ஓய்வு ஆசிரியர்கள் மறு நியமனம்: தனி நீதிபதி உத்தரவு ஐகோர்ட்டில் ரத்து - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 28, 2021

ஓய்வு ஆசிரியர்கள் மறு நியமனம்: தனி நீதிபதி உத்தரவு ஐகோர்ட்டில் ரத்து

கல்வியாண்டின் மத்தியில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களை, மறுநியமனம் செய்ய உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.


அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர், 2019 - 20ம் கல்வியாண்டு மத்தியில் ஓய்வு பெற்றனர். கல்வியாண்டு முடியும் வரை, தங்களை பணியில் அமர்த்தக் கோரினர். மாவட்டங்களில் உபரி ஆசிரியர்கள் இருப்பதால், இவர்களின் விண்ணப்பங்களை கல்வித்துறை நிராகரித்தது.இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்தனர். 


கல்வியாண்டின் மத்தியில் விடுவித்தால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்று மனுக்களில் தெரிவிக்கப்பட்டது.மனுக்களை, உயர் நீதிமன்ற தனி நீதிபதி விசாரித்தார். கல்வித்துறையின் உத்தரவுகளை ரத்து செய்து, கல்வியாண்டு முடியும் வரை மீண்டும் பணி வழங்கும்படி உத்தரவிட்டார்.தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, பள்ளி கல்வி இயக்குனர் மற்றும் முதன்மை கல்வி அதிகாரிகள், மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.


இம்மனுக்கள், நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.விஜயகுமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன.கல்வித் துறை சார்பில், சிறப்பு பிளீடர் கே.வி.சஜீவ்குமார் ஆஜராகி, ''உபரி ஆசிரியர்கள் இல்லை என்றால், ஓய்வு பெற்ற ஆசிரியர்களை நியமிக்கலாம். ஆனால், ஆசிரியர்கள் உபரியாக இருப்பதால், ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் பணி தேவையில்லை என கல்வித் துறை உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அரசாணையின்படியே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.


இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:கடந்த 2018 டிசம்பரில், பள்ளி கல்வித்துறை பிறப்பித்த அரசாணையில், உபரி ஆசிரியர்கள் இருந்தால் மறு நியமனம் கூடாது என கூறப்பட்டுள்ளது. இந்த அரசாணையை, 'டிவிஷன் பெஞ்ச்' பரிசீலித்து ஒப்புக் கொண்டுள்ளது.


அரசாணையை எதிர்த்து மனுதாரர்கள் வழக்கு தொடரவில்லை. உபரி ஆசிரியர்கள் இருந்தாலும், தங்களை மறுநியமனம் செய்ய வேண்டும் என்ற வாதம், சட்டப்படி ஏற்புடையதல்ல. மறு நியமனம் வேண்டும் என்று உரிமையாக கோர முடியாது எனவும், டிவிஷன் பெஞ்ச் தெரிவித்துள்ளது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவில் குறுக்கிட தேவையுள்ளது. அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி