தமிழகத்தில் முதல் முறையாக அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு வீடியோ பிரசார வாகனம் அறிமுகம் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jun 24, 2021

தமிழகத்தில் முதல் முறையாக அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு வீடியோ பிரசார வாகனம் அறிமுகம்

 

தமிழகத்தில் முதல் முறையாக, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக வீடியோ பிரசார வாகனம் நெல்லை மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் ஒரு வாரம் பிரசாரம் செய்து மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலுக்கு பின்னர் பல குடும்பத்தின் பொருளாதார நிலை  பாதிக்கப்பட்டுள்ளதால், கடந்த கல்வியாண்டிலும் நடப்பு கல்வியாண்டிலும் அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


மேலும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு லேப்டாப் உள்ளிட்ட கல்வி நிவாரண பொருட்கள், வேலைவாய்ப்பு, உயர்கல்வியில் முன்னுரிமை அளிக்கப்படும், அதிக மாணவர்கள் சேரும் அரசு பள்ளிகளில் சேர்க்கை எண்ணிக்கையை 15 சதவீதம் வரை உயர்த்தலாம் என அரசு தெரிவித்துள்ளது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் பல பெற்றோரின் கவனம் அரசுப்பள்ளிகள் மீது திரும்பியுள்ளது. இதனால் பலர் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி இருக்கிறதா என விசாரித்து தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்த வண்ணம் உள்ளனர்.

 இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் நடவடிக்கை எடுத்துள்ளார். அனைத்துப் பள்ளிகளிலும் கடந்த வாரம் முதலே மாணவர் சேர்க்கை பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. தொடக்கப்பள்ளிகளில் 5ம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகள் அருகே உள்ள நடுநிலை அல்லது உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6ம் வகுப்பில் சேர்க்கப்படுகின்றனர்.

இதற்காக மாணவர்கள் விவரம் கணக்கு எடுக்கப்பட்டு ஆசிரியர்களே மாணவர்களின் இருப்பிடங்களுக்கு நேரில் சென்று சேர்க்கை பணியை மேற்கொள்கின்றனர். இவ்வாறு வீடு தேடி செல்லும் போது அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளின் மாணவர்களும் அரசுப்பள்ளியில் சேர பெயர் கொடுத்து வருகின்றனர்.

மாணவர் சேர்க்கை பணியை அடுத்த ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு செய்யவும், கூடுதல் மாணவர்களை சேர்க்கவும் தமிழகத்திலேயே முதன்முறையாக சிறப்பு வீடியோ வாகன பிரசார முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக அரசின் வீடியோ பிரசார வாகனத்தை வழங்கி நெல்லை கலெக்டர் விஷ்ணு ஊக்கப்படுத்தியுள்ளார்.

இந்த வாகன பிரசாரத்தை முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் துவக்கி வைத்தார். இந்த வாகனம் மாவட்டம் முழுவதும் கிராமப்பகுதிகளை குறி வைத்து செல்லும். அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு வழங்கும் இலவச திட்டங்கள், வேலைவாய்ப்பில் முன்னுரிமை போன்ற பல்வேறு சிறப்புக்களை இந்த வாகனத்தில் செல்பவர்கள் பெற்றோரிடம் விளக்குவர். அரசுப்பள்ளிகளின் சிறப்புகள் குறித்த குறும்படமும் வீடியோ காட்சியாக காட்டப்படும்.

 இதுகுறித்து சிஇஒ சிவகுமார் கூறுகையில், நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டே அரசுப்பள்ளியில் அதிகளவில் மாணவர்கள் சேர்ந்தனர். இந்த ஆண்டு மேலும் அதிகம் பேரை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான முயற்சியாக இந்த வீடியோ வாகன பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு வாரம் மேற்கொள்ளப்படும் பிரசாரம் மூலம் மேலும் பல மாணவர்கள் சேர்வர் என எதிர்பார்கிறோம் என்றார். இடைநிற்றல் மாணவர்கள் இருந்தால் அவர்களையும் கல்வியை தொடர நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி