மக்கள் தங்கியுள்ள அரசுப் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 15, 2021

மக்கள் தங்கியுள்ள அரசுப் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

 

கன்னியாகுமரியில் வெள்ளம் பாதித்த பகுதி மக்கள் தங்கியுள்ள அரசுப் பள்ளிகளுக்கு நாளை (நவ. 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த 11ம் தேதி நள்ளிரவில் இருந்து தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்தது. இந்த மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்தது. தாமிரபரணி ஆறு, வள்ளியாறு, கோதையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. பழையாற்றிலும் பல்வேறு கிராமங்களை மூழ்கடித்து வெள்ளம் சென்றது. கரையோர கிராமங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. 200க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்ததால் வீடுகளில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.


கடந்த 12ம் தேதியில் இருந்து பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கின. பூதப்பாண்டி, அருமநல்லூர், தெரிசனங்கோப்பு, கடுக்கரை, நாவல்காடு, நங்காண்டி, செண்பகராமன்புதூர், தாழக்குடி, தோவாளை, கோதைகிராமம் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதே போல் சுசீந்திரம், கற்காடு, ஆஸ்ரமம், நங்கை நகர், ஆஞ்சநேயா நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் ஏராளமான குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின. நித்திரவிளை, வைக்கல்லூர், தேங்காப்பட்டணம், முஞ்சிறை, தெருவுக்கடவு, குழித்துறை, சென்னித்தோட்டம், அருமனை, ஆறுகாணி உள்ளிட்ட கிராமங்களிலும் ஏராளமான குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின. இந்த நிலையில் நேற்று பரவலாக மழை குறைந்தது. இதனால் வெள்ளம் மெல்ல, மெல்ல வடிய தொடங்கியது.

இதனிடையே இன்று குமரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் கன்னியாகுமரியில் வெள்ளம் பாதித்த பகுதி மக்கள் தங்கியுள்ள அரசுப் பள்ளிகளுக்கு நாளை (நவ. 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசித்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள 42 அரசு பள்ளிகளுக்கும், சாலைகள் சேதம் காரணமாகவும், தண்ணீர் தேங்கி மாணாக்கர்கள் பள்ளிக்குள் செல்ல இயலாத நிலையில் உள்ள 51 அரசு பள்ளிகள் உள்ளிட்ட 93 அரசு பள்ளிகளுக்கு மட்டும் நாளை (16.11.2021) விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அரவிந்த், தெரிவித்துள்ளார். விடுமுறை அளிக்கப்பட்டுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலமாக தகவல் தெரிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி