ஆசிரியர் பணி கனவிலிருந்தவர்களின் வாழ்வே தொலைந்து விடும் - ராமதாஸ் அறிக்கை - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Oct 7, 2021

ஆசிரியர் பணி கனவிலிருந்தவர்களின் வாழ்வே தொலைந்து விடும் - ராமதாஸ் அறிக்கை

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை நீக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான அனைத்துத் தகுதிகளையும் பெற்றிருந்தும், காலத்திற்கு ஒவ்வாத கட்டுப்பாடு காரணமாக, அப்பணியில் சேர முடியாத நிலைக்கு லட்சக்கணக்கான பட்டதாரிகள் தள்ளப்பட்டிருக்கின்றனர். 42 வயதைக் கடந்தவர்கள் ஆசிரியர் பணிக்குத் தகுதியற்றவர்கள் என்ற தமிழக அரசின் புதிய கட்டுப்பாட்டால், ஆசிரியர் பணி கனவிலிருந்தவர்களின் வாழ்வே தொலைந்து விடக்கூடும்.

தமிழ்நாடு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக 2207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை ஆன்லைன் போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுப்பதற்கான அறிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி போட்டித்தேர்வுக்கு ஆன்லைனில் கடந்த மாதம் 16-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இம்மாதம் 17-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை ஆன்லைனில் தாக்கல் செய்ய இயலும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது மகிழ்ச்சியானது என்றாலும் கூட, 42 வயதைக் கடந்த பட்டதாரிகள் இதில் பங்கேற்க முடியாது என்று அறிவிக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய சமூக அநீதியாகும்.

தமிழ்நாட்டில் இதுவரை ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்படாத நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் 40 வயதைக் கடந்தவர்கள் ஆசிரியர் பணியில் சேர முடியாது என்று தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டது. அதை அப்போதே பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்த்தது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான அறிவிக்கை கடந்த மாதம் 9-ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், அடுத்த இரு நாட்களில், அதாவது செப்டம்பர் 11-ஆம் தேதியே வயது வரம்பைத் தமிழக அரசு நீக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டேன். ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு என்ற அநீதியைத் தமிழக அரசு நீக்கும் என்று ஆசிரியர் பணிக்காகக் காத்திருக்கும் பட்டதாரிகளும், கல்வியாளர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், தமிழகத்தின் அனைத்து அரசுப் பணிகளுக்குமான வயது வரம்பை 2 ஆண்டுகள் உயர்த்தி கடந்த மாதம் 16-ஆம் தேதி ஆணையிட்டதுடன் அரசு ஒதுங்கிக் கொண்டது, இது போதுமானதல்ல.

ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு நிர்ணயிப்பது எந்த வகையிலும் நியாயமல்ல. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் அதே ஆசிரியர் தேர்வு வாரியம் தான் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர்களையும் தேர்ந்தெடுக்கிறது. ஆனால், விரிவுரையாளர் பணிக்கு எந்த வயது வரம்பும் நிர்ணயிக்கப்படாத நிலையில், அதற்கு முந்தைய நிலை பணியான முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு மட்டும் வயது வரம்பு நிர்ணயிப்பது எந்த வகையிலும் நியாயமற்றது. இன்றைய சூழலில் முதுநிலைப் பட்டமும், இளநிலை கல்வியியல் பட்டமும் பெறுவதற்கே 25 முதல் 28 வயது வரை ஆகி விடும். அடுத்த 14 ஆண்டுகளில் அதிகபட்சமாக 3 அல்லது 4 முறை மட்டும் தான் முதுநிலை பட்டதாரி நியமனம் நடைபெறும். அதற்குள்ளாக அனைவருக்கும் வாய்ப்பு கிடைப்பதென்பது சாத்தியமல்ல.

உதாரணமாக, தமிழ்நாட்டில் 2011 முதல் 2020 வரையிலான பத்தாண்டுகளில் 2013, 2014, 2019 என மூன்று முறை மட்டும் தான் முதுநிலை ஆசிரியர் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் ஓய்வு பெறுகின்றனர். ஆனால், ஆண்டுக்கு ஆண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை. உயர்நிலை வகுப்புகளில் 19 மாணவர்களுக்கு ஒருவர் வீதமும், மேல்நிலை வகுப்புகளில் 27 மாணவர்களுக்கு ஒருவர் வீதமும் ஆசிரியர்கள் இருப்பதாகத் தமிழக அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இது மாநில அளவிலான புள்ளிவிவரமே தவிர, பள்ளிகள் அளவிலான புள்ளிவிவரம் அல்ல. தமிழகத்தின் பல பள்ளிகளில் 50 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் கூட இல்லாத நிலையும், 20 மாணவர்களுக்கு இரு ஆசிரியர்கள் இருக்கும் நிலையும் நிலவுகிறது. பள்ளி அளவில் 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்பது தான் மிகச்சரியான விகிதாச்சாரமாக இருக்கும்.

ஆனால், பள்ளி அளவில் சரியான விகிதாச்சாரத்தில் ஆசிரியர்களை நியமிக்காத, ஆண்டு தோறும் ஆசிரியர் நியமனம் செய்யாத அரசுக்கு ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு நிர்ணயிக்கத் தார்மீக உரிமை இல்லை. இதில் தமிழக முதலமைச்சருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. கடந்த ஆண்டு ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்ட போது அதை கடுமையாக எதிர்த்தவர்களில் அவரும் ஒருவர். ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை அகற்றுவதாக வாக்குறுதி அளித்தவர் அவர். அதனால், ஆசிரியர் பணிக்கு வயது வரம்பை அகற்ற வேண்டும் என்பதில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொள்வார்.

தமிழ்நாட்டில் முதுநிலை ஆசிரியர் பணிக்கான கல்வித் தகுதியைப் பெற்றவர்களில் லட்சக்கணக்கானோர் 42 வயதைக் கடந்தவர்கள். அடுத்த ஆள் தேர்வில் ஆசிரியர்களாகி விடலாம் என்று கடந்த ஆண்டு வரை நம்பிக் கொண்டிருந்தவர்களின் கனவை ஒற்றை ஆணையில் கலைப்பது நியாயமல்ல. எனவே, லட்சக்கணக்கான பட்டதாரிகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு நிர்ணயித்துக் கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஆணையைத் தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

21 comments:

 1. Super Dr ramdass iya avlku thanks

  ReplyDelete
 2. ஐயா உங்கள் கூட்டணி அரசு தான் இதை கொண்டு வந்தது. அன்று நீங்கள் இதை நீங்கள் எதிர்க்கவில்லை. இப்போது என்ன பயன். இதனால் பாதிக்கப்படுவது மக்களாகிய நாங்கள் தான். எல்லா அரசும் பதவிக்கு வரும் முன் நாங்கள் அதை செய்வோம் இதை செய்வோம் என்பார்கள். ஆனால் ஆட்சியில் வந்தவுடன் அவர்கள் மக்களை மறந்து விடுகிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. Andru anbu mani ramadas mattume ethirthar.old news paper paarunga

   Delete
 3. ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களின் மன குமுறல்களை எண்ண ஓட்டங்களை அறிக்கையாக வெளியிட்ட டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு மிக்க நன்றி. அரசு உடனே இதற்கு பதில்கூற வேண்டும். வயதுவரம்பு அரசாணை யை உடனே நீக்க வேண்டும்.

  ReplyDelete
 4. அரசு இந்த அரசாணையை உடனடியாக நீக்க வேண்டும். லட்சக்கணக்கான பட்டதாரிகளின் வாழ்வு சீரழியும் நிலையில் உள்ளது. இளைஞர்களின் மனநிலை பீகார் போல வடமாநிலங்கள் போல மாறும்.

  ReplyDelete
 5. Sir give teaching experience mark and employment office card weightage mark.This removed in last trb2019. This should come again. Then u give importance for age.

  ReplyDelete
 6. Super sir, please cancel age limit

  ReplyDelete
 7. Iyya neenga vera level.ur voice bold entha katchi thalaivar sollathathai neengal solluvinga
  .

  ReplyDelete
 8. வேலை பார்ப்பவனுக்கு 60 வயது. வேலை தேடுவோர் 40 வயதிலேயே செத்து போகட்டும். நல்ல ஆட்சிடா‌. 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், பிள்ளைகள், மருமக்கள் ஓட்டு கேட்டு வாங்கடா... பார்க்கலாம்

  ReplyDelete
 9. Dmk and admk goondodu aziavendum in Tamil Nadu

  ReplyDelete
 10. Youngest ku important kodunga ...28 la valiyadhadhu 42 IL valyadhu..padichu mudicha youngest Voda Kaila Tha education irruku ...idhuvara onnu pannadha avnga ini enna Panna mudiyum ...same idhay age limit politics irrudha nalla irrukum

  ReplyDelete
 11. Ayya Nam chinna Ayya CM agum nal viraivil. Ini entha katciyodum Koottani vendam.Thamilagam thalai nimirum.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி