் முகவர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரும் 2 கட்ட தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் அல்லது கொரோனா பரிசோதனை செய்ததற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல் உடல்வெப்ப நிலை பரிசோதனையில் 98.5 டிகிரி அல்லது அதற்கும் குறைவாக இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். 98.6 டிகிரிக்கு மேல் வெப்பநிலை இருந்தால் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்தப்பட்டு கிருமி நாசினி கொண்டு வாக்கு எண்ணும் அறையை சுத்தம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பதை அறிவதில் தமிழக மக்கள் மிகவும் ஆர்வமுடன் உள்ளனர். தமிழக முதல்வராக பதவியேற்கப்போவது யார் என்பதும் மற்றும் கட்சி முன்னணி நிலவரங்கள் அனைத்தும் இன்று மதியம் தெரிந்து விடும். ஆனாலும், கொரோனா காரணமாக வாக்கு எண்ணும் பணிகள் இன்று நள்ளிரவு வரை நடைபெற வாய்ப்புள்ளது. இதனால் இறுதி முடிவுகள் அனைத்தும் வெளிவர தாமதமாகும். வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சான்றிதழ் வழங்குவார். கொரோனா காரணமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போதும், முடிந்த பிறகும் பட்டாசு வெடித்தல், ஊர்வலமாக செல்லுதல்  உள்ளிட்ட வெற்றி கொண்டாட்டத்துக்கு தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வெற்றி கொண்டாட்டத்தை தவிர்க்குமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்  தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* மேற்கு வங்கம், அசாம், கேரளா உட்பட 4 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை

தமிழகத்துடன் சேர்ந்து மேற்கு வங்கம், அசாம், கேரளா, புதுச்சேரிக்கும் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது. கேரளா, புதுச்சேரியில் ஏப்ரல் 6ம் தேதியும், அசாமில் அதற்கும் முன்பும் தேர்தல் முடிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக

தேர்தல் நடத்தப்பட்டதால், அது கடந்த மாதம் 29ம் தேதிதான் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, இன்று இம்மாநிலங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி