கல்லூரிகளுக்கு கூடுதல் கௌரவ விரிவுரையாளர்கள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 21, 2021

கல்லூரிகளுக்கு கூடுதல் கௌரவ விரிவுரையாளர்கள்!

 அரசு கல்லூரிகளில் கூடுதல் கௌரவ விரிவுரையாளர்களை நியமிக்கக்கோரிய கல்லூரிக் கல்வி இயக்க இயக்குநரின் கடிதத்திற்கு நிதி மதிப்பீடு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது குறையத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. விரைவில் தமிழ்நாட்டிலும் கல்லூரிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றன. கொரோனா தொற்றால் பொருளாதார பாதிப்பு அதிகமாக ஏற்பட்டதன் காரணமாக பல்வேறு தரப்பினர் அரசு கல்வி நிறுவனங்களை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.


இதன் காரணமாக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியாற்ற கௌரவ விரிவுரையாளர்கள் தேவை அதிகரித்துள்ளது என அரசுக்கு, கல்லூரிக் கல்வி இயக்ககம் கடிதம் எழுதியுள்ளது. இதன் மூலம் 150 கல்லூரிகளில் பணியாற்ற கூடுதலாக 1,020 கௌரவ விரிவுரையாளர்கள் தேவை என குறிப்பிட்டுள்ளது. தற்போது ஏற்கனவே 2,423 கௌரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.


இந்நிலையில், 2,423 பேருடன் கூடுதலாக 1,020 சேர்த்து மொத்தம் 3,443 கௌரவ விரிவுரையாளர்களை நடப்பு கல்வியாண்டில் பணியமர்த்த என்ன தேவை ஏற்பட்டுள்ளது? அதற்கான நிதி மதிப்பீடு எவ்வளவு? என்பது குறித்து ஜூலை 23-ஆம் தேதிக்குள் தெரிவிக்க கல்லூரிக் கல்வி இயக்ககத்துக்கு உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நடப்பு ஆண்டிலும் அதிகளவிலான மாணவர்கள் சேருவார்கள் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளதால், அதற்கேற்ப, 11 மாத காலத்துக்கு கூடுதல் கௌரவ விரிவுரையாளர்கள் தேவை என்று அரசுக்கு கல்லூரிக் கல்வி இயக்குநர் பூரணசந்திரன் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி