அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிரடியாக அதிகரிப்பு: இன்னும் கூடுதலாகும் என அதிகாரிகள் கணிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 1, 2021

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிரடியாக அதிகரிப்பு: இன்னும் கூடுதலாகும் என அதிகாரிகள் கணிப்பு

 

கொரோனா பாதிப்பால் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிக்கு மாற்றி வருகின்றனர்.இதனால், மாவட்ட அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.


தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, கடந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், பள்ளி, கல்லுாரிகள் கடந்த 15 மாதங்களாக மூடப்பட்டுள்ளன.இந்நிலையில், மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், கடந்த ஆண்டு முதல் கல்வி 'டிவி' மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.இதை தொடர்ந்து, மாணவர்கள் வீட்டில் இருந்து கல்வி பயில கடந்த ஜூன் 23ம் தேதி முதல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.


இதேபோன்று, தனியார் பள்ளிகளிலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 1,149 தொடக்கப் பள்ளிகள், 265 நடுநிலைப் பள்ளிகள், 191 உயர்நிலைப் பள்ளிகள், 199 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 1,804 பள்ளிகள் உள்ளன.இப்பள்ளிகள் கடந்த 14ம் தேதி திறக்கப்பட்டு, தலைமை ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் வருகை புரிந்து, மாணவர் சேர்க்கை, மாற்றுச்சான்றிதழ் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 342 மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.


இந்நிலையில், மாவட்ட அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. ஏனெனில், கொரோனா தொற்று காரணமாக கடந்த 15 மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.இதனால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள், கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதளவில் பாதிக்கப்பட்டு வருவாய் இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்துவதால், 70 சதவீத கல்வி கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியது.ஆனால், பல தனியார் பள்ளிகளில் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என கூறுகின்றனர். சில தனியார் பள்ளிகளில், கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை ஆன்லைன் வகுப்புகளில் இருந்து நீக்கியுள்ளனர்.


இதனால், தனியார் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் பெற்றோர்கள் சேர்த்து வருகின்றனர். அதன்படி கடந்த ஆண்டு 3,293 மாணவ, மாணவிகள் தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்தனர்.இந்த ஆண்டு இன்னும் கூடுதலாகும். இதற்காகவே இந்த ஆண்டு பள்ளிகளுக்கு கூடுதலாகவே பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் வருகை அரசு பள்ளிகளை நோக்கி அதிகரிப்பதால் அவர்களுக்கு தரமான கல்வியை கற்றுத்தர பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2 comments:

  1. முதலில் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்

    ReplyDelete
  2. 8வருசம் ஆச்சு இன்னும் பணிநியமணம் இல்லை...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி