கல்வித்துறையின் கீழ் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள் இணைப்பு அவசியமானது - சிறப்பு கோரிக்கை - kalviseithi

Sep 16, 2021

கல்வித்துறையின் கீழ் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள் இணைப்பு அவசியமானது - சிறப்பு கோரிக்கை

 

இந்தியாவில் நூற்றாண்டுகளுக்கு முன்னர் கல்வி கற்கும் வாய்ப்புகள் எல்லாத் தரப்பினருக்கும் கிடைக்காத அக்காலத்தில் ஒடுக்கப்பட்டோர் கல்வி கற்க வித்திட்டவர் சுவாமி சகஜானந்தா. அவர் ஒடுக்கப்பட்டோர் சமூக மேம்பாட்டில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொண்டார் . ஒடுக்கப்பட்டோர் கல்வி மேம்பாட்டிற்காக சிதம்பரத்தில் 1916 - ல் நந்தனார் மடமும் , நந்தனார் கல்விக் கழகத்தையும் தொடங்கினார்.அக்கழகத்தின் சார்பாக 1917 அன்று நந்தனார் பள்ளியை ஆரம்பித்தார்.


தொடங்கும்போது மண் கட்டிடமும் கூரையும் மட்டுமே இருந்தன . அன்றைய நாளில் கல்வி கற்பத்திலிருந்து விலகிருந்த கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று குழந்தைகளை அழைத்துவந்து பள்ளியில் சேர்த்தார். வாய்ப்புகள் இல்லாமல் இருந்த அம்மக்களுக்கு கல்வி கற்பிப்பது மிகப்பெரிய சவாலாக ருந்தது . தொடர்ந்து கல்வியை வழங்க அதற்கான பொருளாதார நெருக்கடியும் , சமூக சூழலும் மிகப் பெரிய நெருக்கடியை உருவாக்கியது.


ஆனாலும் பல்வேறு போராட்டங்களுக்கு இடையே சிதம்பரத்தில் அவர் தொடங்கிய கல்வி நிறுவனம் நூற்றாண்டை கடந்து இன்றும் பெயரளவில் செயல்பட்டு கொண்டிருக்கின்றன . அக்காலத்தின் மிஷனரி பள்ளிகள் , பஞ்சமர் பள்ளிகள் , தலித் முன்னோடிகள் என ஒரு சில பள்ளிகள் மிகச் சிறிய அளவிலேயே ஒடுக்கப்பட்டோருக்கான கல்வி வாய்ப்புகளை உருவாக்க இருந்தன.


1920 - க்கு பின்னர் ஆங்கில அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட தொழிலாளர் நலத்துறை இம்மக்களுக்கான கல்வி வழங்க யோசிக்கத் தொடங்கியிருந்தது . அதுவும் சென்னை போன்ற நகர மக்களுக்கு மட்டுமே கல்வி வழங்க திட்டமிட்டிருந்தது . பின்னர் சில கிராமங்களிலும் பள்ளிகள் தொடங்கப்பட்டது.


அப்பள்ளிகள் தொழிலாளர் பள்ளிகள் , ஹரிஜன பள்ளிகள் என அழைக்கப்பட்டு 1960 - க்கு பின்னர் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் என உருமாற்றம் பெற்றது. நூற்றாண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இப்பள்ளிகளின் இன்றும் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இன்று இப்பள்ளிகள் வெவ்வேறு வாய்ப்புகளோடு வலுவான நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் செயல்பட்டு மாநிலத்தின் தரமான கல்வி நிறுவனங்களாக வளர்ந்திருக்குமானால் , அவைகள் ஒடுக்கப்பட்டோருக்கான முன்னோடி நிறுவனமாக மாறியிருக்கும் . ஆனால் , பல்வேறு காரணங்களால் இப்பள்ளிகளில் பின்தங்கி பல இடங்களில் மாணவர்களின்றி மூடும் நிலையில் இருக்கிறது.


தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள் 1,136 உள்ளன. இதில் தொடக்கப் பள்ளிகள் 836. நடுநிலைப் பள்ளிகள் 96. உயர்நிலைப் பள்ளிகள் 117 . மேல் நிலைப் பள்ளிகள் 87 ஆகும். ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்த நிலையில். இப்பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் மாநிலம் முழுவதும் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது.இப்பள்ளிகளில் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்னவென்றால் இத்துறையின் நிர்வாக கட்டமைப்பே முதன்மையான காரணமாகும்.


இதன் அமைப்பு கல்வித்துறைகையின் அமைப்புக்கு தலைக்கீழாக உள்ளது. இப்பள்ளிகளை மாவட்ட அளவில் கட்டுப்படுத்தும் அலுவலராக மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரும் அவருக்கு கீழ் இரண்டு , மூன்று வட்டங்களை சேர்த்து ஒரு தனிவட்டாசியர் உள்ளனர் . இப்பள்ளிகளுக்கான ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் முழுவதும் நிர்வாக பயிற்சி அலுவலர்களே தவிர கல்வி தொடர்பான எந்த பயிற்சியும் கிடையாது. அவர்களுக்கு வருடம் முழுவதும் வருவாய்த்துறை தொடர்புடைய திட்டங்களை செயல்படுத்தவே நேரங்கள் போதுமானதாக உள்ளது.


மாறிவரும் காலச் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் புதிய புதிய கல்விக் கொள்கைகளை நடைமுறைப் படுத்தி வரும் அரசாங்கம் . ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகள் செயல்படும் நிர்வாக முறையை மாற்றாமல் , பழைமையான ஆங்கிலேயர் ஆட்சியின் முறையினையே பின்பற்றிவருவது பள்ளிகளின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக உள்ளது. கல்வித்துறை கட்டமைப்பானது ஆணையர் , கல்வித்துறை செயலாளர் கல்வி இயக்குனர் , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் , மாவட்ட கல்வி அலுவலர் , வட்டார கல்வி அலுவலர் என்ற கட்டமைப்பில் அனைவருக்கும் கல்வி இயக்கம் ஆகியவைகளை இணைந்து அதிக அளவிலான நிதியையும் ஒதுக்கீடுப் பெற்று தனித் துறையாகச் செயல்பட்டு வருகின்றது.


கல்வித்துறையை போல மாநில , மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆதிதிராவிட நலப்பள்ளிகளில் நியமிக்கப் படுவதில்லை . இவற்றைக் கண்காணிக்கும் பொறுப்பு கல்வித் துறைக்கும் உண்டென்றாலும் , முழுமையான அதிகாரங்கள் ஆதிதிராவிடர் நலத்துறையை சார்ந்த அலுவலர்கள் மட்டுமே உள்ளது . இது இரட்டை நிர்வாகமாக உள்ளது . இப்பள்ளிகள் அமைவிடம் , சூழ்நிலை , மாணவர்களின் கற்றல்திறன் , ஆசிரியர்களின் கற்பத்தில் திறன் என பல காரணங்களால் இப்பள்ளிகள் பின்னோக்கிய நிலையில் இருக்கிறது. 


ஆதிதிராவிட நலப் பள்ளிகளும் அவற்றோடு இணைந்த உண்டு உறைவிட விடுதிகளும் , சமூகத்தின் விளிம்பு நிலை மாணவ , மாணவிகளின் முன்னேற்றத்துக்குப் ஏற்றதாக இல்லை . சமூகத் தளத்தின் ஆதிதிராவிட , பழங்குடியின சமூகங்களின் கல்வி மேம்பாட்டுக்கு , அரசியலமைப்புச் சட்டங்கள் உறுதியளிக்கின்றன . ஆனால் இப்பள்ளிகளிலும் , விடுதிகளிலும் , கட்டமைப்புகள் , பராமரிப்பு , மேற்பார்வை , மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு , கல்வி ஊக்கத்தொகை உள்பட எல்லாவற்றிலும் உச்சகட்ட அலட்சியமும் , அதிகபட்ச வெளிப்படையான ஊழல் கொள்ளையும் பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. ஆசிரியர் தேர்வாணையம் மூலமாக ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும்போது , தரவரிசைப் பட்டியலில் முன்னிலையில் இருப்பவர்கள் பொதுவாக அரசுப் பள்ளிகளுக்கும் , கடைசியில் எஞ்சியவர்கள் , ஆதிதிராவிட , பழங்குடியினர் நலப்பள்ளிகளுக்கும் தெரிவு செய்யப்படும் மோசமான பாகுபாடு நடைமுறையில் கடைப்பிடிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இப்பள்ளிகளும் , விடுதிகளும் கல்வித்துறை தொடர்போ , அனுபவமோ இல்லாத வருவாய்த் துறை அதிகாரிகள் , ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்கள் ஆகியோரின் அதிகாரத்துக்குள் வருவதால் , அவர்களுக்கும் , பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் நடுவில் புரிதல் இல்லாமல் இருப்பது வெளிப்படையானது. ஆண்டுக்கு ஒரு முறைகூட இப்பள்ளிகள் மாவட்ட அலுவலர்களாலோ , வட்டாட்சியர்களாலோ ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதில்லை . அதிகாரிகள் கல்வியை மேம்படுத்தும் ஆக்கபூர்வமான செயல்களைச் செய்யாமல் ஆசிரியர்களுக்குத் தண்டனை வழங்குதல் ஆகிய அதிகாரங்களைக் கோலோச்சுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. எல்லா அதிகாரங்களும் இத்துறை அலுவலர்களிடமும் உள்ளதால் , இவர்களுடன் இணைந்தோ , இவர்களைத் தாண்டியோ , கல்வித் துறை அதிகாரிகளால் கல்விசார்ந்த நடவடிக்கைகளை இப்பள்ளிகளுக்குள் கொண்டுபோய்ச் சேர்க்க முடிவதில்லை . இத்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியகள் போல எளிதில் வேறு பள்ளிக்கு மாறுதலாக முடியாது . மாவட்ட அளவில் குறைவான பள்ளிகளே உள்ளதால் இவர்கள் ஒரே பள்ளியில் 10 ஆண்டு முதல் 30 ஆண்டுகள் வரை பணியாற்ற வேண்டும்.இவர்கள் கல்வித்துறைப்பள்ளிகளுக்கு மாறுதலில் செல்ல முடியாது.


பெரும்பாலான ஆசிரியர்கள் என இத்துறையில் பதவி உயர்வு வாய்ப்பு குறைவு மன உளச்சளோடு பணி செய்கின்றனர்.மேலும் இவர்கள் விடுதியிலும் காப்பளராக பணி செய்யலாம் என்ற நிலை உள்ளதால் பலர் விடுதியில் பணியாற்ற சென்று விடுகின்றனர். இதனால் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்படுகிறது இந்நிலையில் எல்லோருக்கும் தரமான , சமச்சீரான , கட்டாயக் கல்வியை வழங்கும் சமத்துவமான பொதுப்பள்ளி முறையே சிறந்ததாக விளங்குவதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் தமிழகத்தில் கல்வி கற்பிப்பதில் பெரிய சமத்துவமின்மை தொடர்கிறது.


இந்தப் பின்னணியில் , இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் , நலப்பள்ளிகள் என்ற பெயரில் தமிழகம் முழுவதிலும் , கள்ளர் சீரமைப்புப் பணித் திராவிடர் என்ற பெயரில் மதுரை , திண்டுக்கல் , தேனி மாவட்டங்களிலும் , ஜாதி , இனம் வாரியாகப் பெயரிட்டு அரசே நடத்துவது என்ன பயன்தரும் ? இந்த மாணவ , மாணவிகளுக்கு வேண்டிய உதவித் திட்டங்கள் தொடரவேண்டியது அவசியம் . ஆனால் , தனிப் பள்ளிகளாகவே தொடர்வது ஆரோக்கியமானதா என்பதைப் பரிசீலனைக்கு உள்படுத்த வேண்டியது அவசியம். ஆதிதிராவிடர் நலப்பள்ளி , கள்ளர் ரீதியாக ஆசிரியர்களுக்கும் , மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் யாரும் சிந்திப்பதில்லை. இப்பள்ளிகளை , நலத்துறைகளிலிருந்து விடுவித்து , மற்ற அரசுப் பள்ளிகளைப் போல , கல்வித்துறையின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தால் பள்ளிகளின் தரம் உயர வாய்ப்புள்ளது . விடுதிகளைப் பொறுத்தவரையில் ஊழல்களின் உச்சபட்ச இடமாக திகழ்கின்றன.


இன்றைய காலகட்டத்தில் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் , விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன . இலவச மதிய உணவு முழுமையாக வழங்கப்படுகிறது . குடிசைவீடுகளுக்கு இலவச மின்சாரம் உள்ளது . இவ்வகைக் காரணங்களால் , பள்ளி மாணவ , மாணவிகள் விடுதிகளில் தங்கிப்படிக்க விரும்புவதில்லை . பல விடுதிகளில் மிக மிகக்குறைவானவர்களே தங்கிப் படிக்கின்றனர். சனி , ஞாயிற்றுக்கிழமைகளில் எல்லோருமே வீடுகளுக்குப் போய் விடுகின்றனர் . ஆனாலும் பொய்யான ஆவணங்களைத் தயாரித்து , மாணவர்களின் போலியான வருகை காட்டி பங்கு போட்டுக் கொள்ளும் ஒரே வேலைதான் பெரும்பாலான மாணவர் விடுதிகளில் நடைபெற்று வருகிறது. எனவே , அவசியமான ஒரு சில ஆதிதிராவிட நலத்துறை விடுதிகளையும் , பிற்பட்டோர் நலத்துறையின்கீழ் வரும் விடுதிகளையும் மட்டும் ஒருங்கிணைத்து , பொது மாணவர் விடுதிகளாக மாற்றுவது நல்லது.


இதனால் அரசின் பலகோடி ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டு வேறுசில மக்கள் நல திட்டத்திற்கு நிதி கிடைக்கும்.மாணவர்களுக்கிடையில் புரிதலும் , ஜாதி தாண்டிய நட்பும் ஏற்படும் . நீட் போன்ற தேர்வுகள் வந்த பின்னர் இட ஒதுக்கீட்டையும் தாண்டி ஆதிதிராவிட மாணவர்களுக்கும் , பிற்படுத்தப்பட்ட , மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் இடையில் சமூக அளவிலும் , கல்வி , வேலை வாய்ப்பு அளவிலும் ஒரே மாதிரியான எதிர்காலச் சவால்களே காத்திருக்கின்றன . இப்பள்ளிகளை கல்வித் துறையோடு இணைப்பதற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். தமிழகம் முழுவதும் 20.1 சதவீத ஆதிதிராவிட் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பள்ளிகள் ஆதிதிராவிடர்களின் நலனுக்காவே தொடங்கியதென்றால் மாநிலத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர்கள் வசிக்கும் கிராமங்கள் தோறும் நலப்பள்ளிகளை துவங்கியிருக்க வேண்டும். ஆனால் 1136 பகுதிகளில் மட்டும் தான் ஆதிதிராவிட பள்ளிகள் உள்ளன , மற்ற கிராமங்களில் பொது கல்வித்துறைப்பள்ளிகள் தான் ஆதிதிராவிட மக்களுக்கு சேவை வழங்கி வருகிறது.


கலப்பு திருமணத்தை ஆதரிப்பவர்கள் பல்வேறு நிர்வாக குளறுபடிகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆதிதிராவிடர் பள்ளிகளை ஒரு பொதுவான கல்வி துறையொடு இணைந்தால் அதற்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.


அப்படியானால் அவர்கள் கிராமங்கள்தோறும் ஆதிதிராவிட மக்களுக்கான கல்வி நிறுவனத்தை உருவாக்கிய போராடியிருக்க வேண்டும் . அவர்கள் ஒப்பீட்டளவில் நூறு ஆண்டுகளாக செயல்பட்டு கொண்டிருக்கும் இப்பள்ளிகளின் நிலைமை என்னவென்று அறியவேண்டும். இன்றைய காலகட்டத்தில் எந்த பள்ளிக்கும் ஒரு சிறப்பு அந்தஸ்து என்பது கிடையாது ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது முதல் மாணவர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்குவது வரை அனைவருக்கும் கல்வி இயக்கமும் கல்வித்துறையும் இணைந்து பெரும்பாலான கல்விப் பணிகளை செயல்படுத்துகின்றன.


EMIS என்ற கல்வித் மேலாண்மை தகவல் முறையில் அனைத்து வகை பள்ளிகளில் ஆசிரியர்களின் விபரங்களும் , பள்ளியின் விபரங்களும் மின்னணு முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.ஒரு காலக்கட்டத்தில் கல்வி கற்பிப்பதில் தீண்டாமை இருந்திருக்கலாம் ஆனால் தற்போது அந்த நிலைமை மாறி விட்டது. ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு என்ற நிலை வந்த பிறகு ஆசிரியர் வேலை கிடப்பதே குதிரைக்கொம்பாக மாறி விட்ட நிலையில் நான் ஆசிரியரான பின்பு ஒரு குறிப்பிட்ட சாதி மாணவர்களுக்குதான் கல்வி கற்பிப்பேன் என யாரும் கூற முடியாது . இதுபோன்ற சூழ்நிலைகளில் இனியும் அரசு காலதாமதம் செய்யாமல் இப்பள்ளிகளின் நலன் கருதி பொதுபள்ளிகளோடு இணைத்திட வேண்டும்.

3 comments:

  1. No transfer counseling for adw teachers last 6 years....

    ReplyDelete
  2. 2015 & 16 batches adw sgt working without transfer counseling....

    ReplyDelete
  3. Superb... Definitely merge school education...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி