வீட்டில் இருந்தபடியே எந்த நேரத்திலும் படிக்கும் புதிய முறை இணையவழி சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான பயிற்சி சைதை துரைசாமியின் மனிதநேய மையம் தொடங்குகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 12, 2021

வீட்டில் இருந்தபடியே எந்த நேரத்திலும் படிக்கும் புதிய முறை இணையவழி சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான பயிற்சி சைதை துரைசாமியின் மனிதநேய மையம் தொடங்குகிறது.

 

மனிதநேய அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் சைதை துரைசாமியின் மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்பட சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான தேர்வுகளுக்கும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் பல்வேறு தேர்வுகளுக்கும் இலவச பயிற்சியை அளித்து வருகிறது.


நேரடி பயிற்சி வகுப்புகள், கல்லூரி மாணவர்களுக்கான அடிப்படை பயிற்சி வகுப்புகள், காணொலி மாதிரி நேர்முகத்தேர்வு பயிற்சிகளை தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் தொலைக்காட்சி வழி பயிற்சி வகுப்புகளை தொடங்கியது.


அதனை பார்த்து பயன்பெற்ற பல்லாயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் ஐ.ஏ.எஸ். தேர்வுகள் தரத்தில் தரமான நேரடி வகுப்புகளை போன்று இணையதள வழியில் முழுமையான வகுப்புகளை, பயிற்சி வகுப்புகளின் தன்மையோடும், தரத்தோடும் வடிவமைத்து கொடுத்தால் மேலும் சிறப்பாக இருக்கும் எனவும், அதற்கேற்ப அடுத்தநிலை பயிற்சியையும் அமைத்து கொடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.


தொலைக்காட்சி மூலமாக நடத்தப்பட்ட வகுப்புகள் வாரநாட்களில் குறிப்பிட்ட ஒருமணி நேரத்தில் மட்டுமே நடத்தப்பட்டது. இதனால் போட்டித் தேர்வுகளுக்கு தயார்செய்துவரும் அனைத்து தரப்பு மாணவ-மாணவிகளும் பயன்பெறமுடியாத நிலை உருவானது. பணியிலிருப்போர் பெரிதும் இந்த வாய்ப்பை இழந்ததாக வருத்தம் தெரிவித்தனர்.


இதனை கருத்தில் கொண்டு, மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, இப்போது அதே முறையில், அடுத்ததாக இன்னும் சற்று மேன்மைவாய்ந்த, தகவல் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்ட இணையதள வகுப்புகளை, இப்போது ஐ.ஏ.எஸ். தேர்வுகளின் பாடத்திட்டத்தை முழுமையாக வடிவமைத்து, பாடங்களை நேரடி வகுப்புகளில் கவனிப்பது போன்ற உணர்வு ஏற்படும் வகையில் ‘‘புதிய முறை இணையவழி ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்புகளை’’ இந்தியாவிலேயே முதல் முறையாக மனிதநேயம் ஐ.ஏ.எஸ். இலவச கல்வி மையம் வடிவமைத்து இருக்கிறது.


தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் பங்களிப்புடன் இந்த வகுப்புகளை எந்த நேரத்திலும் கவனிக்கவோ, பார்க்கவோ முடியும். விரைவில் இந்த பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.


இந்த பயிற்சி வகுப்புகள் மாணவ-மாணவிகளுக்கு ஏற்படும் தேவையற்ற செலவுகளை தவிர்ப்பதற்காகவும், உரிய பயிற்சியை அளிப்பதாகவும் இருக்கும். இணையவழியில் நடத்தப்பட உள்ள இப்பயிற்சி வகுப்புகளில், இளநிலை பட்டம் முடித்தவர்கள், முதுநிலை பட்டம் முடித்தவர்கள், பணியிலிருப்போர் மட்டுமின்றி, கல்லூரியில் படிக்கும் (முதலாம், 2, 3 மற்றும் இறுதியாண்டு) மாணவர்கள்கூட கல்லூரி படிக்கும் காலத்திலேயே ஐ.ஏ.எஸ். பயிற்சியையும், இதன்மூலம் சிரமமின்றி பெறும் வகையில் இணையவழி வகுப்புகள் நடத்தப்பட இருக்கின்றன.


மேலும் தமிழ் வழியில் ஐ.ஏ.எஸ். தேர்வுகளுக்கான இதே பயிற்சியும் இணையவழியில் விரைவில் தொடங்கப்பட உள்ளது. ஓரிரு மாதங்களில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும். யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீசஸ் தேர்வுகள் மட்டுமின்றி, தமிழ்நாட்டில் டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வுகளுக்கும் இந்த இணையவழி பயிற்சி வகுப்புகள் பயனுள்ளதாக இருக்கும்.


அடுத்தகட்டமாக பதிவுசெய்துகொள்ளும் மாணவ-மாணவிகளுக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு, உரிய முழுமையான பாடத்திட்ட அடிப்படையிலான வகுப்புகளும் முழுவீச்சில் நடத்த முயற்சி செய்யப்பட்டு வருகிறது.


இந்த புதிய முறை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், மனிதநேய இலவச கல்வி மையத்தின் www.mntfreeias.com என்ற இணையதளத்தில் தங்களுடைய சுயவிவரங்களை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும்.


பதிவுசெய்துகொள்ளும் மாணவர்கள் அனைவருக்கும் இ-மெயில் வாயிலாக ‘‘யூசர்ஸ் ஐ.டி., பாஸ்வேர்டு’’ அனுப்பப்படும். அதனை உபயோகித்து இப்பயிற்சிக்கான வகுப்புகளில் பங்குபெறமுடியும்.


கொரோனா காலத்தில் மாணவர்கள் பாதுகாப்பாகவும், செலவினங்கள் இல்லாமலும் வீட்டில் இருந்தபடியே தரமான பயிற்சியை பெறவும், தொலைக்காட்சி வகுப்புகளை கவனிக்க முடியாமல் வாய்ப்பை தவறவிட்ட மாணவர்கள் எளியமுறையில் பயிற்சியை பெறவும் இந்த புதியமுறை இணையவழி பயிற்சி வகுப்புகள் வழிசெய்கிறது.


மேற்கண்ட தகவலை மனிதநேய அறக்கட்டளையின் தலைவர் சைதை துரைசாமி தெரிவித்தார்.

1 comment:

  1. Tnpsc Group 1 mains full materials with test paper available at low cost.contact 9500397490

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி