மத்திய அரசு பள்ளியில் வேலை வாங்கி தருவதாக மோசடி - kalviseithi

Dec 6, 2021

மத்திய அரசு பள்ளியில் வேலை வாங்கி தருவதாக மோசடி

 

செங்கல்பட்டு மாவட்டம் பெரிய நத்தம் கெங்கையம்மன் கோயில் தெரு பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி வேதவள்ளி. செங்கல்பட்டு அனுமந்தபொத்தேரி பகுதியை சேர்ந்த சரவணனும், லோகநாதனும் நண்பர்கள். ஆசிரியர் படிப்பு முடித்த வேதவள்ளி அரசு பள்ளி வேலைக்காக முயற்சி செய்து வந்துள்ளார். இந்நிலையில், சரவணனுக்கு, சென்னை தண்டையார்பேட்டை பிரின்ஸ் வில்லேஜ் பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவரது மகன் ரவிக்குமார் (50) என்பவரது தொடர்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, ரவிக்குமார் சரவணனிடம், ‘‘இந்தியா முழுவதும் செயல்படும்  மத்திய அரசு  பள்ளிகளான  கேந்திர வித்யாலாயா பள்ளியில் ஆசிரியர் மற்றும் அலுவலக பணிக்கு ஆட்கள் எடுப்பதாகவும், கேந்திர வித்யாலாயா பள்ளி தலைமை நிர்வாகத்தில் எனக்கு நேரடி தொடர்பு இருப்பதாகவும், யாரேனும் ஆட்கள் இருந்தால் சொல்லுங்கள்.


நான் கேந்திர வித்யாலாயா பள்ளியில், இந்தியாவில் எந்த மாநிலத்திலாவது கட்டாயமாக வேலை வாங்கி தருகிறேன். அதற்கு பணம் செலவாகும்.’’ என ஆசைவார்த்தை கூறினார். அதில் மயங்கிய சரவணன், லோகநாதனிடம் இத்தகவலை சொல்லியுள்ளார். இதை நம்பிய வேதவள்ளி  மத்திய அரசில் வேலை கிடைக்கபோகிறது என்ற கனவில் 13 லட்சத்தை சென்னை  ரவிக்குமாரிடம் கொடுத்துள்ளார். ஆனால்,  ஒரு வருடமாகியும் வேலையும் வாங்கி தராமல், பணத்தையும் திரும்ப தராமல் முறையான பதிலும் அளிக்காமல் ரவிக்குமார்  தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால்,  சந்தேகமடைந்த வேதவள்ளி செங்கல்பட்டு நகர காவல்நிலையத்தில் ரவிக்குமார் மீது மோசடி புகார் அளித்தார். அதனடிப்படையில், நகர காவல் ஆய்வாளர் விநாயகம் தலைமையில் தனிப்படை அமைத்து ரவிக்குமாரை கைதுசெய்து அவர்மீது பண மோசடி வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர். மேலும், செங்கல்பட்டில் மட்டும்  வேதவள்ளி, சரவணன் உள்பட 5க்கும் மேற்பட்டோரிடம்  சுமார் 50 லட்சம் வரை ரவிக்குமார் மோசடி செய்திருப்பதும், வேதவள்ளி தவிர மற்றவர்கள் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ரவிக்குமார் மீது புகார் அளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி