பள்ளி மாணவர்களிடையே இளம் விஞ்ஞானிகளைத் தேடும் அறிவியல் திறனறித் தேர்வு: அக்.31க்குள் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 22, 2021

பள்ளி மாணவர்களிடையே இளம் விஞ்ஞானிகளைத் தேடும் அறிவியல் திறனறித் தேர்வு: அக்.31க்குள் விண்ணப்பிக்கலாம்

 மாணவர்களிடையே இளம் விஞ்ஞானிகளைத் தேடும் அறிவியல் திறனறித் தேர்வு வரும் நவம்பர் 30, டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இத்தேர்வில் பங்கேற்க வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், விபா நிறுவனம்,என்சிஇஆர்டி இணைந்து, பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வுத் தேர்வை நடத்தி வருகிறது. இத்தேர்வு இந்தியாமுழுவதும் செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இணைய வழியில் நடைபெறும். இளம் விஞ்ஞானிகளைத் தேடும் இத்தேர்வை ஸ்மார்ட் போன், டேப்லெட், மடிக்கணினி மூலம் ஆன்லைனில் தங்கள் வீடுகளில் இருந்தே எழுதலாம். தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற பிராந்திய மொழிகளிலும் எழுதலாம்.


இந்தத் தேர்வு குறித்து வித்யார்த்தி விஞ்ஞான் மந்தனின் மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், புதுவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண் நாகலிங்கம் மற்றும் காரைக்கால் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தட்சணாமூர்த்தி ஆகியோர் கூறுகையில் "பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டவும் புதிய கண்டுபிடிப்புகளில் அவர்கள் ஈடுபட வழிகாட்டவும் இந்தத் தேர்வு மிகவும் உதவியாக இருக்கும். ஆறாவது வருடமாக இந்தாண்டு தேர்வு நடைபெறுகிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் அறிவியல் விஞ்ஞானிகளுடன் உரையாடுவதற்கும் அவர்களுடன் சில செயல்பாடுகளில் ஈடுபடவும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறது.

வரும் அக்டோபர் 31 வரை ரூ.100 செலுத்தித் தனியாகவோ அல்லது பள்ளி மூலமாகவோ www.vvm.org.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். இந்த ஆண்டிற்கான தேர்வு நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இத்தேர்வில் 6 முதல் 11-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பங்குபெறலாம். 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஒரு பிரிவும் 9 முதல் 11 வகுப்பு வரையிலான மாணவர்கள் மற்றொரு பிரிவாகவும் பிரிக்கப்படுவர். தேர்வுக்கு முன்னர் இரண்டு மாதிரித் தேர்வுகள் நடைபெறும். மாணாக்கர்கள் வார இறுதி நாள்களில் அவற்றை எழுதிப்பார்க்கலாம்.

மாணவர்கள் தேர்வில் பெறும் மதிப்பெண்ணின் அடிப்படையில் பரிசு மற்றும் சான்றிதழ் அளிக்கப்படும். குறிப்பாக, மாவட்ட அளவில் (6 முதல் 11-ம் வகுப்பு வரை) ஒவ்வொரு வகுப்புக்கும் 3 பேர் வீதம் 18 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். மண்டல அளவில் தேர்ச்சிப் பெற்றவர்கள் அருகில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.


மாநில அளவில் ஒவ்வொரு வகுப்பிலும் 20 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு 120 பேர் இரண்டாம் கட்டத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். அத்தேர்வு செயல்முறை வடிவில் அமைந்திருக்கும். இதில் தேர்வு செய்யப்படும் 120 மாணாக்கர்களுக்கும் சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கப்படும். 120 மாணவர்களில் வகுப்புக்கு 3 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு, ரொக்கப்பரிசாக முறையே ரூ.5000, ரூ.3000, ரூ,2000 வழங்கப்படும்.

தேசிய அளவிலான ஓர் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மாநில அளவில் தேர்வு பெறும் மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுவர். தேசிய அளவிலான தேர்வுக்கு ஒவ்வொரு வகுப்பிலும் ( 6 முதல் 11-ம் வகுப்பு வரை) மாநில அளவில் முதல் 2 இடங்களைப் பெறும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவிலான முகாமிற்கு அழைக்கப்படுவார்கள். தேசிய அளவில் கலந்து கொள்பவர்களுக்குச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்படும்.

தேசிய அளவிலான முகாமில் நடைபெறும் பல்வேறு வகையான அறிவியல் சார் நிகழ்வுகளில் பங்கேற்பர். அதில் சிறப்பாகத் திறமைகளை வெளிப்படுத்திய மாணாக்கர்களில் ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் 3 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டுச் சான்றிதழ்கள், கேடயங்கள் மற்றும் முதல், இரண்டாம், மூன்றாம் இடம் பெறும் மாணவர்களுக்கு முறையே ரூ.25,000, ரூ.15,000, ரூ.10000 ரொக்கப்பரிசு வழங்கப்படும். தேசிய மண்டல அளவிலும் ஒவ்வொரு வகுப்பிலும் சிறப்பாகச் செய்த மாணவர்களுக்கு ரூ.5000, ரூ.3000, ரூ,2000 என ரொக்கப்பரிசு வழங்கப்படும்.

இவர்கள் தேசிய அளவிலான ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர். அனைத்து மாணாக்கர்களும் ஒவ்வொரு விஞ்ஞானி அல்லது ஆராய்ச்சியாளருடன் இணைக்கப்பட்டு அவர்கள் படிக்க, கருத்துகளைத் தெரிந்துகொள்ள வழிகாட்டப்படுவார்கள். கூடுதல் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு 9443302944 மற்றும் 9894926925 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்" என்று தெரிவித்தனர்.

3 comments:

  1. Name:Devaharshnee.s
    Email:mdu12lk023@sairamschool.edu.in

    ReplyDelete
  2. Iyasika. T
    Email Id: mdu12lk035@Sairamschool.edu.in

    ReplyDelete
  3. H.Harshini
    Mdu12lk034@sairamschool.edu.in

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி