மாணவிகளை ஆசிரியராக மாற்றும் இலவசப் பயிற்சித் திட்டம்: இந்தியாவில் முதல் முறையாக மதுரையில் அறிமுகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 2, 2021

மாணவிகளை ஆசிரியராக மாற்றும் இலவசப் பயிற்சித் திட்டம்: இந்தியாவில் முதல் முறையாக மதுரையில் அறிமுகம்

 

மாணவிகளே தன்னெழுச்சியாகக் கற்றல், கற்பித்தல் பயிற்சி பெற்று, ஆசிரியைகளுக்கு இணையாகப் பாடமெடுக்கும் திட்டம், மதுரை புதூர் லூர்தன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பிற மாணவியர்களுக்கும் பயிற்சி அளிக்கும் விதமாக மாணவியர் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

பொதுவாக வகுப்பறைகளில் பாடம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களைக் கண்டு மாணவர்கள் அச்சமடையும் சூழலால் மாணவ, மாணவியர்களே ஆசிரியர்களுக்கு இணையாகப் பிற மாணவர்களுக்கு வகுப்பெடுக்கும் வகையில் முன்மாதிரி பயிற்சித் திட்டத்தை ஜூனியர் ஐஏஎஸ் அகாடமி, புதூர் லூர்தன்னை பள்ளி நிர்வாகம் இணைந்து 3 மாதத்திற்கு முன்பு தொடங்கின. 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவிகள் 12 பேர் கொண்ட குழுவினருக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.


ஜூனியர் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் அகஸ்திய பாரதி வழிகாட்டுதலுடன், பள்ளித் தலைமை ஆசிரியர்  எஸ்.சகாயமேரி மேற்பார்வையில் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆசிரியர்களைப் போன்று பாடக்குறிப்பு எடுத்தல், ஒரு பொருளின் அனைத்துத் தகவல்களையும் சேகரித்தல், அதற்கான உதாரணங்களை மாதிரிப் படமாகக் காட்டி விளக்கமளித்தலுக்குத் தயார்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் தன்னெழுச்சி முறையில் தனக்குத்தானே தயாராகி ஆசிரியர்களே வியக்கும் வகையில் பாடமெடுக்கின்றனர். இவர்கள் மூலம் மதுரையிலுள்ள அரசு, தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கத் திட்டமிடுகின்றனர். இவர்களை அப்பள்ளி ஆசிரியை சேவியர் செல்வி ஒருங்கிணைத்து செயல்படுகிறார்.

இதுகுறித்து அகஸ்திய பாரதி  கூறும்போது, ’’மாணவர்கள் பாடங்களைத் தாங்களாகவே கற்று, குறிப்பெடுத்து, பெற்றோர் முன் பயிற்சி, கண்ணாடிப் பயிற்சி, காணொலிப் பயிற்சி போன்றவை மூலம் தானும் கற்று மற்றவர்களுக்கும் கற்பிக்கும் ஆசிரியர்களாக உருவாக்குகிறோம். இந்தப் புதுமையான கல்வியை இந்தியாவில் முதன்முறையாக மதுரையில் அறிமுகப்படுத்தியுள்ளோம். கோவை, சென்னை, நாமக்கல், கரூர்,சேலம் மாவட்டங்களிலும் இக்கல்வி முறையை அறிமுகப்படுத்துகிறோம். நேரடி வகுப்பு, ஆன்லைன், ஒன் டு ஒன் முறையிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதனால் படிப்புத் திறன், பண்பாட்டுத் திறன், விளையாட்டுத் திறன், படைப்புத் திறன் போன்ற கூடுதல் திறன்கள் மேம்படும். உணவு, உடல், நேர, மூளை, ஆளுமை மேலாண்மை, கவனமே தியானம், படிப்பே தியானம், உணவே, உடலே தியானம் என, பல்வகை தியான முறைகள், வாழ்வியல் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.

மனப்பாடமின்றி நன்கு புரிந்து, உணர்ந்து, வாழ்வியல் நடைமுறைச் செயல்பாடுகளைத் தெளிவாக அறிந்து கற்க உதவுகிறது. மேலும், இந்த மாணவிகள் பாடமெடுக்கும் நிகழ்வை யூடியூப் போன்ற சமூக வலைதளங்களிலும் வெளியிட்டு, பிற மாணவர்களுக்கு உதவுகிறோம். இதுவரை 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சமூக ஊடகங்களில் பார்த்துப் பயன்பெற்றுள்ளனர். தேவையான பள்ளிகளைத் தேடி இலவசமாகப் பயிற்சி அளிக்கத் தயாராக உள்ளோம்’’ என்று தெரிவித்தார்.

3 comments:

  1. மொத்தத்தில் ஆசிரியர் என்கிற இனத்தையே பூண்டோடு அழிக்கும் முயற்சியில் வெறித்தனமாக உள்ளார்கள். ஆசிரியர்களைப் பார்த்து மாணவர்கள் பயப்படுகிறார்களா ? எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள் ?

    இது எப்படி இருக்கிறது என்றால் +2 படித்து முடித்து மருந்து கடையில் வேலை பார்ப்பவள் எல்லாம் இனி மகத்துவராக பணியாற்றலாம் என்று சொல்வது போல உள்ளது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி