செப்.26ஆம் தேதி 3ஆவது மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 23, 2021

செப்.26ஆம் தேதி 3ஆவது மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 

தமிழகம் முழுவதும் செப்.26ஆம் தேதி மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 


சென்னை மருத்துவக் கல்லூரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 12, 19 ஆகிய நாட்களில் இரண்டு மிகப் பெரிய மருத்துவ முகாம்கள் மூலம் தமிழக முழுவதும் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, பொதுமக்கள் சாரை சாரையாக வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டு, இதை தடுப்பூசி திருவிழாவாகவே நடத்தினர்.


கடந்த 12ஆம் தேதி 20 லட்சம் தடுப்பூசிகள் இலக்கு என்று நிர்ணயிக்கப்பட்டு 21 லட்சத்து 98 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 19ஆம் தேதி நடைபெற்ற தடுப்பூசி முகாம் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 16 லட்சத்து 43 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 


கடந்த இரண்டு நாட்களாக தடுப்பூசிகள் வரவில்லை. முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதுவதன் மூலம், துறையின் செயலாளர் மூலம் மத்திய அரசின் உயரலுவலர்களை சந்திக்க வைத்து தமிழகத்தின் தடுப்பூசித் தேவைகளை வலியுறுத்தும் தொடர் நடவடிக்கைகளினால் நேற்று 5 லட்சம் தடுப்பூசிகள் வரப்பெற்றுள்ளது. திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவை மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க அனுப்பியதன் விளைவாக, முதல்வரின் கோரிக்கை ஏற்கப்பட்டு இன்று மாலைக்குள் 14 லட்சம் தடுப்பூசிகள் வரவிருக்கின்றன. 


இந்தத் தடுப்பூசிகளை வைத்து ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம் 20 ஆயிரம் முகாம்கள் மூலம் 15 லட்சம் தடுப்பூசிகள் செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நான் மற்றும் மருத்துவ அலுவலர்கள் திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம், கடலூர் போன்ற மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வு செய்ய இருக்கிறோம். டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் கடந்த 2020ஆம் ஆண்டில் 2,410 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். டெங்குவிற்கான பரிசோதனைகள் என்பது 26 ஆயிரம் பேருக்கு மட்டுமே எடுக்கப்பட்டிருந்தது.


ஆனால் இப்போது 2021ஆம் ஆண்டில் கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரை 9 மாதங்களில் படிப்படியாக மாதம் தோறும் உயர்ந்து 2,733 பேர் டெங்குவினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதற்கான பரிசோதனைகள் என்பது கடந்த ஆண்டை விட மூன்று மடங்கு அளவிற்கு 76 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வழக்கமாக மழைக்காலங்களில் கொசுவின் பெருக்கம் என்பது இருந்துகொண்டிருக்கிறது. தற்போது அதனைக் கட்டுப்படுத்த கொசு மருந்து தெளிப்பது, புகை மருந்து அடிப்பது, அபேட் போன்றவை உள்ளாட்சி நிர்வாகத்தோடு, மருத்துவத்துறையும் இணைந்து செய்துவருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி