அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5% உள்ஒதுக்கீடுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 20, 2021

அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5% உள்ஒதுக்கீடுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

 

தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.நீட் தேர்வு வந்த பிறகு அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவது வெகுவாக குறைந்தது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் கூட கட் ஆப் மதிப்பெண் காரணமாக மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலை இருந்தது. இதனால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவித உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.


ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தங்களுக்கும் இதே உள் ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என பல கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் அரசு தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், 7.5சதவீத  உள்ஒதுக்கீடுக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜஸ்ஸ்ரீ என்பவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 12ம் வகுப்பு மட்டுமே அரசு பள்ளியில் படித்திருந்தாலும் அந்த மாணவர்களுக்கும் 7.5சதவீத இட ஒதுக்கீட்டை மருத்துவப் படிப்பில் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார். மேலும் திருச்சியைச் சேர்ந்த ஜோனிஸ்ராஜ் என்பவர் தரப்பிலும் ஒரு ரிட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள்  ஒதுக்கீடு வழங்குவது என்பது அரசியலமைப்புக்கு எதிரானது. அதனால் இந்த சட்டத்தை உடனடியாக ரத்து செய்யவேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மேற்கண்ட மனு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் நாகேஸ்வராவ் மற்றும் அனுருத்தா போஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,  அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மட்டும் மருத்துவப் படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்குவது என்பது மாநில அரசின் கொள்கை சார்ந்தது. ஆகவே இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. அதனால் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்கிறோம்,என்று தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ரிட் மனுவை விசாரித்த நீதிபதிகள், முதலில் உயர்நீதிமன்றத்தை தான் அணுக வேண்டும் எனக்கூறி வழக்கை முடித்து வைத்துனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி