கலை, அறிவியல் கல்லூரிகளில் நிகழ்ச்சிகளை நடத்த முன் அனுமதி: அனைத்துக் கல்லூரிகளுக்கும் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 3, 2021

கலை, அறிவியல் கல்லூரிகளில் நிகழ்ச்சிகளை நடத்த முன் அனுமதி: அனைத்துக் கல்லூரிகளுக்கும் உத்தரவு.

 

கலை, அறிவியல் கல்லூரிகளில் கருத்தரங்கம், கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு முன் அனுமதி பெறவேண்டும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா பாதிப்பு காரணமாக மூடப்பட்ட கல்லூரிகள் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நேற்று (செப்.1) திறக்கப்பட்டன. இந்நிலையில், கல்லூரிகளில் கருத்தரங்கு, கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்துவது தொடர்பாகப் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாகக் கல்லூரிக் கல்வி இயக்குநர் சி.பூர்ணசந்திரன்  அனைத்துக் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''கரோனா பாதிப்புக்கிடையே தமிழக அரசு வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி நேற்று முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளின் வளாகத்துக்குள் கலாச்சார நிகழ்ச்சிகள், கருத்தரங்கம் உள்ளிட்ட அதிகமான நபர்கள் கூடும் நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தக் கூடாது என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளைக் கல்லூரி வளாகத்துக்குள் நடத்த இயக்குநரகத்தின் முன் அனுமதி பெறவேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது இந்தச் சுற்றறிக்கை மூலம் சுட்டிக்காட்டப்படுகிறது.

எனவே, கல்லூரிக் கல்வி மண்டல இணை இயக்குநர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் முன் அனுமதியுடன் நடைபெறும் நிகழ்ச்சிகளின் விவரங்களை இயக்கத்துக்கு உடனே அனுப்ப வேண்டும்''.

இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் மாணவர்களுடன் உரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாகவே, அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளில் நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தக் கூடாது என்றும், தவிர்க்க முடியாத நிகழ்ச்சிகளுக்கு முன் அனுமதி பெறவேண்டும் எனவும் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைச் சுட்டிக்காட்டி கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி